விஜயகாந்த் மீது ஜெ பாய்ச்சல்- நடந்தது என்ன ?

தகுதி இல்லாதவர்களுக்கு பெரிய பதவி கிடைத்துவிட்டால் இப்படித்தான் நடந்துகொள்வார்கள் என்று இன்று எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்தைக் குறிப்பிட்டு சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா மிகவும் காட்டமாகக் கூறினார்.


courtesy.nakkeran

இன்று அவை கூடியதும், உறுப்பினர்கள் தங்கள் தொகுதி கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, விலைவாசி உயர்வு குறித்து பேசிக்கொண்டிருந்த தேமுதிக எம்.எல்.ஏ சந்திரகுமார், உள்ளாட்சித் தேர்தல் முடிந்த கையோடு அரசு பலவிதங்களில் விலைகளை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்த்தும் முடிவினை இந்த அரசு தைரியம் இருந்திருந்தால் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுத்திருந்தால், தேர்தல்  முடிவுகள் வேறு விதமாக அமைந்திருக்கும் என்று பேசினார்.
அதற்கு முதல்வர் ஜெயலலிதா, இப்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரவிருக்கிறது. அப்போது நீங்களும் தைரியமிருந்தால் தனித்துப் போட்டியிட்டுப் பாருங்கள். யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம் என்று கூறினார்.


அதற்கு விஜயகாந்த் எழுந்து, இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சிதான் ஜெயிக்கும். அது இயல்புதானே என்று கூறினார்.


அதற்கு முதல்வர், இப்போதே எதிர்க்கட்சித் தலைவர் தனது தோல்வியை ஒப்புக்கொள்கிறார் என்றார்.
அதற்கு பதிலளித்த விஜயகாந்த்  ஏன் நீங்கள் கூடத்தான் பென்னாகரம் இடைத்தேர்தலில் தோற்றீர்களே என்றார். இதனால், இரு தரப்புக்கும் வாக்குவாதம் எழுந்தது. தேமுதிக உறுப்பினர்களும் அதிமுக உறுப்பினர்கள் சரமாரியாக குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டே போனார்கள். இருதரப்பும் என்ன பேசினார்கள் என்பது மற்ற யாருக்கும் புரியவுமில்லை. சபையில் கூச்சல் குழப்பம் அதிகரித்தது.
இந்நிலையில், சபையை அமைதி நிலைக்குக் கொண்டுவர, குழப்பம் ஏற்படுத்திய தேமுதிக உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.


இதனிடையே சட்டமன்றத்தில் தேமுதிக உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து நத்தம் விஸ்வநாதன் கேள்வி எழுப்பினார். இதனைக் கேட்ட சபாநாயகர், தேமுதிக உறுப்பினர்கள் கீழ்த்தரமாக நடந்து கொண்ட விதம் குறித்து உரிமைக்குழு விசாரிக்க பரிந்துரை செய்வதாகக் கூறினார்.
இந்நிலையில் முதல்வர் எழுந்து, சபையில் தேமுதிக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதத்துக்கு அவர்களை சபையில் இருந்து சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். ஆனால் சபாநாயகர் குறைந்த பட்ச தண்டனை பரிந்துரையாக உரிமைக் குழுவுக்கு அனுப்பச் சொல்கிறார். தகுதி இல்லாதவர்களுக்கு பெரிய பதவி கிடைத்தால் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை இவ்வளவு கீழ்த்தரமாக எதிர்க்கட்சியினர் நடந்துகொண்டதை வைத்து தெரிந்துகொள்ளலாம். இந்தக் கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும், தேர்தலில் நாங்கள்தான் பெரும் வெற்றியைப்  பெற்றிருப்போம். அதிமுகவை முழு வெற்றி அடையச் செய்வது என்பது  மக்கள் ஏற்கெனவே எடுத்த முடிவு. என் கட்சிக் காரர்கள் வற்புறுத்தியதால்தான் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க அரைகுறை மனதோடு சம்மதம் தெரிவித்தேன். இவர்களுடன் கூட்டணி வைத்ததற்காக வருத்தப்படுகிறேன். வெட்கப் படுகிறேன். வேதனைப் படுகிறேன்... இவர்கள் கூட்டணி இல்லாவிட்டால் அந்தத் தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெற்றிருக்கும். அதிமுக தயவில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் நுழைந்தவர்கள் இவர்கள்... என்று பேசினார்.


அப்போது, கம்யூனிஸ்ட் உறுப்பினர் சௌந்திரராஜன் எழுந்து, இந்த விவகாரத்தை உரிமைக்குழுவுக்கு அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு முதல்வர், பேரவைத் தலைவர் ஏற்கெனவே தீர்மானித்துவிட்டார். அதை யாரும் மாற்றன் முடியாது... என்று பதிலளித்தார்.
இந்தச் சம்பவங்களால் இன்று காலையில் தமிழக சட்டமன்றம் பெரும் அமளிதுமளிப்பட்டது.


******************************************************************************
நயன்தாரா-பிரபுதேவா விவகாரத்தில் என்ன தான் நடக்கிறது


ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அழகு பதுமையாக, கேரள வரவாக வந்தவர் டயானா மரியம் குரியம். படத்திற்காக நயன்தாரா என்று பெயர் மாற்றி ரசிகர்களிடம், ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன் என்று பாடி பரவசப்படுத்தினார். தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்த நயன்தாராவுக்கு சொந்த வாழ்க்கை சோகமாகி கொண்டிருக்கிறது. நட்சத்திரமாய் ஜொலிக்க வந்தவர் நட்சத்திர காதலால் நசுங்கிவிட்டார் என்றே சொல்லலாம். 

சிம்புவுடன் காதல், பிரபுதேவாவுடன் காதல், நெருக்கம் என்று சர்ச்சையில் சிக்கிய நயன்தாராவுக்கு, கல்யாணம் ஆகமாலேயே சிறந்த தம்பதிகளாக பிரபுதேவா-நயன்தாரா தேர்ந்தெடுக்கப்பட்டது தான் ரொம்ப கொடுமை. காதல் கல்யாணம் பண்ணிய முதல் மனைவி ரமலத்தை, குழந்தைகளோடு தவிக்க விட்டு விவாகரத்து கேட்டது இன்னும் பெரிய கொடுமை. இருந்தாலும் காதல் ஒரு பக்கம், பிள்ளை பாசம் ஒரு பக்கம் என்று பிரபுதேவாவிற்கு நயன்தாரா கொடுத்த தண்டனை பெரிதுதான். இதிலிருந்து தப்பிக்கத்தான் ஓடி ஓளிந்து கொண்டு இருக்கிறார் பிரபுதேவா என்கிறது அவரது நெருங்கிய வட்டாரம். 

இதுஒருபுறம் இருக்க தெலுங்கில் நடித்த ஸ்ரீராம ராஜ்யம் படத்தோடு சினிமாவுக்கு முழுக்கு போட்டு, விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்தார் நயன்தாரா. பிரபுதேவா வெடி படம் முடித்த பிறகு கல்யாணம், சொந்த வீடு வாங்கிட்டு கல்யாணம், அப்புறம் இந்தி படம் முடித்து கல்யாணம் என்று கணக்கு போட்டவருக்கு, நிமிஷம் எல்லாம் வருஷமாகி வாட தொடங்கினார். மும்பை, புனே, சென்னை என்று பறந்த காதல் இப்போது ஆட்டம் கண்டு போய் உள்ளது. இதனால் நயன்தாரா, தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கு பணம் கட்ட வேண்டும், தன் செலவுகளை பார்க்க வேண்டும். காசு புரண்ட கையாச்சே என்ன செய்வது. அதுதான் மீண்டும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். 

சரி நயன்தாரா மீண்டும் நடிக்க வந்து விட்டார். அவரது பெற்றோர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டால் அங்கேயும் சொல்ல முடியாத சோகம் நிழலாடுகிறது. சொந்தம், பந்தம், பார்ட்டி, பிறப்பு, இறப்பு என்று எதிலும் கலந்து கொள்ள முடியாமல் குடும்பமே ஒதுக்கப்பட்டது போல் இருக்கிறதாம். பலரும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் வீட்டிலேயே அடைபட்டு கிடக்கிறார்களாம். பிரபுதேவாவுடன் பிரிவு, தெலுங்கு படங்களில் பிஸி என்று நயன்தாராவை பற்றி மீடியாக்களில் பரபரப்பாக வந்தாலும், நயன்தாராவுடன் இப்போது இருப்பது பிரபுதேவாவின் நண்பர் ராஜேஷ் தானாம். ‌தனியார் வங்கியில் ‌மேலாளராக இருக்கும் ராஜேஷ் தான் இப்போது நயன்தாராவின் கால்ஷீட்டை பார்த்து கொள்கிறாராம். 

பிரபுதேவாவை ஒதுக்கி வைத்தவர் இப்போது அவரது ‌நண்பரை மட்டும் மேலாளராக வைக்க காரணம் என்ன...? என்ற கேள்வியை எழுப்புகிறது. மேலும் தெலுங்கில் நடிக்க இருக்கும் படத்திற்கு 1.5கோடி சம்பளம், அடுத்து தமிழில் அஜித்துடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் என்று நயன்தாராவை பற்றி பல தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது. நடக்கும் சம்பவங்களை எல்லாம் பார்க்கும் போது, உண்மையிலேயே பிரபுதேவாவை நயன்தாரா பிரிந்து விட்டாரா...? அல்லது  மக்களை நம்ப வைக்க பிரபுதேவா-நயன்தாரா நடத்தும் நாடகமாக...? என்ற குழப்பத்த‌ில் இருக்கிறது கோடம்பாக்கம்.

No comments: