பாராட்டு மழையில் இந்திய அணி

by 9:55 AM 0 comments
உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசுகள் குவிகிறது. கேப்டன் தோனிக்கு, இதுவரை ரூ. 3 கோடி பரிசு கிடைத்துள்ளது. ரயில்வே சார்பில் வீரர்கள் அனைவருக்கும், வாழ்நாள் முழுவதும் இலவச "ஏசி பாஸ்' வழங்கப்படுகிறது. மேலும், நேற்று முன்தினம் இரவில் இருந்து நாடே வெற்றிக் களிப்பில் மிதக்கிறது.

பத்தாவது உலக கோப்பை தொடரின் பைனலில் தோனியின் தலைமையிலான இந்திய அணி, இலங்கையை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றது. இது கடந்த 1983ல் கபில்தேவ் தலைமையில் பெற்ற வெற்றிக்குப் பின் கிடைத்த வெற்றி. அதுவும், இந்திய மண்ணில் கிடைத்த வெற்றி. தோனி தலைமையில் "டீம் ஒர்க்'காக கிடைத்த வெற்றி. இந்த வெற்றிக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்தியா முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர் டிமோதி ஆர்.ரோமர் இந்திய அணியைப் பாராட்டி வெளியிட்ட செய்தியில், "இந்திய அணி கேப்டன் தோனி மிகவும் சிறப்பாக செயல்பட்டதுடன், அவருக்கு உதவியாக யுவராஜும், மற்றவர்களும் இணைந்து 28 ஆண்டுகள் கழித்து வெற்றி பெற்றிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. சச்சின் டெண்டுல்கரின் புகழ்மிக்க கிரிக்கெட் பாதையில் இது மிகவும் பெருமை தருவதாகும்' என்றிருக்கிறார்.

இந்த நிலையில், வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு மழையுடன், வீடு, கோடிகளில் பணமும் பரிசாக தரப்படுகிறது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், ஒவ்வொரு இந்திய வீரருக்கும் தலா ரூ. 1 கோடி பரிசு வழங்கப்பட்டது. தவிர, ஹுண்டாய் கார் நிறுவனம், அனைத்து வீரர்களுக்கும் தலா ஒரு கார் வழங்குகிறது.

இந்நிலையில், டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், கேப்டன் தோனிக்கு ரூ. 2 கோடியும், டில்லியை சேர்ந்த மற்ற நான்கு வீரர்கள் சேவக், விராத் கோஹ்லி, காம்பிர், ஆஷிஸ் நெஹ்ரா ஆகியோருக்கு தலா ரூ. 1 கோடி பரிசு அறிவித்துள்ளார். தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்ற யுவராஜ் சிங்கிற்கு, ஜெர்மனியின் ஆடம்பர சொகுசு கார் "ஆடி', பரிசாக வழங்கப்படவுள்ளது.


ரயில்வே "பாஸ்': ரயில்வே சார்பில், இந்திய வீரர்களுக்கு இலவச "பாஸ்' வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,"" இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும், முதல் தர "ஏசி' வகுப்பு பிரிவில், இந்தியாவின் எந்த பகுதிக்கும் சென்றுவர, வாழ்நாள் முழுவதுக்கும் இலவச "பாஸ்' வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வீரரும், கூடுதலாக ஒருவரை உடன் அழைத்துச் செல்லலாம்,'' என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.


உத்தரகண்ட் அரசு சார்பில் சச்சின் மற்றும் தோனிக்கு, முசோரி பகுதியில் வீடு அல்லது ஒரு "பிளாட்' வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர, இங்குள்ள மைதானம் ஒன்றுக்கு தோனியின் பெயர் சூட்டப்படுகிறது. இதேபோல, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும், பெங்களூரு வளர்ச்சி ஆணையம் சார்பில், அனைத்து இந்திய வீரர்களுக்கும், தலா ஒரு "பிளாட்' வீட்டுமனை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்திய அணி உலக கோப்பை கோப்பை வென்றது குறித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறுகையில்,"இந்திய அணி கோப்பை வென்றதன் மூலம், 121 கோடி மக்களின் கனவை நிறைவேறியுள்ளது. இந்த சாதனைக்கு உதவிய குஜராத்தின் யூசுப் பதான், முனாப் படேல் இருவருக்கும், ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள, மாநிலத்தின் உயர்ந்த விளையாட்டு விருது வழங்கப்படும்' என்றார்.

இதனிடையே, உலக கோப்பை வென்ற இந்திய வீரர்களுக்கு பதவி உயர்வும் அளிக்கப்படுகிறது. இதன்படி ராஞ்சி, "ஏர் இந்தியா' விமான நிறுவனத்தில் துணை மேனேஜராக இருந்த இந்திய அணியின் கேப்டன் தோனி, மேனேஜராக பதவி உயர்வு பெற்றுள்ளார். டில்லி, அமிர்தசரஸ் "ஏர் இந்தியா' அலுவலகத்தில் துணை மேனேஜராக இருந்த ரெய்னா, ஹர்பஜன் ஆகியோர் மேனேஜர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர். சண்டிகர் அலுவலகத்தில் மேனேஜராக இருந்த யுவராஜ் சிங், சீனியர் மேனேஜராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.மொட்டைத் தலை: மும்பை: நாடு முழுவதும் "டிவி'யில் கடந்த இருநாட்களாக அணுஅணுவாக தோனியை ரசித்த ரசிகர்கள் பலருக்கும், நேற்று அவர் மொட்டைத் தலையுடன் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நேற்று மும்பையில், இந்தியா கேட் பகுதியில் மற்ற சகவீரர்களுடன் வெற்றிக் கோப்பையுடன் தோனி இருந்த போது, அவர் மொட்டைத் தலையுடன் இருப்பதை பலரும் கண்டனர். அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் சேகரித்த தகவலில், "உலகக் கோப்பையை வென்றால், மொட்டை அடித்துக் கொள்வதாக பிரார்த்தனை செய்திருந்தார்' என்று கூறப்பட்டது. முன்பு 2007ல் தென்னாப்ரிக்காவில் நடந்த டுவென்டி -20 உலகக்கோப்பையை இந்தியா வென்றதும், அவரது நீளமான தலைமுடியை குறைத்துக் கொண்டு, மாறிய தோற்றத்தில் இருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டினர்.

ஜோதிடம் பலித்தது : தோனிக்கு சாதகமாக கிரகங்களின் அமைப்பு இருப்பதால், இம்முறை இந்திய அணி உலக கோப்பை வெல்லும் என்ற, ஜோதிடரின் கணிப்பு பலித்தது.பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இத்தொடரில் இந்திய அணி தான் கோப்பை வெல்லும் என, காலிறுதி போட்டிகள் துவங்கும் முன்பாக (மார்ச் 21), மும்பையை சேர்ந்த பிரபல ஜோதிடர் கணித்து இருந்தார்.அதன் விபரம்: கடந்த 1981ல் பிறந்ததால், கேப்டன் தோனிக்கு கிரக பலன் அதிகமாக கிடைக்கும். இதனால் தோனி கோப்பை வெல்வார். ஆனால் 1974ல் பிறந்த ஆஸ்திரேலியாவின் பாண்டிங், சூரியன், செவ்வாய் கிரகங்களின் ஆதிக்கம் நிறைந்த இலங்கை கேப்டன் சங்ககரா (1977), சக வீரர்களின் பலன் கிடைக்காத தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் (1981), இங்கிலாந்தின் ஸ்டிராஸ் (1977), பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி (1980), நியூசிலாந்தின் வெட்டோரி (1979), வெஸ்ட் இண்டீசின் சமி (1983) ஆகியோருக்கு கிரகபலன்கள், அவ்வளவு அனுகூலமாக இல்லாததால், இம்முறை கோப்பை கிடைக்காது. இவ்வாறு அவர் கணித்து இருந்தார்.

ஜோதிடம் பலித்தது: அதேபோல, இந்திய அணி, "நாக் அவுட்' சுற்றில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. காலிறுதியில் ஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்பிய இந்திய அணி, அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. பைனலில் இலங்கையை வென்று, இரண்டாவது முறையாக இந்திய அணி உலக கோப்பை வென்று சாதித்தது.

பிரதமருக்கு கிலானி பாராட்டு : இந்திய அணி கோப்பை வென்றதுக்கு, பிரதமர் மன்மோகன்சிங்கிடம், பாகிஸ்தான் பிரதமர் கிலானி பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார். தவிர, விளையாட்டு தொடர்பின் மூலம் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இடையிலான உறவு மேம்படும் என எதிர்பார்ப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சரியாக கணித்த வார்ன் : உலக கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்ற போட்டிகளின் முடிவினை, ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் வார்ன், முன்னதாகவே சரியாக கணித்து தனது "டுவிட்டர்' இணையதளத்தில் வெளிட்டு வந்தார். இந்தியா, இங்கிலாந்து இடையிலான போட்டி "டை'யில் முடியும் என இவர் சரியாக கணித்தது சர்ச்சையை கிளப்பியது. இதனிடையே, நேற்று முன்தினம் நடந்த பைனலில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தால் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெல்லும். சேசிங் செய்தால், 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என கூறியிருந்தார். இருப்பினும், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

சாதித்தது "எம்' மந்திரம் : இந்திய அணிக்கு இம்முறை "எம்' மந்திரம் கைகொடுத்தது எனலாம். அதாவது உலக கோப்பை தொடரின் துவக்கத்தில் இருந்தே, ஆங்கில எழுத்தான "எம்' என்று துவங்கும் இடங்கள் அல்லது மைதானங்களில் நடந்த போட்டிகளில் வென்று வந்தது. முதல் போட்டி நடந்த மிர்புர்(எதிர், வங்கதேசம்), எம்.ஏ.சின்னசாமி அரங்கம்(எதிர், அயர்லாந்து), எம்.ஏ. சிதம்பரம்(எதிர்,வெ.இண்டீஸ்), மொடிரா(எதிர், ஆஸி.,), மொகாலி(எதிர், பாக்.,) ஆகிய இடங்களில் வெற்றிபெற்றது. பைனல் நடந்த வான்கடேவும் மும்பையில் தான் இருந்தது. இதனால் இதிலும் வெல்லும் என்று நம்பப்பட்டது. தவிர, மகேந்திர சிங் தோனி என்ற பெயரும் "எம்' என்ற எழுத்தில் தான் துவங்குகிறது. இதற்கேற்ப, எல்லாம் சரியாக நடக்க, தோனி தலைமையிலான அணி கோப்பை வென்று அசத்தியது.

இங்கிலாந்து "மீடியா' பாராட்டு : "கேப்டன் தோனி சிறப்பான முறையில் செயல்பட்டு, கோப்பை வென்று ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் மகிழ்ச்சியை கொண்டு வந்துள்ளார்,' என, இங்கிலாந்து மீடியா பாராட்டு தெரிவித்து உள்ளன. உலக கோப்பை தொடரில் இந்திய அணி 1983க்குப் பின், இரண்டாவது முறையாக கோப்பை வென்று அசத்தியது. இதற்கு இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் பத்திரிகைகள் பாராட்டு தெரிவித்து உள்ளன.

"தி கார்டியன்' என்ற பத்திரிகையில்,"" முரளிதரன் பந்தை முதலில் சற்று கவனித்துக் கொண்ட தோனி, அப்புறம் கூடுதல் "பவருடன்' போட்டுத்தாக்கினார். கடைசியில் கோப்பை வென்று சாதித்து, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும், மகிழ்ச்சியை கொண்டு வந்தார்,'' என, தெரிவித்துள்ளது.

"தி நியூஸ் ஆப் தி வேர்ல்டு' என்ற பத்திரிகையில்,"" இலங்கை கேப்டன் சங்ககரா, "டாஸ்' போடும் போது ஏமாற்றும் வேலையில் இறங்கினார். ஆனால் கடைசியில் சிக்சர் அடித்து தோனி வெற்றிதேடித்தந்தார்,'' என தெரிவித்து உள்ளது.

"தி சண்டே டைம்ஸ்' என்ற பத்திரிகையில், "" சேவக், சச்சின் அவுட்டான பின், இந்திய அணி தள்ளாடத்துவங்கியது. ஆனால் "மிடில் ஆர்டரில்' காம்பிர், விராத் கோஹ்லி, தோனி, யுவராஜ் சிங் இணைந்து உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, கோப்பை வென்று தந்தனர்,'' என தெரிவித்துள்ளது.

இலங்கை "மீடியா' கண்டனம் : உலக கோப்பை பைனலில் நடந்த அணித்தேர்வில் நடந்த குழப்பம் குறித்து, இலங்கை "மீடியா' கண்டனம் தெரிவித்துள்ளது.இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை தொடரின் பைனலின் போது, இலங்கை அணித்தேர்வில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காத வாஸ், உத்தேச அணியில் இருந்த ரந்திவ் ஆகியோர், திடீரென அழைக்கப்பட்டனர். போட்டியின் போது நான்கு வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கு இலங்கை "மீடியா' கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து "சண்டே அப்சர்வர்' என்ற பத்திரிகை வெளியிட்ட செய்தியில்,"" மெண்டிசை நீக்கிவிட்டு கடைசி நேரத்தில் ஏன் ரந்திவை சேர்த்தார்கள் என்று தெரியவில்லை. இந்தியாவுக்கு எதிராக விளையாடிய 11 பேரை யார் தேர்வு செய்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்,'' என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை அணி கேப்டன் சங்ககரா கூறுகையில்,"" அணியில் மாற்றம் எல்லாம் சரியாகத்தான் நடந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக, பவுலிங், பீல்டிங் சரியாக அமையவில்லை. தவிர, இந்திய அணியின் இரண்டு விக்கெட்டுகள் விழுந்ததும், தொடர்ந்து நெருக்கடி கொடுக்காமல் விட்டுவிட்டோம்,'' என்றார்.

"லோகோ' அறிமுகம் : பத்தாவது உலக கோப்பை தொடர் நேற்று முன்தினம் முடிந்தது. இதையடுத்து அடுத்த தொடரை (2015) ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதுதொடர்பான "லோகோவை' ஐ.சி.சி., அறிமுகப்படுத்தியுள்ளது.

தோனியை ஏமாற்றிய சங்ககரா : ""உலக கோப்பை பைனலில் இரண்டாவது முறையாக "டாஸ்' போடப்பட்டதுக்கு, இலங்கை அணியின் கேப்டன் சங்ககரா தான் காரணம். இவர் தோனியை ஏமாற்றிவிட்டார்,'' என, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்து உள்ளார்.

மும்பையில் நடந்த பைனலில், இரண்டு முறை "டாஸ்' போடப்பட்டது. இதுகுறித்து மைக்கேல் வான் கூறுகையில்,"" முதலில் "டாஸ்' போடும் போது, சங்ககரா "டெய்ல்' என்று உரக்க கூறினார். இது எல்லோருக்கும் கேட்டது. ஆனால், "ஹெட்' விழுந்ததும் நான் சரியாக கேட்கவில்லை என்று தோனியை ஏமாற்றினார். இது சங்ககராவுக்கும் தெரியும். வேண்டுமென்றே ஏமாற்றிய இவர், கடைசியில் தோற்றுப்போனார்,'' என்றார்.

சோகத்தில் ஸ்ரீலங்கா ரசிகர்


courtesy.dinamalar

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments: