ஐபிஎல் 5: மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி

ஐபிஎல் 5 தொடரில் இன்றைய போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் நிர்ணயித்த 139 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் சர்மா கடைசி வரை களத்தில் நின்று, கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

ஐபிஎல் 5 தொடரில் இன்றைய போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் போட்டியின் டாஸ் வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டன் சங்கக்காரா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

இதையடுத்து களமிறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் துவக்க வீரர்கள் பார்த்திவ் பட்டேல் 1 ரன்னில் ஏமாற்றினார். அடுத்து வந்த பாரத் சிப்லியும் 1 ரன்னில் அவுட்டானார். அணியின் பரிதாப நிலையை உணர்ந்த ஷிகர் திவான், டேனியல் கிறிஸ்டியன் ஜோடி அதிரடியாக ஆடியது.

24 பந்துகளில் 4 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்த திவான் 41 ரன்கள் எடுத்து மலிங்காவின் பந்தில் அவுட்டானார். இதன் பிறகு வந்த கேப்டன் சங்கக்காரா பொறுப்பாக ஆடி வந்தார். மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர் முனாப் பட்டேல் வீசிய 12வது ஓவரின் 3வது பந்தில் சங்கக்காரா 16 ரன்கள் எடுத்த நிலையில் போல்டானார்.

ஆனால் அம்பயர்கள் இருவரும் அவுட் கொடுக்க மறுத்தனர். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியினரின் நீண்ட வாக்குவாதத்திற்கு பிறகு அம்பயர்கள் வேறு வழியில்லாமல் டிவி ரிப்ளே கொடுத்தனர்.

டிவி ரிப்ளேயில் அவுட்டானது தெளிவாக தெரிந்ததால், சங்கக்காராவிற்கு அவுட் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சில் டெக்கான் சார்ஜர்ஸ் பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க திணறினர். 2 சிக்ஸ் அடித்த டேனியல் கிறிஸ்டியன் 39 ரன்களில் அவுட்டானார்.

இறுதிக் கட்டத்தில் கேமரூன் வைட்டை தவிர மற்ற பேட்ஸ்மேன்களின் விக்கெட்கள் வரிசையாக சரிந்தன. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 9 விக்கெட்களை இழந்து 138 ரன்களில் சுருண்டது. மும்பை இந்தியன்ஸ் அணியின் முனாப் பட்டேல் 4 விக்கெட்களும், மலிங்கா 3 விக்கெட்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் துவக்க வீரர் சுமன்(5), டேல் ஸ்டேயின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பிறகு அதிரடி வீரர் ரிச்சார்ட் லிவி 3 ரன்களில் ஸ்டேயின் பந்தில் போல்டானார்.

அடுத்த வந்த ராய்டு 19 ரன்களில் கேட்சாகி அவுட்டானார். ரோஹித் சர்மா மட்டும் பொறுப்பாக ஆடி அரைசதம் கடந்தார். இந்த நிலையில் அவருக்கு ஒத்துழைப்பு அளித்து அதிரடியாக ஆடிய போல்லார்டு 3 சிக்ஸ் அடித்து 24 ரன்களில் அவுட்டானார்.

சற்றுநேரம் நிலைத்து நின்று ஆடி தினேஷ் கார்த்திக் 7 ரன்களில் போல்டானார். இதனால் கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்ற நிலை ஏற்பட்டது. ரோஹித் சர்மா, பிராங்க்ளின் ஜோடி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிக்ஸ் அடித்த ரோஹித் சர்மா அணியின் வெற்றியை உறுதி செய்தார். அரைசதம் கடந்த ரோஹித் சர்மா 5 சிக்ஸ், 4 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் சார்பில் டேல் ஸ்டேயின் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்கள் எடுத்தார்.

ஆட்ட நாயகன் விருது:

இன்றைய போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் சர்மா 73 ரன்கள் எடு்த்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இவரது ஆட்டத்தை பாராட்டி இவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 

No comments: