ஜெ குறித்த கட்டுரை நக்கீரன் அலுவலகம் தாக்குதல்

ஜெயலலிதா குறித்த கட்டுரையுடன் வெளியான நக்கீரன் இதழைக் கொளுத்திய அதிமுகவினர், சென்னையில் உள்ள அந்த பத்திரிகையின் அலுவலகம் மீது கடும் தாக்குதல் நடத்தினர்.


'மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்' என்ற தலைப்புடன் ஜெயலலிதா அட்டைப்படம் தாங்கி வெளியாகியுள்ள இந்த வார நக்கீரன் இதழை தமிழகம் முழுக்க அதிமுகவினர் கொளுத்தி வருகின்றனர். ஜெயலலிதாவைப் பற்றி மிகக் கேவலமாக எழுதியுள்ள நக்கீரன் இதழை இனி விற்கக் கூடாது என பல கடைகளையும் அதிமுகவினர் நேரடியாக மிரட்டியுள்ளதாக புகார் கூறப்பட்டது. 

தமிழகம் முழுவதும் எரிப்பு... அமைச்சர்கள் ஆர்ப்பாட்டம்

நக்கீரன் இதழை தமிழகம் முழுக்க அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி எரித்தனர். 

சிதம்பரத்தில் அதிமுக மேற்கு மாவட்டச் செயலர் வி.கே.மாரிமுத்து தலைமையில் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டனர்.

சாத்தூரில் அதிமுக எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார் தலைமையில் பஸ்நிலையம் அருகே வாரப்பத்திரிகையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி எம்எல்ஏ பரஞ்ஜோதி தலைமையிலும், வேலூரில் அமைச்சர் விஜய் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

குடியாத்தம் டவுன், அரூர் மற்றும் பெரும்பாலான மாவட்டத் தலைநகரங்களிலும் அதிமுகவினர் அந்த பத்திரிகையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குன்னூரில் நகராட்சி சேர்மன் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

அலுவலகம் முற்றுகை... தாக்குதல்

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டை ஜானிஜான்கான் தெருவில் உள்ள நக்கீரன் அலுவலகத்தின் மீது அ.தி.மு.கவினர் கடும் தாக்குதல் நடத்தினர். சோடா பாட்டில், பெரிய பெரிய கற்கள் மற்றும் உருட்டுக்கட்டைகள் ஆகியவற்றால் நக்கீரன் அலுவலகத்தைக் கடுமையாகத் தாக்கி சேதப்படுத்தியதோடு, அங்கு நின்ற கார்கள், டுவீலர்கள் ஆகியவற்றையும் அடித்து உடைத்தனர்.

100க்கும் அதிகமான அ.தி.மு.கவினர் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தினர். பாதுகாப்புக்காக வந்த போலீசார் எதையும் தடுக்க முயற்சிக்காமல் அமைதியாக நின்றதாக நக்கீரன் தரப்பு புகார் கூறியுள்ளது. 

மேலும் அதிமுக எம்எல்ஏ கலைராஜன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் போய் அமர்ந்து கொண்டு, நக்கீரன் அலுவலகத்துக்கு எந்த பாதுகாப்பும் தரவேண்டாம் என வற்புறுத்தியதாகவும் பத்திரிகை அலுவலகம் புகார் தெரிவித்துள்ளது.

அ.தி.மு.கவினரின் தாக்குதலைக் கண்டு பயந்து ஜானிஜான்கான் சாலையில் உள்ள கடைக்காரர்களும் பொதுமக்களும் கதவுகளை முடிக்கொண்டு உள்ளேயே இருந்தனர். தாக்குதல் நடந்த போது நக்கீரன் ஆசிரியர் கோபால், இணையாசிரியர் காமராஜ், செய்தியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பத்திரிகை அலுவலகத்துக்குள் இருந்தனர். 

நக்கீரன் அலுவலகத்துக்குள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தொலைக்காட்சி, பத்திரிகை நிருபர்களும் தாக்குதலை நேரடியாக எதிர்கொண்டனர். பிற்பகலுக்குப் பிறகும் தாக்குதல் தொடர்ந்ததாக நிருபர்கள் தெரிவித்தனர். 

நக்கீரன் அலுவலகத்தைப் பூட்டிய எம்எல்ஏ

வேளச்சேரி எம்எல்ஏ அசோக் நக்கீரன் அலுவலக வாசலில் உள்ள கதவுக்கு வெளிபக்கமாக பூட்டு போட்டு, கதவின் மேல் தாக்குதல் நடத்தினார். 

அண்ணாசாலை அருகே அதிமுகவினர் சுமார் 50 பேர் நக்கீரன் ஆசிரியர் கோபாலின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
##################


பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் என்ன வேண்டும் செய்யலாமா என்ன ?

Post a Comment

0 Comments