தோனி முடிவால் அதிருப்தி


 தோனியின் சுழற்சி முறை "பார்முலாவால்' இந்திய அணியில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இவர், தனக்கு பிடித்தமான ரோகித் சர்மா, ரெய்னாவை தக்க வைக்கவே "சீனியர்களை' பலிகடா ஆக்குவதாக குற்றம்சாட்டப்படுகிறது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் இவரிடம் இருந்து, கேப்டன் பதவியை பறிப்பதற்கான வேலைகளும் மும்முரமாக நடக்கின்றன.
முத்தரப்பு ஒருநாள் தொடரில் சச்சின், சேவக், காம்பிர் ஆகிய "டாப்-ஆர்டர்' வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்படும் என தோனி தெரிவித்தார். இதன்படி சேவக் "வெளியே' இருந்தால், சச்சின் "உள்ளே' வருவார். ஒரு போட்டியில் காம்பிருக்கு ஓய்வு தரப்பட்டது. "சீனியர்' வீரர்களான இவர்கள் "பீல்டிங்கில்' மந்தமாக செயல்படுவதாக இன்னொரு குண்டை தூக்கி போட்டார் தோனி. இதில், ஓரளவுக்கு தான் உண்மை உள்ளது. சச்சின், 38, "ஸ்லிப்' பகுதியில் சிறந்த "பீல்டரே'. காம்பிர், 30, டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கு மிக அருகில் சிறப்பாக "பீல்டிங்' செய்யக்கூடியவர். சேவக், 33, மட்டுமே அவ்வப்போது சொதப்புவார்.
இது பற்றி பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த வீரர் ஒருவர் கூறுகையில்,""இந்திய அணியின் பலம் "பீல்டிங்' அல்ல "பேட்டிங்' தான். 2011ல் "பேட்டிங்' பலத்தால் தான் உலக கோப்பை வென்றோம். 2007ல் "டுவென்டி-20' உலக கோப்பையில் காம்பிர் ரன் மழை பொழிந்தார். இதே போல யுவராஜ் ஒரே ஒவரில் 6 சிக்சர் விளாசியது போன்றவற்றால் தான் சாம்பியன் பட்டம் வெல்ல முடிந்தது,'' என்றார்.
காம்பிர் கோபம்:
தோனி மீது அதிக கோபத்தில் இருப்பவர் காம்பிர் தான். முத்தரப்பு தொடரில் இரு முறை 90 ரன்களுக்கும் மேல் எடுத்த தன்னை குறி வைப்பது இவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. தோனியை மறைமுகமாக விமர்சிக்க துவங்கினார். உதாரணமாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், கடைசி பந்தில் சிக்சர் அடித்து தோனி வெற்றி தேடித் தந்தார். அப்போது பேசிய காம்பிர், "48வது ஓவரிலேயே வென்றிருக்க வேண்டும். 50வது ஓவர் வரை சென்றிருக்க தேவையில்லை,''என்றார். இது, இருவர் இடையே இருந்த மோதலை அம்பலப்படுத்தியது.
கேப்டன் ஆசை:
இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 8 டெஸ்ட் தோல்வியை சந்தித்தது, தோனியின் தலைமைப் பதவி குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இதனை பயன்படுத்தி இவரிடம் இருந்து கேப்டன் பதவியை தட்டிச் செல்லும் ஆசை சில வீரர்களின் மனதில் பிறந்துள்ளது. இவரது சுழற்சி முறை வீரர்கள் தேர்வு, டெஸ்டில் தற்காப்பு பாணியிலான பீல்டிங் வியூகம், தாமதமாக பந்துவீசி தடையை சந்திப்பதை விமர்சிக்கின்றனர். வேறு ஒருவரிடம் கேப்டன் பதவியை தர வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.
தற்போதைய முத்தரப்பு தொடரில் பேட்டிங்கில் சோபித்த போதும், கேப்டனாக தோனி பிரகாசிக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடந்த போட்டியில் மீண்டும் தாமதமாக பந்துவீசிய பிரச்னையில் சிக்கினார். இதனால் ஒரு போட்டிக்கு தடை விதிக்கப்பட்ட இவர், இலங்கைக்கு எதிரான இன்றைய முக்கிய போட்டியில் பங்கேற்க முடியாமல் போய் விட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடந்த போட்டியில் நான்கு வேகங்களுடன் களமிறங்கிய நிலையில், ஒவர்களை விரைவாக முடிக்கும் பொருட்டு சுழற்பந்துவீச்சாளரான ரவிந்திர ஜடேஜாவை பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், இவருக்கு ஒரு ஓவர் கூட தோனி கொடுக்கவில்லை.
புதிய தந்திரம்:
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்காக தான் சுழற்சி முறை என்ற இவரது கருத்தை யாரும் ஏற்கவில்லை. "டாப் ஆர்டரில்' உள்ள மூன்று வீரர்களுக்கு மட்டுமே சுழற்சி முறை பொருந்தும் என்பது தனக்கு பிடித்தமான ரோகித் சர்மா, ரெய்னாவை அணியில் வைத்திருக்க அரங்கேற்றும் தந்திரம் என கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் பெரிதாக சோபிக்காத நிலையிலும், தொடர்ந்து வாய்ப்பு பெறுகின்றனர். அதே நேரத்தில் மற்றொரு இளம் வீரரான மனோஜ் திவாரி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த கையோடு ஆஸ்திரேலியாவுக்கு வந்தார். அவருக்கு வாய்ப்பு கொடுக்க மறுக்கிறார்.
இது குறித்து முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கூறுகையில்,""சுழற்சி முறை சரியா அல்லது சிறந்த 11 வீரர்கள் அடங்கிய அணியை களமிறக்குவதா என்பது பற்றி இந்திய அணி விரைவில் முடிவு செய்ய வேண்டும். வீண் சர்ச்சைகளை தவிர்த்து, வெற்றிக்கான வழியை கண்டறிய வேண்டும்,'' என்றார். தோனி பாக்ஸ்...
------------
முட்டாள்தனமானது
சுழற்சி முறை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கருத்து.
பிஷன் சிங் பேடி: வீரர்கள் நல்ல "பார்மில்' இருக்கும் போது தான் சுழற்சி முறையை கையாள்வர். இந்திய வீரர்கள் யாருமே "பார்மில்' இல்லாத நிலையில், சுழற்சி முறையை பின்பற்றுவதில் நியாயமில்லை.
வெங்சர்க்கார்: சுழற்சி முறை நல்லது தான். இதனை கண்டிப்பாக பின்பற்றக் கூடாது. வீரர்களுக்கு ஓய்வு தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். வெற்றி தான் முக்கியம்.
மனிந்தர் சிங்: சச்சின் அல்லது சேவக்கை நீக்க முடியாது. எனவே சுழற்சி முறையை தோனி திணிக்கிறார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. தொடர்ந்து வெற்றி பெறும் போது தான் சுழற்சி முறை சரியாக இருக்கும். தற்போது அமல்படுத்துவது முட்டாள்தனமானது.
சந்து போர்டே: சுழற்சி முறை 3 சீனியர் வீரர்களுக்கு மட்டும் தான் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மற்ற வீரர்களுக்கும் இது பொருந்த வேண்டும்.

Post a Comment

0 Comments