இந்தியா கிரிக்கெட்டில்: கொலைவெறி வெற்றி-HIGHLIGHTS

 ஹோபர்ட் ஒரு நாள் போட்டியில் இலங்கையின் ரன் குவிப்பை தவிடுபொடியாக்கி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது இந்தியா.

முன்னதாக இந்திய ப䮨்து வீச்சை சுக்குநூறாக்கிய இலங்கை அதிரடியாக 320 ரன்கள் குவித்தது. ஆனால் 321 ரன்கள் என்ற வெற்றி இலக்கை 36.4 ஓவர்களில் அடைந்த இந்தியா, போனஸ் புள்ளியுடன் இலங்கையை வீழ்த்தியது. விராத் கோஹ்லியின் அதிரடி சதம், இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.

இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. தொடரில் அதிக வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா 18 புள்ளிகளுடன், இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுவிட்டது. இந்த நிலையில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதின.

இந்திய அணியில் காயமடைந்த இர்பான் பதானுக்கு பதிலாக ஜாகிர்கான் சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. போட்டியின் டாஸ் வென்ற இந்தியா முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது.

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை, துவக்கம் முதலே விக்கெட் தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அணியின் ஸ்கோர் மந்தமாகவே உயர்ந்தது. அணியின் ஸ்கோர் 49 ரன்களாக இருந்த போது, கேப்டன் ஜெயவர்த்தனே, ஷேவாக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதன்பிறகு ஜோடி சேர்ந்த தில்ஷனும், சங்கக்காராவும் இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் அடித்து ரன்களை குவித்தனர். 43வது ஓவர் வரை தொடர்ந்து ஆடிய இவர்கள், அணியின் ஸ்கோரை 249 ரன்களாக உயர்த்தினர். இந்த நிலையில் 87 பந்துகளில் 2 சிக்ஸ் 8 பவுண்டரிகளுடன் சதம் கடந்த சங்கக்காரா போல்டானார்.

பெரேரா 3 ரன்களில் ஏமாற்றினார். ஏஞ்சலோ மேத்யூஸ் 14 ரன்களில் திருப்திப்பட்டு கொண்டார். விக்கெட்கள் ஒருபுறம் சரிந்தாலும், மனம் தளராத தில்ஷன் 150 ரன்களை கடந்தும் அதிரடியை நிறுத்தவில்லை. 3 சிக்ஸ், 11 பவுண்டரிகளை விளாசிய தில்ஷன் 160 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இலங்கை 4 விக்கெட்களை இழந்து 320 ரன்களை எடுத்தது. இந்திய தரப்பில் ஜடேஜா, ஜாகிர்கான், பிரவீன் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 321 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இந்தியா 40 ஓவர்களுக்குள் அடைந்தால் மட்டுமே போனஸ் புள்ளியுடன் இந்தியா வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

அதிரடியில் இந்தியா:

இதையடுத்து இந்திய அணி துவக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. 1 சிக்ஸ், 5 பவுண்டரிகளை விளாசிய ஷேவாக் வழக்கம் போல சீக்கிரமாக வெளியேறினார். அடுத்ததாக சச்சின் அதிரடியை தொடர்ந்த நிலையில், அவரும் 39 ரன்களில் எல்பிடபிள்யூனார். இதனால் யார் இந்தியாவை வெற்றிப் பாதையில் நடத்துவது என்ற கேள்வி எழுந்தது.

பின்னர் விராத் கோஹ்லி, கம்பிரும் சேர்ந்து அதிரடியை தொடர்ந்தனர். ஒரிரு ரன்களை அதிகளவில் எடுத்து வந்த நிலையில், கம்பிர் அரைசதம் கடந்து 63 ரன்களில் ரன் அவுட்டானார்.

ஆனால் கோஹ்லி, ரெய்னாவுடன் சேர்ந்து அணியை வெற்றியை நோக்கி வழி நடத்தினார். ரெய்னா பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த, கோஹ்லி சதம் கடந்தும் அதிரடியை தொடர்ந்தார். 86 பந்துகளில் 3 சிக்ஸ் 16 பவுண்டரிகளை விளாசிய கோஹ்லி 133 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

அவருக்கு உறுதுணையாக இருந்த ரெய்னா 24 பந்துகளில் 1 சிக்ஸ் 3 பவுண்டரிகளுடன் 40 ரன்களை எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். 36.4 ஓவர்களில் இந்தியா நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கை எட்டியது. இலங்கை தரப்பில் 7.4 ஓவர் வீசிய மலிங்கா 96 ரன்களை கொடுத்து இந்தியாவுக்கு உதவினார்.

இதன்மூலம் இந்தியா போனஸ் புள்ளியுடன் இலங்கையை வீழ்த்தி உள்ளது. நாளை மறுநாள் ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் இலங்கை தோல்வி அடைந்தால், இந்தியா இறுதிப்போட்டியி்ல் பங்கேற்க தகுதிப் பெறும்.
**************************No comments: