கிரிக்கெட் சூதாட்டத்தில் நடிகை தொடர்பு * இந்தியா-பாக்., அரையிறுதியில் அதிர்ச்சி


கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது. இம்முறை "பாலிவுட்' நடிகை ஒருவருக்கு தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது. உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் மோதிய போட்டியை வைத்து பெருமளவில் சூதாட்டம் நடந்ததாக பிரிட்டன் பத்திரிகை ஒன்று அதிர்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.சி.சி., விசாரணை நடத்த உள்ளது.
பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகளின் முடிவை சூதாட்ட ஏஜன்ட்கள் நிர்ணயிக்கின்றனர். இவர்கள் சில முன்னணி வீரர்களை தங்கள் வலைக்குள் வைத்துக் கொண்டு, சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். கடந்த 2010ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிர் ஆகியோர் "ஸ்பாட்-பிக்சிங்' எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டு, ஜெயில் தண்டனை பெற்றனர். இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் இங்கிலாந்தின் எசக்ஸ் கவுன்டி அணியை சேர்ந்த மெர்வின் வெஸ்ட் பீல்டு என்ற பவுலர், சூதாட்ட புள்ளிகளிடம் இருந்து பணம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கும் ஜெயில் தண்டனை கிடைத்தது.
ரகசிய ஆய்வு:
தற்போது, சூதாட்ட பிரச்னை குறித்து பிரிட்டன் பத்திரிகை "சண்டே டைம்ஸ்' ரகசிய புலனாய்வு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், பேட்ஸ்மேன் வேண்டுமென்றே மந்தமாக ஆட, அவருக்கு ரூ. 35 லட்சம், பவுலர்கள் ரன்களை வாரி வழங்க, ரூ. 40 லட்சம், போட்டியின் முடிவை உறுதி செய்யும் வீரர் அல்லது நிர்வாகிக்கு ரூ. 6 கோடி வரை சூதாட்ட புக்கிகள் கொடுப்பது தெரிய வந்துள்ளது. 
உலக கோப்பை:
கடந்த ஆண்டு மொகாலியில் நடந்த உலக கோப்பை அரையிறுதியில் இந்திய அணி, பாகிஸ்தானை வென்றது. இப்போட்டியிலும் பெருமளவு சூதாட்டம் நடந்துள்ளதாம். சூதாட்டக்காரர்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களை தங்களது வலைக்குள் வைத்துள்ளனர். இவர்களை கவர, பாலிவுட் நடிகை ஒருவரை பயன்படுத்திய விஷயத்தையும் "சண்டே டைம்ஸ்' அம்பலப்படுத்தியுள்ளது. இந்த நடிகையை பற்றிய விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. 
கவுன்டியில் "ஜோர்':
தவிர, இங்கிலாந்தின் கவுன்டி போட்டிகளில் தான் சூதாட்டம் ஜோராக நடக்கிறதாம். இதனை டில்லியை சேர்ந்த சூதாட்ட ஏஜன்ட் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இங்கு முக்கியமில்லாத போட்டிகள் நடப்பதால், யாரும் கண்காணிப்பதில்லை. இதனால், எவ்வித சிரமும் இல்லாமல் பெருமளவு பணம் சம்பாதிக்க முடிவதாக, அவர் தெரிவித்துள்ளார். 
சூதாட்டம் தொடர்பாக தான் சேகரித்த அனைத்து தகவல்களையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம்(ஐ.சி.சி.,), "சண்டே டைம்ஸ்' பத்திரிகை வழங்கியுள்ளது. இதன் மீது ஐ.சி.சி., விசாரணை நடத்த உள்ளது. இதில், பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இது குறித்து ஐ.சி.சி., செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,""சட்டவிரோதமான கிரிக்கெட் சூதாட்டம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு போட்டியின் போதும் கோடிக்கணக்கில் பந்தய தொகை கட்டப்படுகிறது. எனவே, போட்டியின் முடிவை சூதாட்ட புள்ளிகள் மாற்றி விடுகின்றனர் என்ற அச்சம் தொடர்கிறது. "சண்டே டைம்ஸ்' பத்திரிகை குழுவினருக்கு நன்றி. இவர்கள் தந்த தகவல்கள் அடிப்படையில், தீவிர விசாரணை நடத்தப்படும்,''என்றார். 

No comments: