கூடங்குளம் அணு உலைகளுக்கு பாதிப்பு ஏற்படாது


""கூடங்குளத்தில் மூன்று மாதத்தில் மின் உற்பத்தி துவங்கும். ஜப்பான் அணு உலைகளை போல இந்த அணு உலைகளுக்கு பாதிப்பு ஏற்படாது,'' என, கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஒவ்வொன்றும் 1,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகளின் கட்டுமான பணிகள் நடக்கின்றன. முதல் அணு உலையில் இந்த மாதம் மின் உற்பத்தி துவக்குவதாக இருந்தது. வரும் அக்டோபரில் இரண்டாவது அணு உலை மின் உற்பத்தி துவக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஜப்பானின் புக்குஷிமா அணுமின் நிலையத்தில், அணு உலை வெடித்தது. இந்தியாவில் கடலோரங்களில் அமைக்கப்பட்டுள்ள அணுஉலைகளுக்கு பாதிப்பு வருமா என்ற பீதியுள்ளது.

இதுகுறித்து கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி கூறியதாவது: ஜப்பான் அணு உலைகள் 1971ல் வடிவமைக்கப்பட்டவை. பூகம்பம் ஏற்படும் போது தானாகவே உற்பத்தியை நிறுத்தி கொள்ளும் தன்மை கொண்டவை. சமீபத்திய சுனாமி தாக்குதலால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்ட உடன் மின்சப்ளையும் நின்றுபோனது. இதனால், ரியாக்டர் எனப்படும் அணு உலைகளில் நிலவும் கடுமையான வெப்பத்தை குறைக்கும் குளிர்விப்பான்கள் செயல்படாமல் போனது. உடனடியாக டீசல் ஜெனரேட்டர் மூலம் குளிர்விப்பான்கள் செயல்பட்டாலும், சுனாமி தண்ணீர் உள்ளே வந்ததால் டீசல் ஜெனரேட்டரும் ஒரு மணி நேரத்திற்குள் பாதிப்பிற்குள்ளானது. எனவே தான் ஹைட்ரஜன் உருவாகி வெளிவட்டத்தில் வெடிப்பு ஏற்பட்டது. இருப்பினும் எரிபொருளான யுரேனியம் வைக்கப்பட்டிருந்த பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை. யுரேனியம் உருகாததால் கதீர்வீச்சு ஏற்படவில்லை. ஆனால், கூடங்குளம் அணு உலைகள் சமீபத்திய தொழில்நுட்பத்தில் செயல்பட உள்ளன. ஒரு அணு உலையை குளிர்விக்க ஒன்றுக்கு பதிலாக நான்கு டீசல் ஜெனரேட்டர்கள் உள்ளன. அணு உலை வளாகம் கடல் மட்டத்தில் இருந்து 7.5 மீட்டர் உயரத்தில் உள்ளது. அந்த மட்டத்தில் இருந்து 52 மீட்டர் உயரத்தில் ரியாக்டர் எனப்படும் அணு உலைகள் உள்ளன. கடல் மட்டத்தில் இருந்து 60 மீட்டர் உயரத்தில் ரியாக்டர் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக கடற்கரையில் சுனாமி பாதிப்பினால் இதுவரையிலும் மூன்று மீட்டர் உயரத்திற்கே அலைகள் எழுந்துள்ளன. தமிழகம் சுனாமி என்ற ஆபத்தை அறியும் முன்பாகவும், அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்ப்பிற்கு முன்னரே கூடங்குளம் அணு உலைகள் வடிவமைக்கப்பட்டாலும் அத்தகைய பேராபத்துகளை தாங்கும்வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவில் பூகம்ப பேராபத்துகளின் தன்மைகள் குறைவானதாக இருந்துள்ளது. எனவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் திட்டமிட்டபடி உற்பத்தி துவங்கும். கூடங்குளத்தை சுற்றி 16 கி.மீ., சுற்றளவு கிராம மக்களுக்கு ஆபத்து கால பயிற்சி வகுப்புகளை துவங்க உள்ளோம். முதற்கட்டமாக கிராம அதிகாரிகள் மட்டத்தில் பயிற்சி வகுப்புகளை துவக்க உள்ளோம். இன்னும் ஒரு வாரத்தில் எரிபொருள் நிரப்பப்படாத சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதன் பின் ஒன்றரை மாதத்தில் எரிபொருள் நிரப்பப்படும். இன்னும் மூன்று மாதத்தில் வணிக ரீதியான மின் உற்பத்தி துவங்கும். இவ்வாறு காசிநாத் பாலாஜி கூறினார்.

No comments: