இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை!

by 10:33 AM 1 comments


எவ்வளவுக்கு பாலிசி..?
யார் பெயரில் பாலிசி..?
லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை பொறுத்தவரை, சம்பாதிக்கும் நபரின் பெயரில் எடுப்பதுதான் சரியானது. இன்ஷூரன்ஸ் என்பதே குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு, அவர் இல்லாத நிலையில் சமாளிப்பதற்கான ஒரு முன்னேற்பாடுதான். இது தெரியாமல், பாசத்தைக் காட்டுகிறேன் என மனைவி மற்றும் பிள்ளைகள் பெயரில் பாலிசி எடுப்பவர்கள் ஏராளம்.
மனைவி வேலைக்குச் செல்லும் பட்சத்தில் அவர் பெயரில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது அவசியம்! வேலைக்குச் சென்று வருமானம் ஈட்ட வாய்ப்பில்லாதவர் எனும் பட்சத்தில் மனைவி மற்றும் பிள்ளைகள் பேரில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது வீண்தான். ஒரு உதாரணத்தைப் பார்ப்போமா?

ஒரு குடும்பத் தலைவர் தன் பெயரில் 10 லட்ச ரூபாய்க்கும், தன் மனைவி பெயரில் 8 லட்ச ரூபாய்க்கும், இரு பிள்ளைகள் பெயரில் தலா 5 லட்ச ரூபாய்க்கும் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தார். குடும்பத் தலைவர் விபத்து ஒன்றில் சட்டென போய் சேர்ந்துவிட, பத்து லட்ச ரூபாய்க்கான இழப்பீடு மட்டும் கிடைத்தது. அது, அவர் ஏற்கெனவே வாங்கி இருந்த கடனை அடைக்கவே சரியாகப் போய்விட்டது. தொடர்ந்து வந்த மாதங்களில் மனைவி மற்றும் பிள்ளைகள் பெயரில் எடுக்கப்பட்ட பாலிசி களுக்கு பிரீமியம் கட்டுவதற்கு வழியில்லாமல் அந்த பாலிசிகள் எல்லாம் வீணாகப் போனது.  

இதற்குப் பதில், குடும்பத் தலைவர் பெயரில் 28 லட்ச ரூபாய்க்கு பாலிசி எடுத்து இருந்தால், இழப்பீடு தொகை அதிகமாக கிடைத்திருக்கும். கடனை அடைத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை அவர் களின் எதிர்கால வாழ்க்கைக்கு பயன்படுத்தி இருக்கலாம்.

காப்பீடா? முதலீடா?
கிட்டத்தட்ட 75 சதவிகிதத் துக்கும் அதிகமானவர்கள் இன்ஷூரன்ஸ் பாலிசியை முதலீடாகவே கருதுகிறார்கள். இது தவறு. இப்படி பார்க்கும்போது அந்த பாலிசி மூலம்  எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதைப் பார்க்க ஆரம்பித்துவிடுகிறோமே ஒழிய, ஆபத்தான காலத்தில் நம் குடும்பத்திற்கு அது எந்த வகையில் உதவியாக இருக்கும் என்பதைப் பார்க்கத் தவறி விடுகிறோம்.  எனவே, குழப்பத்தை தவிர்த்து, இனியாவது இன்ஷூரன்ஸை ஒரு காப்பீடாக மட்டுமே பார்ப்பது நல்லது.
கவரேஜை கவனிங்க!
அதிகபட்சம் 2 அல்லது 3 லட்ச ரூபாய் கவரேஜ் கொண்ட பாலிசிகளை மட்டுமே வைத்திருப்பவர்களே நம்மில் பலர். குறைவான கவரேஜ் கொண்ட பாலிசிகளைத் தேர்வு செய்வது நாம் செய்யக்கூடாத பெருந்தவறு.
குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் கொண்ட பாலிசி களையே நாம் தேர்வு செய்ய வேண்டும்.
உதாரணத்துக்கு, 40 வயதான ஒருவர் ஆண்டுக்கு 10,000 ரூபாய் பிரீமியம் கட்டுகிறார்.  அவர் எடுத்தது யூலிப் பாலிசியாக இருந்தால் அவருக்கு கிடைக்கும் கவரேஜ் ஒரு லட்ச ரூபாய்தான். இதுவே டேர்ம் பிளான் என்கிறபோது இந்த 10,000 ரூபாய் பிரீமியத்துக்கு சுமார் 12 லட்ச ரூபாய் கவரேஜ் கிடைக்கும். பிரீமியம் ஒன்றுதான், ஆனால் நமக்கு கிடைக்கும் கவரேஜ் அதிகம் என்பதால் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க விரும்புகிறவர்கள் முதலில் டேர்ம் பிளானை தேர்வு செய்வதே நல்லது.
பொதுவாக ஒருவரின் ஆண்டு சம்பளத்தைப் போல 10 முதல் 12 மடங்கு தொகைக்கு பாலிசி எடுப்பது நல்லது. உதாரணமாக, ஒருவரின் மாதச் சம்பளம் 20,000 ரூபாய் என்றால், ரூ.24 லட்சம் முதல் ரூ.29 லட்சம் வரையில் பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது. இதற்கான பிரீமியத் தையும் உங்களால் கட்ட முடியும் என்றால் மட்டுமே அந்த தொகைக்கு பாலிசி எடுக்கலாம். இல்லை எனில், எவ்வளவு தொகைக்கு பிரீமியம் கட்ட முடியுமோ, அந்த அளவுக்கான பாலிசியை இப்போது எடுத்து விட்டு, தகுதி அதிகரித்தபிறகு கவரேஜ்-ஐ உயர்த்திக் கொள்ளலாம்.
கார் கடன், வீட்டுக் கடன் போன்றவை வாங்கியிருந்தால் அந்த தொகைக்கு இணையாக டேர்ம் பிளான் எடுத்துக் கொள்வது கட்டாயம். இந்த டேர்ம் பிளானை ஆன்லைன் மூலம் எடுக்கும்போது பிரீமியம் இன்னும் குறையும்.

பிரீமியம் கட்டும் ஆப்ஷன்..!
பிரீமியம் செலுத்துவதற்கான கால இடைவெளியை மாதத்திற்கு ஒருமுறை என்று வைத்துக் கொள்ளாமல் காலாண்டு, அரையாண்டு, ஆண்டுக்கு ஒரு முறை என வைத்திருப்பது நல்லது. மாதம்தோறும் கட்டினால் அதிகமாக பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதோடு, அதற்கான கிரேஸ் பிரீயட் 15 நாட்கள் மட்டுமே என்பதையும் மறக்கக்கூடாது.  

யூலிப் பாலிசி!
காப்பீடு, முதலீடு என இரண்டையும் கலந்து செய்த கலவை இது! குறைந்த கவரேஜ் மட்டுமே இதில் கிடைக்கும். இந்த பாலிசியில் போடப்படும் பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் படுவதால், சந்தையின் ஏற்ற, இறக்கத்தைப் பொறுத்தே நம் லாப, நஷ்டம் அமையும் என்பதை நன்கு புரிந்து கொண்டு நீண்டகால நோக்கில் பணத்தைப் போட நினைக் கிறவர்கள் மட்டுமே இந்த பாலிசியை எடுக்கலாம்.

இதில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் பணத்தைக் கட்டிவிட்டு, மேற்கொண்டு பிரீமியம் கட்டாமல் விடுவது லாபகரமாக இருக்காது. அந்த ஆண்டுகளில் கமிஷன் மற்றும் பிரீமிய ஒதுக்கீடு கட்டணம் அதிகமாகச் சென்றிருக்கும் நான்காவது ஆண்டில் பிரீமியம் கட்டவில்லை எனில், இன்ஷூரன்ஸ் கவரேஜ் மற்றும் இதர கட்டணங்களுக்கு ஏற்கெனவே முதலீட்டிற்காக ஒதுக்கப்பட்டிருக்கும்  யூனிட்களை விற்று பணம் எடுத்துக் கொள்வார்கள். எனவே, பத்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பிரீமியம் கட்ட நினைக் கிறவர்கள் மட்டுமே, யூலிப் பாலிசிகளை தேர்வு செய்யலாம்.
இது யூலிப் பாலிசிகளில் ஒன்றான என்.ஏ.வி. உத்தரவாத திட்டங்களுக்கும் பொருந்தும்.    
வரிச் சலுகை!
வரிச் சலுகைக்காக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறவர்கள்தான் நம்மில் பலர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மார்ச் வரை பலரும் இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்குவது இந்த தவறான புரிதலின் அடிப்படையில்தான்.
இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது எல்லோருக்கும் அவசியமான ஒன்று என அரசாங்கம் நினைப்பதாலேயே தான் அதற்கு வரிச் சலுகை வழங்கி இருக்கிறதே ஒழிய, வரிச் சலுகைக்காக நாம் தேவையில்லாமல் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டிய அவசியமில்லை. அதிகபட்சம் ஒரு லட்ச ரூபாய் வரை இன்ஷூரன்ஸ் பிரீமியத்துக்கு வரிச் சலுகை கிடைக்கும். 10% வரியை மிச்சம் பிடிக்க நினைத்து அதற்கு மேல் இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கு வாரிக் கொடுத்துக் கொண்டிருக் கிறார்கள் பலர்..!
இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும் முன் இந்த விஷயங்களை கவனித்தால் புலம்பவேண்டிய அவசியம் இருக்காது!
                                   **************
SOURCE.VIKADAN

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் ! அசத்துறீங்க சார் ! பாராட்டுக்கள் ! பகிர்வுக்கு நன்றி !