பாலியல் புகாருக்கு ஆளாகும் ஆசிரியர் நீடிக்கக்கூடாது: தமிழக அரசு உத்தரவு

by 8:24 AM 1 comments
மாணவர்களிடம் பாலியியல் நடவடிக்கையில் ஈடுபடும் எந்த ஆசிரியரும் தொடர்ந்து பணியில் நீடிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் த.சபீதா வெளியிட்டுள்ள புதிய அரசாணையில்,"பள்ளி மாணவர்களுக்கு முன் உதாரணமாகவும் வழிகாட்டியாகவும் செயல்படவேண்டிய ஆசிரியர்கள் சிலர் பள்ளிகளில் படிக்கும் சிறு குழந்தைகள் உட்பட மாணவ-மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான முறையில் நடந்து கொள்வது குறித்தும் அதனால் மாணவர் சமுதாயம் குறிப்பாக பெண்குழந்தைகள் மோசமாக பாதிக்கப்படுவது குறித்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த அவலநிலையை உடனடியாக களையவும் மாணவ சமுதாயம் ஆரோக்கியமான சூழ்நிலையில் உருவாகுவதற்கும் ஆசிரியர்கள் பள்ளி மாணவ-மாணவிகளிடம் மிகுந்த அக்கறையுடனும் கடமை உணர்ச்சியுடனும் ஆசிரியர் பணி செய்யவும் பள்ளிக்குழந்தைகள் மற்றும் மாணவ-மாணவிகளிடம் ஆசிரியர்கள் தவறான முறையில் நடந்து கொள்ளும் நிலையை முற்றிலும் தவிர்ப்பதற்கும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே கீழ்கண்டவாறு அரசாணையிடப்படுகிறது.

ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

* தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு கடும் தண்டனையாக அதாவது கட்டாய ஓய்வு, பணிநீக்கம், பணியுறவு (டிஸ்மிஸல்) போன்ற தண்டனை வழங்கப்படும். அரசுப்பள்ளிகளின் ஆசிரியர்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு அரசுப்பணியாளர் நடத்தை விதி 19(2) இதற்கு பொருந்தும். இந்த விதியை மீறுபவர்களுக்கு மேலே குறிப்பிட்ட 3 தண்டனைகளுள் ஒன்று வழங்கப்படவேண்டும் என தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல் முறையீடு) விதிகளில் விதி-8ல் கூறப்பட்டுள்ளது.

* சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச்சான்றுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். அதாவது சம்பந்தப்பட்ட துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

* பள்ளிக்குழந்தைகளும் மாணவ-மாணவிகளும் பிற நபர்களின் தவறான நடவடிக்கைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். ஆசிரியர்கள் தவறான செயல்களில் ஈடுபடாதவண்ணம் தகுந்த உளவியல் ஆலோசகர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்படவேண்டும்.

* பள்ளி மாணவர்களின் மனநிலை பாதிக்கும் பிரச்சினைகளை போக்குவதற்கு உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் உளவியல் ஆலோசகர்கள் உதவியாளர் மற்றும் அனைத்துவகை வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வும் ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படவேண்டும்"என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.