வாழ்க்கை எனும் பரமபதத்தை வெல்ல என்ன வழி?

வாழ்க்கையில் எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருக்கும்போது யாரும் கடவுளை நினைப்பதில்லை. துன்பம் நேரும்போதுதான் கோயிலுக்கு அலைமோதுகிறார்கள். இந்த வாழ்க்கை எனும் பரமபதத்தில் பாம்பிடம் கடிபட்டு நொடிப்பொழுதில் கீழிறங்கி விடும் மனிதர்களையே இங்கு ஏராளம் காண்கிறோம்! ஏன் இந்த நிலை? இந்த பரமபத விளையாட்டை வெல்ல என்ன வழி?! இதோ சத்குரு சொல்கிறார்.

கடந்தகால கர்மவினை எப்படி செயல்படுகிறது என்பதற்கு ஒரு உதாரணம் பார்க்கலாம். 30 வயதுக்குள் 10 கோடி ரூபாய் சம்பாதித்தித்தாக வைத்துக் கொள்ளுங்கள். ஒன்று அதை செலவழிக்கலாம் அல்லது அதை வளர வைக்கலாம். கடந்த காலத்தில் உங்களுக்குள் சில வளங்களை நீங்கள் உருவாக்கியிருப்பீர்கள். இந்தப் பிறவியில் ஒன்று அதை வளர்க்கலாம், அல்லது வீணடிக்கலாம். விழிப்புணர்வு இல்லாத நிலையில் அது விரயமானால் கூட மிக நிச்சயமாக உங்களுக்குள் அதனுடைய தன்மை ஏதாவது இருக்கும். உங்கள் ஆன்மீகப் பயிற்சிகளால் உங்களுக்குள் இருக்கிற அந்த வளங்கள் இப்போது பொருளாதார வளமாக வெளிப்படலாம். ஒரு நல்ல வீடு, சரியான சூழல், உங்களைச் சுற்றி நல்லவர்கள் இருப்பது போன்றவை. இவை எல்லாம் இருந்தும் கூட அதை நீங்கள் பயன்படுத்தாமல் சோம்பலாக விட்டுவிடவும் கூடும். இதுதான் முழுச்சுற்று. முழுத்தொடர்ச்சி. 

இந்த முழு விளையாட்டே பரமபதம் ஆட்டம் போல் இருக்கிறது என்று நான் திரும்பத் திரும்ப சொல்லுகிற காரணம், ஏணிகளில் ஏறுகிறபோது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். நல்ல கர்மவினைகளின் காரணமாக வருகிற வசதிகளை அனுபவிக்கிறீர்கள். ஒரு காலக்கட்டத்தில் மீண்டும் பாம்பு கடித்து கீழே இறங்குகிறீர்கள். அப்போது மீண்டும் துன்பம் துவங்குகிறது. என்னவென்று பார்த்து மீண்டும் வளரத் துவங்குகிறீர்கள். மீண்டும் கீழே போகவும் நேரும். இப்படித்தான் முட்டாள்தனமாக தங்கள் சக்திநிலைகளை வீணடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
போதிய அளவு அறிவுக் கூர்மையாக உள்ளவர்கள், ஒவ்வொரு மூச்சையும் வளர்ச்சியை நோக்கி ஒரு அடியாகத் எடுத்து வைக்க முடியும். அதற்கு வாய்ப்பு நிறைய இருக்கிறது. பலமுறை ஒரு மனிதருக்கு நினைவுபடுத்தியும் கூட விழித்துக்கொள்ளாமல் தங்கள் வசதிக்குள்ளேயே தூங்கிக் கொண்டு இருந்தால் நாங்கள் ஏதும் செய்ய இயலாது. அவர் மீண்டும் துன்பப்பட்டு வளர்ச்சிக்கான முயற்சியில் இறங்க வேண்டியதுதான். 

இந்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம் மக்களுக்குக் கூட முழுமையான ஆன்மீக வளர்ச்சி நிகழ்வதில்லை. மற்றவர்கள் நல்லது நடக்கிறபோது சிரிக்கிறார்கள், தீமை நடக்கிறபோது அழுகிறார்கள். எப்படியிருந்தாலும் ஏற்றுக்கொண்டு சமச்சீராக இருப்பவர்கள் இந்த உலகில் மிகச் சிலர்தான். அவர்களுக்கு எதுவும் ஒரு பெரிய மகிழ்ச்சியுமில்லை, எதுவும் பெரிய சிக்கலுமில்லை. எல்லாமே அவர்கள் விடுதலை அடையக்கூடிய வாழ்வின் வெவ்வேறு சூழ்நிலைகள் தான். மற்றவர்கள் சூழல் எப்படி தள்ளுகிறதோ, அதற்கேற்ப ஆடு, மாடுகளைப் போல போவார்கள். மனித உடம்பிலிருக்கிறார்களே தவிர அடிப்படையில் வேறு வித்தியாசமில்லை.
இன்று மனிதர்கள் வாழ்கிற வாழ்க்கைக்கும், விலங்குகள் வாழ்கிற வாழ்க்கைக்கும் தரத்தின் அடிப்படையில் பெரிய வித்தியாசம் இருக்கிறதா என்ன? எண்ணிக்கையளவில் வேண்டுமானால் இருக்கலாம். உங்கள் செயல்கள் கூடுதலாக இருக்கின்றன. நீங்கள் கார் ஓட்டுகிறீர்கள், டெலிவிஷன் பார்க்கிறீர்கள், பல அபத்தங்களைச் செய்கிறீர்கள். ஆனால் தரத்தின் அடிப்படையில் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. அந்த வித்தியாசம் வரவேண்டுமானால் அது விழிப்புணர்வு மூலமாகத்தான் வரமுடியும். வேறு வழியில்லை. 
புத்திக்கூர்மையை பலரும் விழிப்புணர்வு என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் விழிப்புணர்வு என்பது இன்னும் ஆழமான ஒரு பரிமாணம். உங்களுக்குள் விழிப்புணர்வு எழுகிறபோது அன்பும், பரிவும் இயல்பாகப் பெருகும். அதன்பின் உங்கள் ஒவ்வொரு சுவாசமும் கூட வளர்ச்சியை நோக்கிப் போகும் ஒரு படிநிலையாக அமையும்.

source.dinamalar

Post a Comment

0 Comments