என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?

இப்போது உங்கள் முன்னால் ஒரு பிரமாதமான விருந்துச் சாப்பாடு வைக்கப்பட்டுவிட்டது. அதில் நீங்கள் விரும்பும் உணவு வகை எது என்று தேர்ந்தெடுத்து முடிவுசெய்யவேண்டியது உங்களுடைய பொறுப்புதான். நீங்கள் உணவைத் தேர்ந்தெடுக்கும்போது, சுவையை அடிப்படையாக வைத்து முடிவெடுக்கலாம். அதேசமயம் அந்த உணவு ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும், சரியாக ஜீரணமாகவேண்டும். அதேபோல் இங்கே பலவிதமான படிப்புகள் உள்ளன. மாணவர்களும் பெற்றோரும் இதிலிருந்து தங்களுக்குப் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அது அவர்களுடைய விருப்பத்துக்கு ஏற்றதாக இருக்கலாம், எதிர்காலத்தை மனத்தில் வைத்து அமையலாம், சம்பந்தப்பட்ட மாணவரின் திறமை, தகுதியைப் பொறுத்ததாக இருக்கலாம்.
இதுபற்றி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னால் நம்மை நாமே சில கேள்விகளைக் கேட்டுக்கொள்ளவேண்டும்.

1. நான் ஒரு படிப்பை முடிவெடுத்துவிட்டேன்

1.1. நான் என் பெற்றோரின் அறிவுரை, வற்புறுத்தலால் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்

 உங்கள் குழந்தைகள் உங்களுடைய குடும்பத்துக்கு மட்டுமல்ல, இந்த உலகத்துக்கும் ஒரு சிறப்புப் பரிசாகத் திகழ்கிறவர்கள். அவர்கள் எதில் ஆர்வம் செலுத்துகிறார்களோ, எதைச் சிறப்புத் தகுதியாக வளர்த்துக்கொள்கிறார்களோ அதை மட்டுமே அவர்களால் சாதிக்கமுடியும். ஒருவருக்குச் சதுரங்கத்தில் ஆர்வம் இருக்கிறது, கிரிக்கெட்டில் இல்லை என்றால் அவர்களைக் கிரிக்கெட் விளையாடும்படி வற்புறுத்தக்கூடாது. அப்படிச் செய்தால், அவர் உங்களுடைய லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக விளையாடுவார், தன்னுடைய லட்சியத்தை எண்ணி அல்ல!

 உங்கள் குழந்தைகளுடன் இதுபற்றிப் பேசுங்கள். அவர்களுடைய எண்ணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். அதன் பிறகே நீங்கள் அவர்களுக்கான படிப்பை முடிவு செய்யவேண்டும்

 சில பெற்றோர், அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் தவறவிட்ட படிப்புகளைத் தங்கள் பிள்ளைகள்மீது திணிக்கிறார்கள். அவர்கள் மூலம் அதைச் சாதித்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். மேஸ்ட்ரோ இளையராஜாவின் தந்தை அவரை எஞ்சினியரிங் அல்லது சி.ஏ. படிக்க வற்புறுத்தியிருந்தால், நாம் ஒரு மிகச் சிறந்த இசைஞானியை இழந்திருப்போம். உங்கள் பிள்ளைகள் நீங்கள் நினைப்பதைவிடச் சிறந்த திறமைசாலிகளாக இருக்கலாம்.

 மாணவர்களும் இதுபற்றித் தங்கள் பெற்றோரிடம் பேசவேண்டும். எந்த அடிப்படையில் அவர்கள் இந்தப் பாடத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். தங்கள் கருத்துகளைச் சொல்லவேண்டும்.

 பெற்றோர் உணரவேண்டிய ஒரு விசயம். இப்போது நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பு வருங்காலத்தில் தவறானதாக அமைந்துவிட்டால், அதற்காக உங்கள் பிள்ளையைக் குற்றம் சொல்லக்கூடாது. ஒட்டுமொத்தக் குடும்பமும் உட்கார்ந்து பேசி ஒரு தீர்வைக் கண்டறியவேண்டும். உதாரணமாக, ஒரு மாணவர் கணிதத்தில் திறமைசாலியாக இருக்கிறார். ஆனால் அவருடைய தந்தை அவரை ஆசிரியர் பயிற்சியில் சேர்க்கிறார். அந்த ஆசிரியர் பயிற்சி அனுமதி பெறாதது, நீதிமன்றம் அதனை மூடிவிடுகிறது. அந்தத் தந்தைக்கு மிகவும் வருத்தம். ஆனால், இனிமேல் எதுவும் செய்யமுடியாது. ஆகவே, அந்த மகன் வாழ்நாள் முழுவதும் தன் தந்தையைக் குற்றம் சொல்லிக்கொண்டிருந்தான். உங்களுக்குத் தரப்பட்டிருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான். ஒருவேளை நீங்கள் மறுபடி பிறந்தாலும் கூட மீண்டும் இதே நபராகப் பிறக்கமுடியாது. ஆகவே, இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.

நான் என் உறவினர்கள்/நண்பர்களைப் பார்த்துப் பேசி ஒரு படிப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்

சின்ன வயதில் நான் ஒரு ஐஸ் க்ரீம் விற்பனையாளனாக விரும்பினேன். அப்போதுதானே நான் நாள்முழுவதும் ஐஸ் க்ரீம் சாப்பிட்டுக்கொண்டே இருக்கமுடியும்! நான் ஓர் எஞ்சின் டிரைவரைப் பார்த்துப் பரவசப்பட்டேன். அவரைப்போலவே நான் எப்போது பயணம் செய்துகொண்டிருக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆனால், ஒருவேளை நான் இந்த வாய்ப்புகளைத் தேர்ந்தெடுத்திருந்தால் எனக்கு எல்லாப் பலன்களும் கிடைத்திருக்குமா?

 உங்கள் நண்பரின் தந்தை தன் மகன் ஒரு படிப்பை முடித்தபிறகு அதே துறையில் அவனுக்கு வேலை கிடைக்க உதவி செய்வாராக இருக்கலாம். ஆனால் நீங்கள் படிப்பை முடித்தபிறகு நீங்களேதான் சொந்தக் காலில் நிற்கவேண்டியிருக்கும்.

 உங்கள் நண்பர், உறவினரிடம் பேசும்போது அவர்கள் எந்தக் காரணத்துக்காக இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்தார்கள் என்று விவாதியுங்கள். அந்தக் காரணம் உங்களுக்குப் பொருந்துமா என்று யோசியுங்கள்.

 ஒரு வீட்டில் அம்மா, அப்பா மருத்துவர்கள். அவர்களுக்குச் சொந்தமாக ஒரு மருத்துவமனையும் இருக்கிறது. ஆகவே அவர்கள் தங்கள் பிள்ளைகளும் மருத்துவம் படிக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். படித்து முடித்தபிறகு அந்தப் பிள்ளைகள் வேலை தேடுவதைப்பற்றிக் கவலைப்படவேண்டியதில்லை. ஆனால் அது உங்களுக்குப் பொருந்துமா? யோசித்துக்கொள்ளுங்கள்

1.2. நான் சமீபத்திய சந்தை ஏற்றதாழ்வுகள், நிகழ்வுகளின் அடிப்படையில், அதிக சம்பளம் கிடைக்கக்கூடிய ஒரு படிப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்

ஒருவேளை உங்களுக்குப் பிடிக்காவிட்டால், உங்களால் சிறப்பாகப் பணியாற்ற முடியாது. இதனால் நீங்கள் திறமைக்குறைவு காரணமாக வேலையை இழக்க நேரலாம். அல்லது வாழ்நாள் முழுவதும் சலிப்பாக உணர்வீர்கள். ஒரே இடத்தில் தேங்கிப்போவீர்கள். அதேசமயம், அந்த வேலை உங்களுக்குப் பிடித்திருந்தால் விளையாட்டு மைதானத்துக்குச் செல்வதுபோன்ற உற்சாகத்தோடு அலுவலகத்துக்குக் கிளம்பிச் செல்வீர்கள்.

 ஒரு படிப்பைத் தேர்ந்தெடுக்கச் சம்பளம் மட்டும் சரியான அளவுகோல் அல்ல. நம்முடைய சந்தை என்பது சுழற்சிபோல மாறி மாறி வரும். ஒருகாலத்தில் வங்கியில் பணிபுரிவது மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. அதன்பிறகு மருத்துவர்கள், இப்போது ஐடி (தகவல் தொழில்நுட்பம்), நாளைக்கு என்ன என்பது நமக்குத் தெரியாது. ஆகவே, நீங்கள் இப்போது விரும்பித் தேர்ந்தெடுக்கும் படிப்பு முடியும்போது அல்லது அதன்பிறகு இதேமாதிரி மதிப்பு இருக்கும் என்பது நிச்சயமில்லை. அது உங்கள் பணி/வாழ்க்கையைப் பாதிக்குமா என்று நன்றாக யோசித்துக்கொள்ளுங்கள்.

 ஒவ்வொரு துறையிலும் அதிகச் சம்பளம் பெறும் வேலைகள், குறைந்த சம்பளம் பெறும் வேலைகள் உண்டு. நீங்கள் எவ்வளவு உயரம் செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் சம்பள விகிதமும் மாறும். இன்றைக்கு இஅஇ உணஞ்டிணஞுஞுணூடிணஞ்இ அணடிட்ச்வடிணிண மற்ற பல துறைகளும் ஐ.டி.க்கு இணையாக அதிகச் சம்பளம் தரக்கூடியவையாக இருக்கின்றன. ஆரம்பத்தில் நீங்கள் உள்ளே நுழையும்போது நன்றாக இருக்கலாம்இ ஆனால் நீங்கள் வளர வளர அந்த உற்சாக நின்றுவிடும்

1.3. அதிக மதிப்பெண் பெறவேண்டும் என்கிற நோக்கத்துடன் நான் என்னுடைய படிப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்

உங்களுக்குக் குறுகிய காலக் கண்ணோட்டமே இருக்கக்கூடாது. உங்களால் நிறைய மதிப்பெண் எடுக்கமுடியும் என்பதால் மட்டும் உங்களுக்கு ஒரு துறையில் ஆர்வம் வந்துவிடவேண்டும் என்கிற அவசியம் இல்லை. சில சமயங்களில் நீங்கள் நன்கு மனப்பாடம் செய்யக்கூடியவராக இருக்கலாம். அதனால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். ஆனால் நீங்கள் செய்யப்போகும் வேலை மிகவும் கடினமாக அமைந்துவிடலாம். நான் பல மாணவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் கம்ப்யூட்டர் சைன்ஸை விரும்பித் தேர்ந்தெடுப்பார்கள். எப்படியோ மனப்பாடம் செய்து நல்ல மதிப்பெண் பெற்றுவிடுவார்கள். ஆனால் வேலை என்று வந்துவிட்டால் அவர்கள் முழுத்தோல்வி அடைகிறார்கள். எனக்குத் தெரிந்த பல கம்ப்யூட்டர் சைன்ஸ் மாணவர்களுக்கு எளிய ப்ரொக்ராம்கள்கூட எழுதத் தெரிவதில்லை. ஆகவே அவர்கள் அந்த வேலைக்குத் தகுதியற்றவர்களாகிவிடுகிறார்கள்.

நீங்கள் ஒரு பாடத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் என்கிற நோக்கத்தோடு படிக்கவேண்டும். அப்போதுதான் நீங்கள் பணியில் நன்றாகச் செயல்படமுடியும்.

 மதிப்பெண் பெறுவது உங்களுடைய பணி வாழ்க்கைக்கு நல்ல மைல் கல் ஆகாது. +2-வில் ஒரு குறிப்பிட்ட பிரிவில் சேர்வதற்கு அது பயன்படலாம். ஆனால் நீங்கள் கல்லூரிக்குச் செல்கிறபோது உங்களுடைய மதிப்பெண்கள் மட்டும் உங்களுக்குப் பட்டம் வாங்கித் தந்துவிடாது. இப்போதெல்லாம் நிறுவனங்கள் உங்களுடைய தகவல் பரிமாற்றத் திறமை, மற்றவர்களுடன் கலந்து பழகும் தன்மை, தலைமைப் பண்புகள், பிரச்னைகளைத் தீர்க்கும் திறமை, அணியில் சேர்ந்து பணிபுரியும் திறமை என்று பல விசயங்களைப் பார்க்கிறார்கள். எதார்த்த வாழ்க்கையில்இ தங்கப் பதக்கமும் முதல் வகுப்பும் நல்ல மதிப்பெண்கள்மட்டும் வாங்கியவர்களுக்குக் கிடைப்பதில்லை. ஒரு மாணவர் பள்ளிஇ கல்லூரியில் சுமாராகப் படிக்கிறவராக இருந்தால்கூட, அதோடு பல கூடுதல் ஆர்வங்களை ஏற்படுத்திக்கொண்டு நன்கு பேசக்கூடியவராக பாடப் புத்தகங்களுக்கு வெளியிலும் விசயங்களை அறிந்து வைத்திருக்கிறவராகத் தன்னை மேம்படுத்திக்கொண்டு இதுபோன்ற கௌரவங்களைப் பெறுகிறார்கள்.

 படிப்பு என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான். ஆனால் வாழ்க்கை, வேலை என்பது எதார்த்தமான விசயம். அதை மறந்துவிடாதீர்கள்.

1.4 என் பெற்றோரால் மற்ற படிப்புகளுக்குச் செலவழிக்கமுடியாது. ஆகவே எங்கள் வசதிக்கு இணங்க நான் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்

இப்போதெல்லாம் கல்விக் கடன் மிகவும் சகஜமாகிவிட்டது. ஆகவே உங்கள் பெற்றோரால் செலவழிக்கமுடியாது என்று எண்ணி ஒரு குறிப்பிட்ட படிப்பைத் தவறவிடாதீர்கள். எதையும் ஒருமுறைக்கு இரண்டுமுறை யோசியுங்கள். ஆனால் ஒருவேளை அந்தத் தொகை கல்விக் கடனாலும் பெறமுடியாத அளவுக்கு அதிகமாக இருக்குமானால் அந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது பற்றி நீங்கள் நன்றாக யோசித்துக்கொள்ளவேண்டும். நீங்கள் உங்கள் கனவைப் பின்னர் வேறொரு வாய்ப்பு வரும்போது நிஜமாக்கிக்கொள்ளலாம். உங்களுக்குத் தெரியும், திரு.அப்துல் கலாம் அவர்கள் ஒரு போர் விமானியாகவேண்டும் என்றுதான் விரும்பினார். ஆனால் பல காரணங்களால் அந்த எண்ணம் நிறைவேறவில்லை. அப்போதும் அவர் நம்பிக்கை இழக்கவில்லை. ஒரு சிறந்த ராக்கெட் விஞ்ஞானியாக உருவானார். படிப்படியாக முன்னேறி இந்தியாவின் ஜனாதிபதியானார். கடைசியாக அந்த ஜனாதிபதி பதவியில் இருந்தபடி அவர் ஒரு போர் விமானத்தில் பறந்தார்.

 நீங்கள் மிகவும் எதார்த்தமாகச் சிந்திக்கிறீர்கள். நல்ல விசயம்!
 நீங்கள் கல்விக் கடனுக்கு முயற்சி செய்தீர்களா? இன்றைக்குக் கல்வி என்பது உங்களுடைய உரிமை. ஒரு குறிப்பிட்ட படிப்புக்கான அனுமதிக் கடிதத்தைப் பெற்றுவிட்டால் போதும். செலவுகளைச் சமாளிக்கக் கடன்கள் உதவும்.
 ஒரு சினிமா டிக்கெட்கூட வாங்க முடியாத பலர் மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்குகளின் உரிமையாளர்களாக உயர்ந்திருக்கிறார்கள். ஆகவே உங்கள் திறமைக்கு வானமே எல்லை. ஒருவேளை நீங்கள் விரும்பும் விசயம் இப்போது உடனடியாகக் கிடைக்காவிட்டாலும் அதோடு உலகம் முடிந்துவிடாது. உங்கள் இலக்கை அடைய வேறு வழிகளை அணுகுங்கள் (கூடுதல் தகவல்களுக்கு எங்களின் "இலக்கு நிர்ணயித்தல்' வழிகாட்டியை அணுகவும்).
 ஒருவர் அமெரிக்காவில் படிக்க விரும்பினார். ஆனால் அவருடைய குடும்ப நிலைமையால் அது முடியவில்லை. அவர் மாற்று வழிகளைத் தேடினார் B.Sc., Computer Science படிக்கச் சேர்ந்தார். அதை முடித்துவிட்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். சில வருடங்கள் இந்தியாவில் வேலை பார்த்துவிட்டு அமெரிக்கா சென்றார். அங்கே மிகச் சிறந்த பல்கலைக்கழகம் ஒன்றில் சேர்ந்து படித்தார். தன்னுடைய நிறுவனத்தின் உதவித்தொகை பெற்றுப் படிப்பைப் பூர்த்தி செய்தார். இங்கே அவர் முதன்முறை அமெரிக்கா செல்ல முடியாததற்காகவும் மாற்று வழியைத் தேர்ந்தெடுத்ததற்காகவும் சந்தோசப்படவேண்டும்.

1.5 என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் இந்தத் துறையில் பெரிய பதவியில் உள்ளார். அவர் தன்னுடைய நிறுவனத்தில் எனக்கு ஒரு நல்ல வேலை தருவதாக உறுதியளித்துள்ளார். ஆகவே நான் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்துள்ளேன்

வாழ்க்கையில் இப்படி நடக்குமோ, அப்படி நடந்துவிடுமோ என்பது போன்ற குழப்பக் கேள்விகளுக்கு இடமே இல்லை. உங்கள் உறவினர் அதே நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்வார் என்பது என்ன நிச்சயம்? அப்படியே இருந்தாலும், நீங்கள் படிப்பை முடிக்கும் நேரத்தில் அவர் உங்களை வேலைக்குச் சேர்க்கும் அளவு செல்வாக்குடன் இருப்பார் என்பது யாருக்குத் தெரியும்? ஒருவேளை அவர் உங்களுக்கு வேலை கொடுத்தாலும்கூட நீங்கள் ஒழுங்காக வேலை செய்யாவிட்டால் அந்தப் பணியில் தொடரமுடியாது. ஆகவே உங்களுக்குப் பிடித்த வேலையில் சேர்கிற வாய்ப்பை வழங்கும் படிப்பைத் தேர்ந்தெடுங்கள்.

 எங்களுடைய ஆலோசனை இந்த விசயத்துக்கு மிகக் குறைந்த முக்கியத்துவம் கொடுங்கள். இன்றைக்கு ஒவ்வொரு நிறுவனமும் தங்களுடைய வேலை காலியிடங்களைப் பூர்த்தி செய்யச் சிறந்த திறமையாளர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய உறவினர் எவ்வளவு செல்வாக்கு மிகுந்தவர் என்பது உங்களுக்குத் தெரியாது. தவிர நீங்கள் உங்கள் திறமைமீது நம்பிக்கை வைக்கவேண்டும். வாழ்க்கையின் நோக்கம் சவால்களை எதிர்கொள்வது. அவற்றை ஒவ்வொன்றாகச் சாமாளிப்பது. இதுமாதிரி நேரத்தில்தான் நாம் பலமாகவேண்டும். வாழ்க்கையின் பாடங்களைக் கற்றுக்கொண்டு சவால்களைச் சந்திக்கவும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் பழகவேண்டும்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் திரு.நாராயணமூர்த்தி ஒரு பேட்டியில் சொன்னது, "என்னுடைய பிள்ளைகளுக்கு நானாக இன்ஃபோசிஸில் வேலை தரப்போவதில்லை. அவர்கள் தங்களுடைய திறமைகளை வளர்த்துக்கொண்டு முறைப்படி எங்கள் நிறுவனத்தின் செயல்முறைகளைப் பின்பற்றித் தங்களுக்கான பதவியைப் பெறவேண்டும்.'

ஆகவே, நீங்கள் உங்களுக்கான படிப்பை எப்படித் தேர்வு செய்யவேண்டுமென்றால் : நான் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கக் காரணம் இதற்குத் தேவையான சிறப்புத் திறமைகளும், இந்தத் துறையில் ஆர்வமும் எனக்குள்ளது. என்னால் இந்தத் துறையில் மிகச் சிறப்பாகச் செயல்படமுடியும் என்கிற நம்பிக்கை உள்ளது. ஆகவே, ஒரு படிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் கீழ்க்கண்ட கேள்விகளை நீங்களே கேட்டுக்கொள்ளவேண்டும். அதற்குத் திருப்தியான பதில் பெற்றுக்கொள்ளவேண்டும்.

அ. இந்தத் துறைபற்றி நீங்கள் முழுமையாகப் புரிந்துகொண்டுவிட்டீர்களா?

ஆ. இந்தப் படிப்புக்குத் தேவையான செலவுகள், கல்விக்கடன், உதவித்தொகை போன்றவற்றைப்பற்றித் தெரிந்துகொண்டீர்களா? உங்களுடைய பின்னணிக்கு இது எந்த அளவு பொருந்தும் என்று யோசித்துவிட்டீர்களா? இதற்கான படிப்புச் செலவுகளைச் சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

இ. இந்தத் துறை உங்களுடைய தனிப்பட்ட மற்றும் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு வேலையைக் கொடுக்குமா? உதாரணமாக, உங்களுக்கு இசையில் ஆர்வம் இருக்கலாம். ஆனால் அதில் உச்சத்தை எட்டுவது மிகவும் சிரமம். அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆகவே, இப்போதே முடிவுசெய்துகொள்ளுங்கள். இந்த ஆர்வத்துக்காக குடும்பத்திற்கான வருமானத்தைப் பணயமாக வைக்க உங்களால் முடியுமா? வேண்டுமானால் நீங்கள் இதைப் பொழுதுபோக்காக ஏற்றுக்கொள்ளலாம். பிறகு ஒரு வேலையில் சேர்ந்துகொண்டு இசைப்பணிகளில் ஆர்வம் செலுத்தலாம்.

நடிகர் விவேக்கின் கதை : அவர் ஒரு நடிகராகவேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவர் திரைப்பட வாய்ப்பு வரும் வரை நேரத்தை வீணடிக்கவில்லை. அக்கவுன்ட்ஸ் துறையில் பணியாற்றியபடி வாய்ப்புகளைத் தேடினார். இன்றைக்கு, உங்களுக்கே தெரியும் அவர் தமிழ்த் திரைப்படத்துறையில் அதிகம் விரும்பப்படுகிற ஒரு நகைச்சுவை நடிகராக உள்ளார்.

ஈ. இந்தப் படிப்பு எவ்வளவு காலம் நீடிக்கும்? அதன்பிறகு என்னவெல்லாம் படிக்கவேண்டியிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

உ. M.B.B.S-ஐ பொறுத்தவரை நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுவரை மேல்படிப்புக்குச் செல்லவேண்டும். அதற்குப் பத்து வருடங்கள்வரை ஆகலாம். இந்தப் படிப்பை முடித்தபிறகு உங்கள் பணி வாழ்க்கை உறுதிப்பட மூன்று அல்லது நான்கு வருடங்கள் ஆகலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? உதாரணமாக, சட்டப்படிப்பை எடுத்துக்கொண்டால், அதைப் படித்து முடித்தவர்கள் இன்னொரு பெரிய வழக்கறிஞர் அல்லது நிறுவனத்தின்கீழ் பணிபுரிந்து பயிற்சி பெறவேண்டும். அதன்பிறகுதான் அவர்கள் சொந்தமாகத் தொழில் செய்யமுடியும்.

ஊ. இந்தத் துறையில் உள்ள தொழிற்சார்ந்த ஆபத்துகளைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவை உங்களுடைய இயல்புடன் பொருந்திப்போகிறதா என்று யோசித்துக்கொண்டீர்களா?
உதாரணமாக, நீங்கள் எப்போதும் வீட்டில் இருப்பதையே விரும்புகிறவர் என்றால், Marine Engineering படிப்பு/வேலையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் நீங்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்ளவேண்டும்.

ஒருவேளை நீங்கள் வருங்காலத்தில் உங்களுடைய தந்தை/குடும்பத் தொழிலைச் செய்யலாம் என்று முடிவுசெய்திருந்தால் இப்போது தேர்ந்தெடுத்திருக்கும் படிப்பு அப்போது உங்களுக்கு உதவியாக இருக்குமா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

ஒருவேளை உங்களுடைய நிலைமை இப்படி இருந்தால்!

நான் இன்னும் என்னுடைய படிப்பைத் தேர்வு செய்யவில்லை எதைத் தேர்ந்தெடுப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என் பெற்றோர் என்னை ஒரு படிப்பில் சேர்ப்பார்கள். எனக்கு எது தேவை என்று அவர்களுக்குத் தெரியும். ஒவ்வொருவரும் சில சிறப்புத் திறமைகளோடுதான் பிறக்கிறார்கள். உங்களுடைய சிறப்புத் திறன்கள் என்னென்ன என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அந்த ஆர்வத்தை நீங்கள் தேடத் தொடங்கலாம். அது கிடைக்கும்வரை நிறுத்தாதீர்கள். இப்போதைக்கு உங்களுக்கு நல்ல வழிகாட்டக்கூடியவர்களை அடையாளம் காணுங்கள்! பின்பற்றுங்கள்!!

source.adhikaalai

Post a Comment

1 Comments

jothi said…
very nice post, & good effort,..