ரூ.5 கோடி பறிமுதல் ஆம்னி பஸ்ஸில்


திருச்சியில் இன்று அதிகாலை ஒரு ஆம்னி பஸ்ஸில் இருந்து ரூ. 5 கோடி கைப்பற்றப்பட்டது. தமிழகத்தில் தேர்தல் கண்காணிப்பின்போது கைப்பற்றப்பட்ட அதிகபட்ச தொகை இது என்பதால் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நள்ளிரவு சென்னையில் இருந்து திருச்சிக்குச் சென்ற எம்.ஜே.டி என்ற தனியார் ஆம்னி பேருந்து திருச்சி பொன்னகரில் நிறுத்தப் பட்டிருந்தது. இது கே.என்.நேருவின் உறவினர் உதயகுமரன் என்பவருக்குச் சொந்தமான நிறுவனத்தைச் சேர்ந்தது. நேற்று நள்ளிரவில் இந்தப் பேருந்தில் பணம் கடத்தப்படுவதாக வந்த செய்தியை அடுத்து, திருச்சி மேற்கு தொகுதியின் தேர்தல் அதிகாரியும், வருவாய் கோட்டாட்சியருமான சங்கீதா, போலீஸார் துணையுடன் சோதனை மேற்கொண்டார்.
அப்போது, பேருந்தின் மேல்புறத்தில் ஐந்து நவீன பைகளில் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பைக்கு ஒரு கோடியாக ஐந்து பைகளில் 5 கோடியே 11 லட்சம் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் தீவிர விசாணை மேற்கொண்டனர். போலீஸார் சோதனை நடத்துவது தெரிந்ததும், பேருந்து அருகில் ஒரு இன்னோவா காருக்கு அருகே நின்றுகொண்டிருந்த 4 பேர், காரை அப்படியே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். போலீஸார் அந்த காரையும், ஆம்னி பஸ்ஸையும் கைப்பற்றினர். பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர் உதயகுமரன் மற்றும் அவரது மகன் உள்ளிட்ட மூவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட ரூ.5.11 கோடி பணத்தை போலீஸார் வருவாய் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக பரவலாகத் தெரியவந்ததால் தேர்தல் ஆணையம் பலத்த சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. இதுவரை சிறிய தொகைகளில் பணம் கைப்பற்றப்பட்டு வந்தது. ஆனால், ஒரே நேரத்தில் ரூ.5.11 கோடி என்ற அளவில் பெருந்தொகையாகக் கைப்பற்றப்படுவது இது முதல் முறை என்பதால், இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
photo credit:dinamalar

Post a Comment

0 Comments