ஐ.டி., துறையை விட, அதிக சம்பளம்

ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும், மத்திய அரசு பணிகளுக்கு, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிப்பது, குறைந்து வருகிறது. ஐ.டி., துறையை விட, அதிக சம்பளம் தரும் இப்பணிகளுக்கு, மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க வேண்டும் என, ஸ்டாப் செலக்ஷன் கமிஷன், தென் மண்டல இயக்குனர் பாக்யதேவி ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் "தினமலருக்கு' அளித்த பேட்டி: மத்திய அரசுக்குத் தேவையான, 60 சதவீத பணியாளர்களை, ஸ்டாப் செலக்ஷன் கமிஷனும், 40 சதவீத பணியாளர்களை, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனும் தேர்வு செய்கிறது. பெண்களுக்கு, விண்ணப்பக் கட்டணம் கிடையாது. 18 வயது முதல் 25 வயது வரையிலான எவரும், விண்ணப்பிக்கலாம். முன்னாள் ராணுவத்தினருக்கு, வயது வரம்பு இல்லை. தமிழகத்தின் முக்கிய நகரங்களில், தேர்வு மையங்கள் உள்ளன. ஆனாலும், தென் மாநிலங்களை பொருத்தவரையில், இப்பணிகளுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், விண்ணப்பிப்பது குறைவாகவே உள்ளது. கடினமாக உழைத்தால், இத்தேர்வுகளில் எளிதில், வெற்றி பெற்று விடலாம். மத்திய பணியாளர் தேர்வாணையத்தில், 2010முதல் நிறைய மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இனி, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஹால் டிக்கெட்டையும், ஆன்லைனில் பெற முடியும். தேர்வு முடிவுகள் வெளியான பின், பெற்ற மதிப்பெண்கள், ஓ.எம்.ஆர். அட்டையின் நகல் உட்பட அனைத்து விவரங்களையும் காணலாம். அனைத்தும் வெளிப்படையாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடத்தப்படவுள்ள தேர்வுகளின் பட்டியல் தேதிவாரியாக வெப்சைட்டில் உள்ளது.

தென் மண்டலத்தில், 90 சதவீத விண்ணப்பங்கள், ஆந்திராவில் இருந்து வருகின்றன. 10 சதவீத விண்ணப்பங்கள் மட்டுமே, தமிழகத்தில் இருந்து வருகின்றன. 2010-11ல், இந்தியா முழுவதும் 40.85 லட்சம் பேர், விண்ணப்பித்தனர். இதில், தென் மாநிலங்களைச் சேர்ந்த, 2.51 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். அதற்கு முந்தைய ஆண்டிலும், இதே போன்ற விகிதாச்சாரம் தான். ஆகவே, தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், அனைத்து மத்திய அரசு பணிகளுக்கும் விண்ணப்பிக்க முன்வர வேண்டும்.

இன்ஜி.,பணியாளர்கள் அதிகரிப்பு: ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும், பணிகளுக்கு கடந்த ஆண்டு, விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில், 500 பேர் இன்ஜி., பட்டதாரிகள். டி.சி.எஸ்.,இன்போசிஸ் உள்ளிட்ட பிரபல ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரிவோரும், இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது அதிகரித்து வருகிறது. இரவு முழுவதும் கண் விழித்து பணிபுரிந்தால் கிடைக்கும் சம்பளத்தை, வாரம் இருநாள் விடுமுறையுடன், அரசுப் பணியில் சம்பாதித்து விடலாம். எங்களுக்கு நல்ல திறமையான பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். டேடா என்ட்ரி துறையிலும், நிறைய பணியாளர்கள் தேவை. ஐ.டி., மட்டுமே முடிவு அல்ல. தவறான எண்ணத்தால் நல்ல அரசு பணி வாய்ப்புகளை, தமிழக மாணவர்கள் தவற விடுகின்றனர். இவ்வாறு, பாக்யாதேவி கூறினார்.

courtesy.dinamalar

No comments: