இணையதளம் மூலம் ரூ. 20 லட்சம் மோசடி

திருப்பூரில் இணையதளம் மூலம் பின்னலாடை நிறுவன கணக்கில் இருந்து ரூ. 20 லட்சம் மோசடி செய்ததாக நைஜீரியா, மும்பையை சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். கோவை தொண்டு நிறுவனத்திடம் இருந்து ரூ. 10 லட்சம் மீட்கப்பட்டது.


திருப்பூரில் சிபி எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் பின்னலாடை வர்த்தம் செய்து வருகிறது. வெளிநாடுகளில் வர்த்தகம் செய்து வரும் இந்த நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்துள்ளது. மேலும் இந்நிறுவனம் இணையதள பண பரிவர்த்தனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் இணைய தள முகவரிக்கு கடந்த மார்ச் மாதம் netsecure@onlinesbi.com என்ற முகவரியில் இருந்து அந்நிறுவனத்தின் வங்கி கணக்கு எண் மற்றும் இணைய தள ரகசிய குறியீட்டு எண்ணை ஆகியவற்றை படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக அனுப்பி வைக்குமாறு தகவல் வந்தது.
மேலும் தில்லியில் இருந்து தொலைபேசி வழியாக படிவம் பூர்த்தி செய்து அனுப்பாவிட்டால் வங்கி கணக்கு முடக்கப்படும் என தெரிவித்த தகவலை தொடர்ந்து அந்த நிறுவனம் வங்கி கணக்கு எண் மற்றும் இணையதள ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை அனுப்பி வைத்தது. இதையடுத்து சிபி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன வங்கி கணக்கில் இருந்து 8 வங்கி கணக்குகளுக்கு இணையதளம் மூலம் ரூ. 20 லட்சம் மாற்றம் செய்து மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.


இந்த மோசடி குறித்து அந்நிறுவனத்தின் கணக்கு மேலாளர் முத்துசாமிசுப்பிரமணியன் திருப்பூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து திருப்பூர் ஏ.எஸ்.பி. (பயிற்சி) விக்ரமன் தலைமையிலான தனிப்படையினர் மகாராஷ்ட்ரா மாநிலம் புனே, தானே போன்ற இடங்களுக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  


விசாரணையில் இணைய தளம் மூலம் ரூ. 20 லட்சம் மோசடி செய்து அப்பணத்தில் இருந்து ரூ. 10 லட்சம் கோவையில் உள்ள தொண்டு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய புனேவை சேர்ந்த பிராஸ்கான் என்பவரை தனிப்படையினர் மகாராஷ்ட்ரா மாநில போலீஸ் உதவியுடன் இம்மாதம் 19 ம் தேதி கைது செய்தனர்.


பிராஸ்கான் அளித்த தகவலின்பேரில் மும்பையில் கார்மென்ட்ஸ் நிறுவனம் நடத்தி வரும் நைஜீரியா நாட்டை சேர்ந்த பென்சான் (27) புனேவில் தனியார் நிறுவனத்தில் பணி செய்யும் அஸ்வின்பராய் (24), புனேவில் ஆன்லைன் வர்த்தகம் செய்யும் ரிஸ்வான்கான் (26) ஆகியோரை போலீஸார் கடந்த 24 ம் தேதி மும்பையில் வைத்து கைது செய்தனர்.


பென்சான், ரிஸ்வான்கான், அஸ்வின்பராய் ஆகியோர் சிபி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன கணக்கில் இருந்து இணையதளம் மூலம் ரூ. 20 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் இந்த கும்பல் தில்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் வர்த்தக நிறுவனங்கள், பொதுமக்களிடம் இருந்து இணையதளம் மூலம் பல லட்சம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.


திருப்பூர், கோவை மாவட்டங்களில் வசிக்கும் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்கள்  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வழக்கில் கோவை தொண்டு நிறுவனம் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளது என சனிக்கிழமை செய்தியாளர் சந்திப்பின்போது  திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வே. பாலகிருஷ்ணன் இதனை தெரிவித்தார். அப்போது ஏ.எஸ்.பி. விக்ரமன், டி.எஸ்.பி. ராஜாராம் ஆகியோர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments