மலையாள நடிகைகளை 'பேக்கப்' செய்து அனுப்பிய பாரதிராஜா!

முல்லைப் பெரியாறு விவகாரம் எதிரொலி-படத்தை நிறுத்தினார் பாரதிராஜா-மலையாள நடிகைகளுக்குப் பேக்கப்!

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக போராட்டக் களத்தில் குதித்துள்ள இயக்குநர் பாரதிராஜா, பிரமாண்டமான தொடக்க விழாவுடன் தான் தொடங்கிய கொடி வீரனும் அன்னக்கொடியும் படத்தின் ஷூட்டிங்கை நிறுத்தி வைத்துள்ளார். இப்படத்தின் நாயகிகள் இருவரும் மலையாளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த முடிவாம்.

சமீபத்தில் தனது சொநத ஊரான தேன அல்லிநகரத்திற்கு தமிழ்த் திரையுலக பிதாமகர்களையும், பத்திரிக்கையாளர்களையும் அழைத்துச் சென்று, தான் நேசிக்கும் மக்கள் முன்பு கொடிவீரனும் அன்னக்கொடியும் படப்பிடிப்பை தொடங்கினார் பாரதிராஜா.

பிரமாண்டமாக நடந்த அந்த விழாவுக்குப் பின்னர் படப்பிடிப்பையும் தொடங்கினார். இப்படத்தில் இயக்குநர் அமீர் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக இனியா மற்றும் கார்த்திகா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களில் இனியா வாகை சூட வா படத்தின் மூலம் அறிமுகமானவர். கார்த்திகா, நடிகை ராதாவின் மகள், கோ படத்தின் மூலம் ஹிட் நாயகியானவர். இருவருமே மலையாளிகள்.

தற்போது முல்லைப் பெரியாறு விவகாரம் வெடித்துள்ளது. இந்தப் போராட்டத்தில் பல்வேறு துறையினரும் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். அந்த வரிசையில் பாரதிராஜாவும் களத்தில் குதித்துள்ளார். இன்று சென்னையில் நடைபெரும் அறப் போராட்டத்தில் அவர் பங்கேற்கிறார். மேலும், தேனி, கம்பத்தில் நடைபெறவுள்ள திரைப்பட இயக்குநர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

இந்த நிலையில் தனது கொடிவீரனும், அன்னக்கொடியும் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளாராம் பாரதிராஜா. மேலும், தனது இரு மலையாள நாயகிகளையும் பிறகு கூப்பிடுகிறேன் என்று கூறி அனுப்பி வைத்து விட்டாராம்.

முல்லைப் பெரியாறு விவகாரம் பெரிதாக வெடித்துள்ள நிலையில், தானே மலையாள நடிகைகளை வைத்து படத்தை தொடர்ந்து இயக்கினால் சரியாக இருக்காது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளாராம் பாரதிராஜா.

இது நிரந்தர முடிவா அல்லது பிரச்சினை ஆறிய பிறகு மீண்டும் இனியா, கார்த்திகாவை வைத்துப் படத்தைத் தொடருவாரா என்பது குறித்துத் தெரியவில்லை.

Post a Comment

0 Comments