தமிழக மின் வாரியம் புது முயற்சி


"ஓபி' அடிக்காமல் பணிபுரியும் சிறந்த ஊழியருக்கு, மாதந்தோறும் கவுரவப் பரிசு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. திவாலாகும் மின் வாரியத்தை சீரமைக்க, இந்த புதிய திட்டத்தை, மின் வாரியம் அறிமுகப் படுத்தியுள்ளது.

தமிழக மின்துறை உயரதிகாரிகள், பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக, மின் வாரியத்தின் அனைத்து ஊழியர்களுக்கும், 40 கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன.தினமும் வருகைப் பதிவேடு பராமரித்தல், சரியான மீட்டர்கள் பொருத்தி, 100 சதவீதம் கணக்கிடுதல், 100 சதவீத வசூல், பிரச்னைகள் குறித்து உடனடியாக மேலதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி, நிலைமையை சரி செய்தல் உள்ளிட்ட, பல்வேறு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன.

புதிய திட்டம்:

இதற்கிடையில், மின் வாரியத்தில் உள்ள, அனைத்து வகை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடையே, பணியில் சிறப்பாக செயல்படும் ஒருவரை மாதம்தோறும் தேர்ந்தெடுத்து, அவருக்கு, பரிசு மற்றும் நற்சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முதல் நிபந்தனையே, "ஓபி' அடிக்காமல், ஒழுங்காக அலுவலகத்திற்கு வர வேண்டும்; அடிக்கடி விடுமுறை எடுக்கக் கூடாது; அலுவலக நேரத்தை வீணடிக்காமல், ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தான்.


நிறுவனத்திற்கு நன்மதிப்பை தேடித் தருபவர்' (வேல்யூ கிரியேட்டர்ஸ் ஆப் ஆர்கனைசேஷன்) என்ற பெயரில், இந்த திட்டம் செயல்படும். இதற்காக, மின்துறை உற்பத்திப் பிரிவு இயக்குனர் தலைமையில், தேர்வுக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியினர், ஒவ்வொரு பிரிவு வாரியாக வரும் பரிந்துரை பட்டியலில் உள்ளவர்களில், மாதந்தோறும் ஒருவரை தேர்ந்தெடுப்பர். தேர்வாகும் நபருக்கு, மாதத்தின் கடைசி பணி நாளில், பரிசும், சான்றிதழும் தரப்படும்.

Post a Comment

0 Comments