சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி கட்டத்தில் 'திரில்' வெற்றி

ஐபிஎல் 5 தொடரில்  முதல் போட்டியில் 206 ரன்களை சேஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக ஆடி வெற்றி பெற்றது. துவக்கத்தில் டு பிளசிஸ், மார்கல் ஆகியோரின் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் 5 தொடரில்  முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்ளூர் அணியினர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தனர்.

துவக்க வீரர்களாக களமிறங்கிய கிறிஸ் கெய்ல், அகர்வால் ஜோடி சிறப்பான துவக்கத்தை அளித்தனர். அதிரடியாக ஆடிய அகர்வால் 26 பந்துகளில் 3 சிக்ஸ், 5 பவுண்டரிகள் அடித்து, 45 ரன்கள் எடுத்தார். பின்னர் பந்தை பவுண்டரிக்கு விரட்ட முயன்ற போது, பிராவோவின் கையில் கேட்சாகி வெளியேறினார்.

துவக்கத்தில் பொறுமையாக ஆடி கிறிஸ் கெய்ல், அகர்வால் வெளியேறிய பிறகு தனது வழக்கமான அதிரடிக்கு மாறினார். ரெய்னாவின் முதல் ஓவரிலேயே 3 சிக்ஸ் அடித்த அவர் அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினார்.

35 பந்துகளை சந்தித்து 6 சிக்ஸ், 2 பவுண்டரிகளை விளாசிய கெய்ல் 68 ரன்கள் எடுத்த நிலையில் ஜடோஜாவின் பந்தில் அவுட்டானார். அடுத்த வந்த டி வில்லியர்ஸ் 4 ரன்களில் ஏமாற்றினார்.

பொறுப்பாக ஆடி வந்த விராத் கோஹ்லி 2 சிக்ஸ், 5 பவுண்டரிகளை அடித்து அரைசதம் கடந்து அதிரடிக்கு தாவினார். இறுதிக் கட்டத்தில் வந்த திவாரி 8 ரன்களில் திருப்திப்பட்டு கொண்டார்.

கடைசி ஓவரை வீசிய போலிஞ்சர் சிக்ஸ் அடிக்க முயன்ற விராத் கோஹ்லியை 57 ரன்களில் வெளியேற்றினார். அடுத்த வந்த கேப்டன் வெட்டோரி 1 ரன்னில் ரன் அவுட்டானார். மேலும் ராஜூ, புஜாரா ஆகியோர் டக் அவுட்டாகினர். கடைசி பந்தில் வினய் குமார் ஒரு சிக்ஸ் அடிக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கெட்களை இழந்து 205 ரன்களை குவித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் போலிஞ்சர் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களையும், மார்கல், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

206 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மந்தமான துவக்கம் கிடைத்தது. சோம்பிலாக ஆடிய முரளிவிஜய் 11 ரன்களை எடுத்து முரளிதரன் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

துவக்க வீரர் டு பிளசிஸ் மட்டும் அதிரடியாக ஆடினார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்த சுரேஷ் ரெய்னா 23 ரன்களில் அவுட்டானார். அதிரடியாக ஆடி அரைசதம் கடந்த டு பிளசிஸ் 71 ரன்களில் முரளிதரனின் பந்திலேயே அவுட்டானார். அதன்பிறகு வந்த டோணி 2 சிக்ஸ் அடித்து 40 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

விராத் கோஹ்லி வீசிய 18வது ஓவர் சென்னை சூப்பர் கிங்க் அணிக்கு சாதகமாக அமைந்தது. டோணிக்கு பிறகு ஆட வந்த அல்பி மார்கல் 18வது ஓவரில் 3 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து மொத்தம் 28 ரன்களை குவித்தார்.

இதனையடுத்து கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் அதிரடி மார்கல் கடைசி ஓவரின் முதல் பந்தில் அவுட்டானார். இதையடுத்து போட்டியின் விறுவிறுப்பு அதிகரித்தது.

அதன்பிறகு பிராவோ 1 சிக்ஸ், 2 பவுண்டரிகளை அடித்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜடேஜா பவுண்டரி அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் சார்பில் முரளிதரன் 3 விக்கெட்களை எடுத்தார்.

No comments: