சிங்கப்பூரில் உள்ள தஞ்சோங் பகார் ரயில் நிலையம் உட்லண்ட்சுக்கு இடம் மாறுகிறது

தஞ்சோங் பகாரில் தற்போது செயல்படும் “KTMB” ரயில்வே நிலையத்தை 2011 ஜூலை முதல் தேதிக்குள் உட்லண்ட்சுக்கு இடம் மாற்ற மலேசிய, சிங்கப்பூர் பிரதமர்கள் இணங்கி உள்ளனர். பிரதமர் லீ சியன் லூங்கும் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கும் திங்கட்கிழமை சிங்கப்பூரில் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இவ்விவரம் அறிவிக்கப்பட்டது. உட்லண்ட்ஸ் ரயில் சோதனைச் சாவடியில் மலேசியாவின் ரயில்வே மற்றும் சுங்கத்துறை, குடிநுழைவு, தொற்றுத் தடைக்காப்பு ஆகிய வசதிகளை அமைக்கவும் இருநாட்டுப் பிரதமர்களும் இணங்கினர். தஞ்சோங் பகார் ரயில்வே நிலையத்தின் இடமாற்றத்திற்குச் சிங்கப்பூர் துணை புரியும். அதோடு, ரயில் பயணிகளின் வசதிக்காக, உட்லண்ட்ஸில் அமைக்கப்படும் KTMB ரயில்வே நிலையத்திலிருந்து அருகிலுள்ள பெருவிரைவு இரயில் நிலையத்திற்குச் செல்ல பேருந்து சேவையும் உறுதி செய்யப்படும். இவ்வாண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் “எம்எஸ் பிரைவெட் லிமிட்டெட்” எனும் நிறுவனமும் அமைக்கப்படும் என்று இரு நாடுகளும் அறிவித்தன. இந்நிறுவனத்தில், கசானா நேஷனல் பெர்ஹார்ட்டின் மூலம் மலேசியா 60 விழுக்காடு பங்கு வைத்திருக்கும். சிங்கப்பூரின் 40 விழுக்காடு பங்கு தெமாசெக் ஹோல்டிங்ஸின் கீழ் இருக்கும். சிங்கப்பூரிலுள்ள மலேயன் ரயில்வே நிலம் தொடர்பான இருபது ஆண்டுகால சர்ச்சையை இந்த அறிவிப்பு தீர்த்து வைக்கிறது. இருநாட்டுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இணக்கம் “வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது” என்று மலேசியப் பிரதமர் திரு நஜிப் வர்ணித்தார். நேற்று மேலும் பல அறிவிப்புகளும் செய்யப்பட்டன. பேருந்து மற்றும் எல்லை தாண்டிச்செல்லும் டாக்சி சேவைகள் அதிகரிப்பு, இரண்டாவது கடற் பாலத்தில் தீர்வைக் கட்டணம் குறைப்பு, ஜோகூரின் இஸ்கந்தர் வட்டாரத்தில் கூட்டு மேம்பாடு ஆகியவை அவற்றில் உள்ளடங்கும்.இருநாட்டுக்கும் இடையிலான பேருந்து சேவைகள் இரட்டிப்பாக்கப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோகூரிலுள்ள பசார் பக்தி, லர்கின் ஆகியவற்றுக்கும் சிங்கப்பூரில் உள்ள இரண்டு ஒருங்கிணைந்த உல்லாசத் தளங்கள், பூன் லே, ஈசூன், நியூட்டன், சாங்கி விமான நிலையம் ஆகியவற்றுக்கும் இடையில் புதிதாக 8 பேருந்து பயணப் பாதைகள் (ஒவ்வொரு தரப்பிலும் தலா 4) தொடங்கப்படும். இருநாட்டுக்கும் இடையில் அடிக்கடி பயணம் செல்வோருக்காக, மலேசிய தானியக்கக் குடிநுழைவு கடப்புமுறை அமலாக்கப்பட்டுள்ளது.

source.tamilmurasu

No comments: