நரிக்குறவ மாணவரின் படிப்பு செலவை ஏற்ற ஜீவா!


தர்மபுரியைச் சேர்ந்த நரிக்குறவ மாணவர் ஒருவரின் எம்பிபிஎஸ் படிப்புச் செலவு முழுவதையும் தானே ஏற்பதாக நடிகர் ஜீவா அறிவித்துள்ளார்.
தருமபுரி அருகில் உள்ள வெள்ளிமலை வாழ் நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த மாணவன் ராஜபாண்டி. 12ம் வகுப்பில் இந்த மாணவன் எடுத்த மதிப்பெண்கள், 1167.
தனக்கு மருத்துவ படிப்பு எம்பிபிஎஸ் படிக்கவேண்டும் என்று ஆசை என்றும், அதற்கு நிதி உதவி வேண்டும் என்றும் ஊடகங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தான் ராஜபாண்டி.
இதைத் தெரிந்து கொண்ட முன்னணி நடிகர் ஜீவா, தானே முன் வந்து, இதற்கதான முழு செலவையும் ஏற்றுள்ளார்.
இதுகுறித்து ஜீவா கூறுகையில், "நான் டிப்ளமா வரைக்கும்தான் படித்தேன். அப்புறம் நடிக்க வந்துவிட்டேன். நான்தான் சரியாகப் படிக்கவில்லை. இந்த மாணவனையாவது படிக்க வைப்போமே என்ற எண்ணத்தில், ராஜபாண்டி பற்றி கேள்விப்பட்டு இந்த உதவியை செய்கிறேன்.
இவர் படிப்புக்கும், படித்து முடிக்கும் வரை இவருக்கு ஆகும் செலவையும் நானே செய்வதாக சொல்லியிருக்கிறேன். அதோடு ராஜபாண்டி மேற்கொண்டு எம் எஸ் படிக்க ஆசைப்பட்டாலும், படிக்கவைப்பேன். பொதுவாக ஒருகை கொடுப்பது இன்னொரு கைக்கு தெரியக் கூடாது என்று சொல்வார்கள். நான் நடிகனாக இருப்பதால் என்னைப் பார்த்து மற்றவர்களும் முன் வருவார்கள் என்றுதான் செய்தியாளர்களிடம் கூட சொல்கிறேன்," என்றார்.

பயனாளி மாணவன் ராஜபாண்டி பேசும்போது, "என் அம்மா என்னை மிகவும் கஷ்டப் பட்டு எங்க ஆளுங்களோட குலத்தொழில் செய்துதான் படிக்க வைத்தார்கள். அவர்கள் பெயரைக் காப்பாற்றுவேன். நடிகர் ஜீவா பெயரையும் காப்பாற்றுவேன். மருத்துவர் ஆனதும், எங்கள் இன மக்களுக்கு சேவை செய்வதே என் நோக்கம்," என்றார்.