122 தொலைத்தொடர்பு உரிமங்கள் ரத்து

 2008-ம் ஆண்டுக்குப் பிறகு முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா காலத்தில் வழங்கப்பட்ட 122 தொலைத்தொடர்பு உரிமங்களை உச்சநீதிமன்றம் இன்று ரத்து செய்தது. மேலும் 2ஜி ஊழலில் ப.சிதம்பரத்தின் பங்கு குறித்து விசாரிப்பதா, வேண்டாமா என்பதை சிபிஐ நீதிமன்றமே தீர்மானிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


2ஜி ஊழலில் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏகே.கங்குலி, ஜி.எஸ்.சிங்வி ஆகியோர் இன்று தீர்ப்பளித்தனர்.


2ஜி ஊழலில் ப.சிதம்பரத்தை சேர்ப்பது குறித்து சிபிஐ நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்று வருகிறது. 
ராசா காலத்தில் வழங்கப்பட்ட 122 தொலைத்தொடர்பு உரிமங்களை ரத்து செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ப.சிதம்பரத்தை 2ஜி ஊழல் வழக்கில் சேர்ப்பது குறித்து சிபிஐ நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என்று தெரிவித்தனர்.


சிபிஐ விசாரணையை கண்காணிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கத் தேவையில்லை என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.


மேலும் 2ஜி உரிமங்கள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக புதிதாக விதிமுறைகளை உருவாக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


தொலைத்தொடர்பு உரிமங்களை ரத்து செய்யும் உச்சநீதிமன்றத் தீர்ப்பால் யுனிடெக் வயர்லெஸ், டாடா, ஏர்செல் மற்றும் ஐடியா உள்ளிட்ட பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments