தலைவரை நியமிக்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

காவிரி நடுவர் மன்றத்துக்கு புதிய தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், காவிரி நடுவர் மன்றத் தலைவராக இருந்த என்.பி.சிங், உடல்நலக் குறைவு காரணமாக ராஜினாமா செய்துவிட்டார் என்று நான் அறிகிறேன். காவிரி நீரை மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்து அளிப்பது குறித்து காவிரி நடுவர் மன்றம் 5-2-2007 அன்று தனது இறுதி தீர்ப்பினை வழங்கியது என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை இதுவரை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்படவில்லை. இந் நிலையில், காவிரி நதிநீர் தாவா தொடர்பான பிரச்சனையில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு விளக்கம் அளிக்கக் கோரி மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் தாவா சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு கடந்த 2007ம் ஆண்டில் இருந்து காவிரி நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்கக் கோரி தமிழக அரசு 16-3-2012 அன்று காவிரி நடுவர் மன்றத்தில் மனு செய்தது. இந்த மனு, 17-4-2012 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நடுவர் மன்றம் 23-3-2012 அன்று அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், காவிரி நடுவர் மன்றத் தலைவர் என்.பி.சிங் ராஜினாமா செய்துவிட்டதால், அன்றைய தினம் அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், காவிரி நடுவர் மன்றத் தலைவரின் ராஜினாமா, தமிழக மக்களின் மனதில் கடும் கவலையையும், ஆபத்து வருமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் தாவா சட்டப் பிரிவு 4 (2)-ன்படி காவிரி நடுவர் மன்றம் தலைவர் இல்லாமல் காவிரி நடுவர் மன்றம் செயல்பட முடியாது.

இந்த சட்டப்பிரிவு 5 ஏ-ன்படி, காவிரி நடுவர் மன்றத் தலைவர் இல்லாமல் தீர்ப்பாய நடவடிக்கைகள் எதையும் தொடர முடியாது. இந்தச் சூழ்நிலையில், தாங்கள் நேரடியாகத் தலையிட்டு காவிரி நடுவர் மன்றத்திற்கு உடனடியாக புதிய தலைவரை நியமிக்க வேண்டுëம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Post a Comment

0 Comments