ரிப்பேரை சரிசெய்யமுடியாத கோபத்தில், கோடிக்கணக்கான மதிப்புடைய சூப்பர் காரை சீன கோடீஸ்வரர் ஒருவர் கூலிக்கு ஆள் அமர்த்தி நடுரோட்டில் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சீனாவின் கிங்டாவோ நகரை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர், ஆசை ஆசையாய் பிரபல நிறுவனத்தின் சூப்பர் காரை பிரிட்டனில் இறக்குமதி செய்து வாங்கினார். சூப்பர் கார் வாங்கியதும் கிங்டாய் நகரத்தை ஒரு ரவுண்டு வந்து சந்தோஷத்தில் திளைத்தார்.
ஆனால், அந்த சந்தோஷம் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. அவரது சூப்பர் காரின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டு ஆங்காங்கே நின்று கொண்டது. புதிதாக வாங்கிய காரின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதால், வருத்தமடைந்த அவர் கார் வாங்கிய டீலரிடம் எடுத்து சென்றார்.
சர்வீஸ் சென்டரில் ரிப்பேர் செய்து வீட்டுக்கு எடுத்து வந்ததும், மீண்டும் கார் 'ஜோலி' கொடுக்க ஆரம்பித்தது. கார் ரிப்பேர் ஆவதும், அதை டீலருக்கு எடுத்து சென்று சர்வீஸ் செய்வதுமே பொழப்பாகி போனதால், வெறுத்துபோனார் அந்த கோடீஸ்வரர்.
என்னதான் கோடீஸ்வரராக இருந்தாலும், கையிலும், பையிலும் பணம் கொட்டி நிரம்பி வழிந்தாலும், சாதாரண மனிதர்தானே அவரும். மேலும் அவரது வெந்த புண்ணில், 'ஆசிட்' ஊற்றுவது போல, மெக்கானிக்குகளும் தங்கள் பங்குக்கு காரின் பம்பர் மற்றும் சேஸிஸ் ஆகியவற்றை சேதப்படுத்தினர் 'வெள்ளையாடி' விட்டனர்.
பயங்கர டென்ஷனான அவர், கோபத்தின் உச்சத்திற்கு சென்று டீலரை அணுகி தகராறு செய்தார். கோடீஸ்வரரின் சுத்தமான ஆங்கில வார்த்தைகளை சகிக்க முடியாத அந்த டீலர், பிரிட்டனில் உள்ள சூப்பர் கார் நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு நேராக போனை போட்டு சீன பார்ட்டியின் கையில் கொடுத்துவிட்டார்.
அவரிடம், இங்கிலாந்து நிர்வாகிகள் ஏதேதோ சமரசம் செய்து பார்த்தனர். ஆனால் நம்மவர் விடவில்லை. வறுத்தெடுத்து விட்டார் 'நூடுல்ஸை' வேக வைப்பது போல.
பின்னர் வீட்டுக்கு வந்தும் கோபம் அடங்காத அவர், சட்டென ஒரு முடிவுக்கு வந்தார். இனியும் இந்த காரை கட்டிக்கொண்டு அழுவதைவிட நிர்வாகிககளுக்கு தனது கோபத்தை வெளிப்படுத்தும் விதத்தில், காரை நடுரோட்டில் உடைக்க முடிவு செய்தார்.
இதற்காக, காசு கொடுத்து ஒரு குழுவினரை பணிக்கு அமர்த்தினார். கிங்டாவோ நகரின் மையப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் காரை கொண்டு வந்து நிறுத்தினார். காரை சுற்றிலும் பெரிய பெரிய சுத்தியல்களுடன் நின்ற "உடைப்பு" குழுவினர் காரை சுற்றிவளைத்து அடித்து உடைத்தனர்.
கருப்பு நிறத்தில் மின்னிக்கொண்டிருந்த கோடிக்கணக்கான மதிப்புடைய அந்த கார் உடைப்பு குழுவினரின் தாக்குதலுக்கு இலக்காகி சிறிது நேரத்தில் சிக்கி சின்னாபின்னமானது. அப்போதுதான் அந்த கோடீஸ்வரரின் கோபம் தணிந்தது. நூற்றுக்கணக்கானோர் மத்தியில் நடந்த இந்த கார் உடைப்பு சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2 Comments
முதல் வடை நமக்குத்தான்