ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி: இந்தியா மீது அமெரிக்கா கோபம்

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைக்குமாறு இந்தியாவை அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
 ஈரானிடமிருந்து அதிக அளவு எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இதே அளவுக்கு சீனாவும், துருக்கியும் எண்ணெய் இறக்குமதி செய்கின்றன.
 அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக ஈரான் மீது அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதைத் தடுக்கும் நோக்கில் அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. இருப்பினும் இந்தியா, சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் ஈரான் மீதான தடை விதிப்பை ஆதரிக்கவில்லை.


 அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதிக்கும் பொருளாதாரத் தடையால் ஈரான் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அளிக்கும் ஆதரவும் ஒரு காரணமாகும்.
 இதனால் ஈரானிடமிருந்து இந்தியா, சீனா, துருக்கி ஆகிய நாடுகள் எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டால், அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடையை மேலும் இறுக்கி, ஈரானை பணிய வைத்துவிடலாம் என்று அமெரிக்கா கருதுகிறது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்தியா, சீனா, துருக்கி ஆகிய நாடுகள் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதைக் குறைக்குமாறு கேட்டுக் கொள்ள முடிவு செய்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறினார்.


 ஈரானின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் 12 சதவீதம் முதல் 22 சதவீதம் வரை இந்தியாவும், சீனாவும் இறக்குமதி செய்கின்றன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடை அமலில் இருந்த போதிலும் இவ்விரு நாடுகளும் தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறது. இது தவிர, ஈரானுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தியா தீவிரமாக உள்ளது. ஈரானுக்கு வர்த்தக் குழு ஒன்றும் பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்திய வர்த்தக் குழுவினர் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அமெரிக்கா கேட்டுக்கொண்டது.


 இதேபோல துருக்கியும் தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. அரசு ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் ஈரானுடனான உறவை துண்டித்துக் கொள்ளவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ முடியாது என்று துருக்கி தெரிவித்துவிட்டது.


 இம்மூன்று நாடுகளும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஈரானை சார்ந்திருக்கும் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பிற நாடுகள் ஈரானுக்குப் பதிலாக கச்சா எண்ணெய்யை சப்ளை செய்ய முன்வந்துள்ளன. அவற்றுடன் பேச்சு நடத்தப்படுவதாக ஹிலாரி தெரிவித்தார். இது தொடர்பான நடவடிக்கைகளை ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜப்பான் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.


 ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் அளவை கணிசமாகக் குறைத்துக் கொள்ளும்படி இந்தியா, சீனா, துருக்கியைக் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான பிரச்னைகளை எதிர்கொள்கின்றன. இந்நாடுகளின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியிருப்பதால் பல்வேறு ஆலோசனைகளை தொடர்ந்து அளித்து வருவதாக ஹிலாரி கூறினார்.


 முன்னதாக வெளிநாடு விவகாரம் மற்றும் செனட் குழு உறுப்பினர்களிடம் பேசிய ஹிலாரி, ஈரானுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளை மேலும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
 பிப்ரவரி 6-ம் தேதி அதிபர் ஒபாமா அறிவித்த புதிய தடை விதிப்பின்படி அமெரிக்காவில் செயல்படும் அனைத்து ஈரான் வங்கிகளின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. அதேபோல வெளியுறவுத்துறை, நிதித் துறைகளுக்கு ஈரானுக்கெதிரான பொருளாதார தடையை முழுவதும் அமல்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ஹிலாரி.

No comments: