மருதநாயகத்தில் ரஜினி?

மருதநாயகம் படத்தை மீண்டும் தூசி தட்டுகிறார் கமல்ஹாஸன். இந்த முறை ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. அதாவது இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தையும் அவர் களம் இறக்கப் போகிறாராம்.

1997-ம் ஆண்டு மிகுந்த பப்ளிசிட்டியுடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் மருதநாயகன். இங்கிலாந்து மகாராணியே நேரில் வந்து பூஜையில் கலந்து கொண்டார். ஆனால் படம் ட்ரெயிலரோடு நின்றுபோனது. காரணம், இந்தியா பொக்ரானில் போட்ட அணுகுண்டு. இதன் காரணமாக இந்தியா மீது பொருளாதாரத் தடை பாய்ந்தது. இதனால், கமல்ஹாசன் நம்பியிருந்த வெளிநாட்டு நிதியுதவியும் தடைபட்டுப் போனது. எந்த நிறுவனமும் கமல்ஹாசனுக்காக ரூ 50 கோடியை முதலீடு செய்ய அன்று தயாராக இல்லை. இதை அவரே பல பேட்டிகளில் கூறி வந்தார்.

சில காலத்திற்கு முன்பு மருதநாயகத்தை தயாரிக்க சன் நிறுவனத்துடன் பேச்சு நடப்பதாக கூறப்பட்டது. ஆனால் நடக்கவில்லை.

இந்த நிலையில் மீண்டும் மருதநாயகம் குறித்து கமல் பேச ஆரம்பித்துள்ளார். இம்முறை ஆச்சரியமூட்டும் வகையில், இப்படத்தில் தனது ஆருயில் நண்பர் ரஜினியையும் இணைத்துக் கொண்டு களம் இறங்கப் போகிறாராம். இதை கமல்ஹாஸனே மும்பை நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதில், "மருதநாயகத்தில் ரஜினிக்காகவே ஒரு பாத்திரம் உள்ளது. அவருக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். நாங்கள் இருவரும் 10 படங்களுக்கு மேல் இதற்கு முன் நடித்திருக்கிறோம். ஆனால் சமீபத்தில் எந்தப் படமும் சேர்ந்து நடிக்கவில்லை. இந்தப் படத்துக்கு எங்கள் இருவரையும் தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்கவும் முடியாது. ரொம்ப நாள் பூனைக்கு மணி யார் கட்றதுன்னு (ரஜினி - கமல் சேர்ந்து நடிக்கும் படம்) யோசிச்சிக்கிட்டிருந்தாங்க... அதை நானே கட்டப்போறேன்," என்று கூறியுள்ளார்.

கமல் கூறுவதைப் பார்த்தால் அவர்தான் மருதநாயகமாக நடிப்பார் என்று தெரிகிறது. படத்தின் முக்கிய வேடத்தில் ரஜினி நடிக்கலாம் என்று தெரிகிறது.


No comments: