எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் பி.டெக் 3ஆம் ஆண்டு படித்து வந்த நிர்பய் சிங் என்ற மாணவர் நீலாங்கரையில் உள்ள தனது நண்பரை பார்க்கச் சென்றபோது, சத்தியபாமா என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் சிலர் அவரை சுற்றிவளைத்து இரும்பு கம்பிகளால் சரமாரியாக தாக்கியதாகவும், சம்பவ இடத்திலேயே நிர்பய் சிங் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நிர்பய்சிங்கும் அவரது நண்பர்களும், சிங்கின் சொந்த கிராமத்திலிருந்து தங்கள் கல்லூரியில் சேர்ப்பதற்கென்று ஒருவரை அழைத்து வந்திருந்ததாகவும், ஆனால் சத்தியபாமா நிகர்நிலை பல்கலைககழக மாணவர்கள் சிலர் அம்மாணவரைக் கடத்திச்சென்று தங்கள் பல்கலைக்கழகத்தில் சேர்த்து அதற்கான கமிஷனையும் பெற்றுவிட்டதாகவும், அதன் விளைவாக ஏற்பட்ட மோதல்களே இப்பொது நிர்பய்யின் கொலையில் முடிந்திருப்பதாகவும் உதவி போலீஸ் ஆணையர் கே.என்.முரளி கூறினார்.
இதுவரை இக்கொலை தொடர்பாக 8 பேர் கைதாகியிருக்கின்றனர்.
பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே பயின்று வரும் மாணவர்கள் தத்தம் பகுதிகளிலிருந்து மற்ற மாணவர்களை அழைத்து வந்து சுயநிதி நிறுவனங்களில் சேர்த்துவிட்டு அதற்காக கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து கமிஷன் பெற்றுக் கொள்ளும் முறை இருப்பதாகவும், மாணவர்கள் அவ்வாறு ஆட்சேர்ப்பு தரகராக செயல்படுவதை கல்லூரி நிர்வகங்கள் ஊக்குவிப்பதாகவும், இப்போக்கிற்கு முடிவு கட்டவேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
0 Comments