புத்தாண்டு தலைவர்கள் வாழ்த்து

by 7:15 PM 0 comments


  இந்தப் புத்தாண்டில் புதிய சாதனைகள் பூத்துக் குலுங்க வேண்டும், அதற்காக உழைக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. 

நாளை மலரும் ஆங்கிலப் புத்தாண்டு 2012 குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு:

புதுப்பொலிவுடன் புத்தாண்டு புலர்கின்ற இந்த இனிய நன்னாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்க மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக நிகழ வேண்டும் என்ற உன்னத, உயரிய லட்சியத்தை அடைய ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை உங்கள் சகோதரியின் தலைமையிலான தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகின்றது. இந்த வேளை தமிழக மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட மாநிலத்தில் புதிய சாதனைப் பூக்கள் பூத்துக்குலுங்கி எங்கும் மணம் பரப்பிட உளப்பூர்வமாக உழைக்கின்ற தருமணம் இது.

சீர்மிகு திட்டங்கள் ஏற்றம் பெறவும், ஏழ்மை நிலை அகன்றிடவும் தமிழக அரசால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலத் திட்டங்களின் பயன்களை உரியவர் அனைவரும் பெற்றிட வேண்டும் என்பதே இந்த இனிய புத்தாண்டில் எனது பேரவா.

ஒன்றுபட்டு நிற்போம்! ஓயாது உழைப்போம்! எந்த நிலையிலும், எந்த வகையிலும் தமிழகத்தின் உரிமைகளை ஒரு போதும் விட்டுத் தர மாட்டோம்! உறுதி கொண்ட உள்ளத்துடன் பொற்காலத் தமிழகத்தை புதிதாய் மீண்டும் படைப்போம்!

இந்த இனிய புத்தாண்டில் எனது அன்புக்குரிய தமிழக மக்கள் அனைவரும் அனைத்து வளங்களும், நலன்களும் பெற்ற மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்," என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி:-
 
தமிழக மக்கள் வளம்பெற- தமிழகம் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டிட அடுக்கடுக்கான திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி வெற்றி கண்ட மனநிறைவுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்த வேளையில் ஆட்சி மாற்றம் கண்ட மக்களுக்கு ஏமாற்றத்தையே பரிசாக தந்து 2011-ஆம் ஆண்டு மறைகிறது.
 
அண்ணா நூற்றாண்டு நூலகம் இடமாற்றம், தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைப் பறித்திடும் ஆணை போன்றவை தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்கள் விடுத்த கண்டனக் கணைகளே இன்றைய மாநில அரசின் நிர்வாகத்தை பறைசாற்றுகின்றன.
 
ஏழை, எளியோர் நலம் பெற கழக ஆட்சி தொடங்கிய திட்டங்கள் துலங்கிட வேண்டும், மின்சாரத் தட்டுப்பாடு நீங்கி, தொழில் வளம் பெருகி, வேலை வாய்ப்புகள் குவிந்து, தமிழகம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்திட வேண்டும், அண்டை மாநில நட்புறவுகள் சிறந்து, தமிழக மக்களின் வேதனைகள் நீங்கிட வேண்டும் என்ற நோக்கில் எங்கும் புதிய சிந்தனை மலர்கள் பூத்துக் குலுங்கட்டும்- தொடங்கும் 2012 ஆங்கிலப் புத்தாண்டில் எனக்கூறி, தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
 
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்:-
 
நாட்டில் எவர் ஒருவரும் உணவுக்கு ஏங்குகிற நிலை போக்க சோனியாகாந்தி வழி காட்டுதலில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டி ருக்கிற ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உணவுக்கு உத்தரவாதம் தருகிற சட்டம் இப்புத்தாண்டில் ஒரு புதிய மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டும்.
 
பொதுப் பிரச்சினையில் நாட்டின் நலனுக்காக அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுகிற நிலை உருவாக வேண்டும்.
 
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:-
 
2011-ம் ஆண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தியது. பொருட்களின் விலை உயர்வு என்று மத்திய அரசும் போட்டி போட்டுக்கொண்டு உயர்த்தின. தமிழ் நாட்டு மக்கள் இந்த ஆண்டின் இறுதியில் மிகத் தீவிர புயலும் தமிழ் நாட்டையும், புதுச்சேரியையும் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
 
2012-ஆம் ஆண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு புதிய வாழ்வு தென்றலாக வரவேண்டும். கடந்த கால கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து எதிர்காலம் மக்களுக்கு அமைதியையும், முன் னேற்றத்தையும் தரவேண்டும் என்றும், போனது புயலாக இருக்கட்டும், வருவது தென்றலாக இருக்கட்டும்.
 
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
 
புத்துணர்வு அளிக்கும் ஆண்டாக 2012- ஆம் ஆண்டு அமையட்டும். இதற்காக நாம் மேற்கொண்ட புதிய தீர்மானங்களை நிறைவேற்றி முடிக்க சபதம் ஏற்போம்.
 
நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும் ஒவ்வொருவரும் கனவு காண வேண்டும். அந்தக் கனவு நனவாக்க வாழ்க்கையில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை நழுவ விட்டு விடக்கூடாது. அந்த வகையில் நம் கனவை நிறைவேற்ற புதிதாக போராடுவோம் என்று சபதமேற்கொண்டு செயல்பட கற்றுக் கொள்வோம்.
 
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-
 
கணக்கற்ற சோதனைகள் தமிழகத்தையும், தமிழ்க் குலத்தையும் சூழ்ந்திருக்கும் காலகட்டத்தில் புதிய ஆண்டு மலர்கிறது. கொடுந்துயரில் தவிக்கும் ஈழத் தமிழினம், தென்தமிழ்நாட்டின் வாழ் வாதாரமான முல்லைப் பெரியாறு அணைக்கு கேடு செய்ய முனையும் கேரளம், சிங்களக் கடற்படையால் நாளும் தாக்கப்படும் தமிழக மீனவர்கள் எனப் பல்வேறு துன்ப இடர்களைத் தமிழகம் சந்திக்க நேர்ந்துள்ள நிலையில் முல்லைப் பெரியாறு உரிமை காக்க கட்சி, சாதி, மத எல்லைகள் கடந்து தமிழகம் கொந்தளித்து எழுந்துள்ள நிலைமை எதிர் காலத்தைப் பற்றிய நம் பிக்கை ஊட்டுகிறது.
 
சமுதாயத்தின் அனைத்துப் பகுதிகளையும் செல்லரிக்கச் செய்வதற்கு ஊழலும் மது அரக்கனும் காரணங்களாகும். இத்தீமைகளிலிருந்து தமிழகம் விடுபட்டு உன்னத நிலை பெறவும் துயர இருளில் தவிக்கும் ஈழததமிழ் மக்கள் விடியலைக் கண்டு தமிழீழம் மலரவும் ஊழலற்ற அரசியல் தமிழகத்தில் வெற்றி காணவும் 2012-ஆம் ஆண்டு பாதை அமைக்கட்டும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:-
 
2011-ம் ஆண்டில் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகத் தளங்களில் பல நெருக்கடிகளையும் சவால்களையும் சந்தித்து வருடத்தின் கடைசி நாட்களில் 'தானே' புயலின் தாக்குதலையும் சமாளித்து 2012-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். கடந்த காலப்படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு 2012-ம் ஆண்டினைத் திட்டமிட்டு தமிழினத்தின் தலைநிமிர்வுக்கான ஆண்டாக அமைத்துக் கொள் ளும் வகையில் இப்புத் தாண் டினை வரவேற்போம்.
 
ஈழத் தமிழர்களின் துயர்களைத் துடைப்பதற்கும், முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலைத் தீர்ப்பதற்கும், சாதிக்கொடுமை உள்ளிட்ட பிற வன்கொடுமைகளிலிருந்து தலித் மற்றும் அனைத்து விளிம்புநிலை மக்களைப் பாதுகாப்பதற்கும் ஏற்றதொரு ஆண்டாக 2012-ம் ஆண்டு அமைந்திட தமிழர்கள் யாவரும் ஒருங்கிணைந்து நிற்போம் எனவும் இந்தப் புத்தாண்டில் உறுதியேற்போம்.
 
எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன்:-
 
தமிழர்களுக்கு, துன்பச் சூழ்நிலையில் புத்தாண்டு பிறக்கிறது. மக்கள் சக்தியினால் துன்பங்கள் துடைக்கப்பட வேண்டும். இந்த வலிமை மிக்க மக்கள் சக்தி புத்தாண்டில் வெற்றி பெற வேண்டும்.
 
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:-
 
ஏழை, எளிய மக்கள் நிம்மதியாக வாழ மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வரும் புத்தாண்டில் கூடங்குளம், முல்லைப் பெரியாறு என்று தமிழகத்தை அச்சுறுத்தும் பிரச்சினைகள் சுமூகமாக தீர வேண்டும். நம்நாட்டு மக்கள் அனைவரும், நாம் அனைவரும் இந்தியர்கள் என்னும் உணர்வோடு எதிர் வாரும் காலங்களில் ஒன்று பட்டு அத்தனை சவால்களையும் சந்தித்து வெற்றி காண்போம்.
 
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:-
 
வருகின்ற புத்தாண்டு (2012) அனைவருக்கும் அனைத்தும் தரும், அன்பு பொழியும் ஆண்டாகவும், மனிதனின் பகுத்தறிவு ஆக்கத்திற்கே தவிர, அழிவுக்கல்ல என்பதை வரலாற்றில் பதிய வைக்கும் சாதனை பொங்கும் ஆண்டாக மனிதநேயம் மலர அடையட்டும்.
 
கார்த்தி சிதம்பரம்:- மலருகின்ற 2012-ஆம் ஆண்டு நம் அனைவரது வாழ்விலும் இனிமையும் மகிழ்ச்சியும் பொங்கிடவும், அனைத்து நலன்களும், வளங்களும் பெற்று நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்டி, பயங்கரவாத வன்முறையை வேரறுத்து, நம் நாட்டின் இறையாண்மையை பாதுகாத்து, மனிதநேயம், மத நல்லிணக்கம், சகோதரத்துவம் வளர்ப்போம்.
 
முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர், அம்பேத்கார் முன்னணி கழக தமிழ் மாநில பொதுச்செயலாளர் திண்டிவனம் ஸ்ரீராமலு, தேசிய அம்பேத்கார் மக்கள் கழக ஒருங்கிணைப்பாளர் அ.ஞான சேகரன், சிறுபான்மை சமூக புரட்சி இயக்க தலைவர் லியாகத் அலிகான், தமிழ் திருநாடு நிலம், வீடு, மனை தரகர்கள் நலச்சங்க மாநில தலைவர் விருகை கண்ணன், தமிழ் மக்கள் முன்னணி தலைவர் குமரி அருண் ஆகியோரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments: