மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறார் -அஜித் அதிர்ச்சி பேட்டி



தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, ஒற்றுமையின்மை மற்றும் கோஷ்டிப் பூசல் என எனது எண்ணத்துக்கு மாறுபட்டு ரசிகர் மன்றத்தினர் நடந்து கொள்வதால், எனது பிறந்த நாளான மே 1-ம் தேதி முதல் ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன், இது எனது முடிவான அறிவிப்பு, என நடிகர் அஜீத் அதிரடியாக அறிவித்துள்ளார்.

அவரது இந்த அறிவிப்பால் அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்களும் நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்த வரிசையில் உள்ளவர்களில் முக்கியமானவர் அஜீத். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக மேல்தட்டு ரசிகர்கள் அதிகம்.

ரஜினிக்குப் பிறகு இவர் படங்களுக்குத்தான் பெரிய ஓபனிங் உள்ளது. அடுத்ததாக அவர் தனது 50வது படமான மங்காத்தாவை வெளியிடத் தயாராகி வருகிறார்.

இந்த நிலையில் நாளை மறுநாள், மே 1-ம் தேதி அவருக்குப் பிறந்த நாள் வருகிறது. இதனை விமரிசையாகக் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வந்தனர்.

இந்த நிலையில் இன்று அவர் ஒரு அறிக்கையை தனது பிஆர்ஓ விகே சுந்தர் மூலம் அனுப்பியுள்ளார்.


அந்த அறிக்கையில், "எனது நீண்ட திரைப் பயணத்துக்கு உதவிய ரசிகர்கள், பொதுமக்கள், ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த பொதுமக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நேரத்தில் நெடுநாட்களாக என்னைச் சிந்திக்க வைத்த ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.நான் என்றுமே என் ரசிகர்களை என் சுயநலத்துக்காக பயன்படுத்தியதில்லை. எனது விருப்பு வெறுப்புக்கேற்ப அவர்களைப் பயன்டுத்தியதில்லை. என் படங்கள் தரமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவற்றைப் பற்றி விமர்சிக்க ரசிகர்களுக்கும் உரிமை உள்ளது.
என் படத்தை ரசிக்கும் எல்லாருமே என் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இல்லை என்பதையும் நான் அறிவேன். இந்தக் காரணத்தாலேயே என் ரசிகர்களிடையே நான் வித்தியாசம் பார்ப்பதில்லை- பார்க்கவும் மாட்டேன்.கோஷ்டிப் பூசல், ஒற்றுமையின்மை, தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, தன்னிச்சையாக இயங்குவது, சொந்த அரசியல் லாபங்களுக்காக நற்பணி இயக்கத்தின் பெயரைக் கெடுக்கும் வகையில் நடப்பது போன்றவை என் எண்ண ஓட்டத்துக்கு உகந்தவை அல்ல. சமூக நலனில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக அவரவர் குடும்பத்துக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே நான் வலியுறுத்தி வருகிறேன்.நலத்திட்டங்கள் செய்ய இயக்கம் எதுவும் தேவையில்லை. நல்ல உள்ளமும் எண்ணமும் இருந்தாலே போதும்.
எனவே வரும் மே 1-ம் தேதி எனது 40வது பிறந்த நாளில் இந்தக் கருத்தையே முடிவாக அறிவிக்கிறேன். இன்றுமுதல் எனது தலைமையில் இயங்கிவந்த நற்பணி மன்றங்களைக் கலைக்கிறேன்.

மாறிவரும் காலகட்டத்தில் மக்கள் எல்லாரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, திரைப்படங்களுக்கு அப்பால் பொதுமக்களின் பார்வையிலும் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே, நடிகனுக்கு அவரது ரசிகர்களுக்கும் கவுரவம் கிட்டும் என்பது என் நம்பிக்கை. அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் என் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது இந்த பிறந்த நாளுக்கு உண்மையான பரிசாகும்!"

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Post a Comment

1 Comments

ரேவா said…
சரியாத்தானே சொல்லிருக்காரு நண்பா....ரசிகர் மன்றம் ஆக்கப்பூர்வமான விசங்களுக்காக இருக்க வேண்டும், அவர்களுக்குள் சண்டைகள் நடக்கும் பச்சத்தில் அஜித் அவர்கள் எடுத்த இந்த முடிவு சரியானது...பகிர்வுக்கு வாழ்த்துக்கள்