முதல்வர் விழாவா, கூப்பிடாதீங்க

by 11:30 AM 0 comments
கருணாநிதிக்கு விழா எடுப்பதில் தனி சாதனையே படைத்தனர் சினிமாக்காரர்கள், கடந்த 2010-ம் ஆண்டு.

அவர் உட்கார்ந்தால் ஒரு விழா, எழுந்தால் ஒரு விழா, பேனா மூடி கழற்றினால் ஒரு விழா என்று விசுவாசத்தை டன் கணக்கில் கொட்டினர் மேடைகளில். பிறவி திமுக காரன்கூட தோற்றுப் போகும் அளவுக்கு கருணாநிதியையும் அவரது ஆட்சியையும் புகழ்ந்து தள்ளினர்.

சிலர் இன்னும் ஒரு மேலே போய் கருணாநிதியிடம் அப்பா - பிள்ளை என சென்டிமெண்ட் 'சீன்' காட்டினர்.

காலம் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டே, அடுத்த அச்சுக்கு காட்சிகளை நகர்த்துகிறது. இதோ... இப்போது எந்த சினிமா பறவையும் அறிவாலயம் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காமல் கோடம்பாக்கத்துக்கு பஞ்சாய் பறக்கிறது!

இத்தனை காலமும் கருணாநிதியும் அவரது குடும்பத்தினரும்தான் சினிமாவைக் காத்து கரைசேர்த்து வருவதாக துதி பாடிய அதே வாய்கள், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு 'திமுக குடும்ப ஆதிக்கம் தாங்க முடியவில்லை' என்று கோரஸ் பாடுகின்றன.

சினிமாக்காரர்களுக்கு பையனூர் அருகே இலவச நிலம், வீடு என அமர்க்களமாக அறிவித்தார் கருணாநிதி. அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது. இப்போது அங்கே சினிமா ஸ்டுடியோக்கள் கட்ட துவக்க விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் (இதுவும் அரசாங்கப் பணம்தான்!). இதற்காக முக்கிய நடிகர்களைக் கூப்பிட்டால், தெனாலிராமனின் பூனையை விட அதிவேகமாகப் பாய்ந்தோடிப் பதுங்கி வருகின்றனர் இந்த வாய்ச்சொல் வீரர்கள்!

முதல்வரின் எந்த விழாவாக இருந்தாலும் முதலில் வந்து நிற்கும் ரஜினியும் கமலும் மட்டும், "கண்டிப்பா வர்றோம். ஆனா அரசியல் கலர் பூசிடாதீங்க..." என்று கேட்டுக் கொண்டு ஒப்புதல் கொடுத்துள்ளனராம். ஆனால் நேற்றைய மழையில் முளைத்து கருணாநிதியிடமும் இந்த ஆட்சியிலும் எக்கச்சக்கமாய் பலன்களை அனுபவித்த வாரிசு நடிகர்களெல்லாம், 'கருணாநிதி ஃபங்ஷனுக்கு எங்களை எதுக்குக் கூப்பிடறீங்க. நாங்க என்ன எம்எல்ஏக்களா?' என்று கேட்டுவிட்டு வேகமாய் போனை வைத்துவிட்டார்களாம்.

இதைவிட சுவாரஸ்யமான சமாச்சாரம், எதிர் முகாமுக்கு ஆதரவாக இப்போதே ஆள்திரட்ட ஆரம்பித்துள்ள சில நடிகர்கள்தான். இப்போதே மேடைகளில் திமுகவுக்கு எதிராகப் பேசுவதோடு, அதிமுகவின் அனுதாபிகளாகவும், 'புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களாக'வும் தங்களைக் காட்டி வருகிறார்கள்.

வெளியாகும் புதிய படங்களையும் ஜெயா டிவிக்கு விற்றுத் தரும் வேலையையும் இவர்கள் கையிலெடுத்துள்ளனர்.

இரட்டை இலை துளிர்க்கத் தொடங்கிவிட்ட நம்பிக்கையில் இப்போது போயஸ் தோட்டத்தில் தஞ்சமாகத் தொடங்கியுள்ளன சினிமா பறவைகள்... அது வேடந்தாங்கலா, வேட்டைக்காரர்களின் இடமா என்பது போகப் போகத்தானே தெரியும்!!

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments: