முதல் நிலை
அறிமுக நாட்களிலும், அடுத்த
சில நாட்களிலும் - நீ வீசிச்சென்ற
புன்னகைதான்,
என் சித்தம் கலைத்தது,
மனதிலோர் யுத்தம் முளைத்தது.
அகத்தில் ரசித்தாலும் - அதை
புறத்தில் முறைத்தேன் நான்..
இரண்டாம் நிலை
மீண்டும் தொடர்ந்த சில நாட்களில்- என் மனம்
என்னைக் கேட்காமல் - தினம்
உன்னை எதிர்ப்பார்க்கும்
நீ வந்தால் சிறகடிக்கும்
இல்லையேல் நகம் கடிக்கும்
உன் வருகைக்கு கோஷமிடும்
வந்ததும் பார்க்காததாய் வேஷமிடும்
மூன்றாம் நிலை
நீ நட்புடன் பழக வந்தாய் - ஆனால்
நான் வெறுப்பதாய் விலகிச்சென்றேன்,
என் கற்புடன் விளையாட வந்த
கள்வனோ என பயந்தேன்
பின் நாளில், கற்பிற்கு மட்டுமல்ல
காலத்திற்கும் உடனிருக்கும் கணவன் - நீ
என அறிந்தேன்.
அன்று முதல்..
கற்பிற்குள் ஒளித்து வைத்து
உனக்கான காதலையும் நான் சுமந்தேன்..
நான்காம் நிலை
இரவில், போர்வைக்குள் விழித்திருந்தேன்
சிலகாலம்..
காதலின் கனவுகள் போர்த்தி தூங்கினேன்
சிலகாலம்..
வெளியில் மௌனம் சாதித்தேன்,
உள்ளத்தில் வார்த்தைகள் சேமித்தேன்,
காதல் சொல்ல ஒரு தருணமும் யூகித்தேன்.
ஆனால்,
உன் பார்வை சந்தித்த போது
சிதறிப்போயின சேமித்த வார்த்தைகள்.
எனினும்,
கஜினியாய் படையெடுத்தேன் - உன்னிடம்
காதலைச் சொல்ல,
ஆனால் இன்றுவரை இயலவில்லை - என்பதை
வேறு எப்படிச் சொல்ல?
ஐந்தாம் நிலை
காதல் தெரிவிப்பதென்பது
ஆண்களின் வேலை,
ஏற்பதும், தவிர்ப்பதும்
பெண்களின் லீலை.
எனவே காதலா, எப்போது சொல்வாய்?
என்னுடைய காதலை
உன்னுடைய வார்த்தைகளாய்.
அப்போது தருவேன் நான்
முத்தமாய் அன்பையும்
மொத்தமாய் என்னையும். எழுதியவர் : சக்தி குமார்-கோவை
3 Comments