மோனோ ரயில் விவகாரம் சசிகலா வெளியேற்றத்துக்குக் காரணமா?

போயஸ் கார்டனிலிருந்து சசிகலா வெளியேற்றப்பட்டதற்கான காரணங்களுள் ஒன்றான மோனோ ரயில் திட்டத்துக்கான டெண்டர் மீண்டும் கோரப்படுகிறது.

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மோனோ ரயில் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதற்கான டெண்டர் முதலில் கோரப்பட்ட போது, சசிகலாவுக்கு நெருக்கமான சிங்கப்பூர் உறவினர் ஒருவர் அதைப் பெற முயற்சித்ததாகக் கூறப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதாவால் சசிகலா வெளியேற்றப்பட்டதற்கு இந்த டெண்டர் விவகாரமும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், இப்போது புதிதாக மீண்டும் மோனோ ரயில் டெண்டர் விட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் கட்டமாக 111 கிலோ மீட்டர் தூரத்துக்கு 4 வழிகளில் மோனோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது. திட்ட மதிப்பு ரூ16 ஆயிரத்து 600 கோடி ஆகும்.

மோனோ ரயில் திட்டம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படுகிறது. முதல் கட்டமாக அமைக்கப்படும் 4 வழித்தடங்களில் ஒன்றை 2014-ம் ஆண்டுக்குள் நிறைவு செய்து அதில் மோனோ ரயில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே மோனோ ரெயில் திட்டத்துக்கான முதல் கட்ட பணிகள் தொடங்கி விட்டன. மோனோ ரெயில் திட்டத்தை அனுபவம் உள்ள நிறுவனங்கள் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. மோனோ ரெயில் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தேர்ந்து எடுக்கப்படும் நிறுவனம் உலக அளவில் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று அரசு வரையறுத்துள்ளது.

ஏற்கனவே விடப்பட்ட டெண்டர்கள் திருப்தி அளிக்கவில்லை என்பதால் , உலகிலேயே சிறந்த நிறுவனத்தின் ஒப்பந்தப் புள்ளியைப் பெறும் வகையில் புதிதாக விரைவில் டெண்டர் அறிவிக்கப்பட உள்ளது.

Post a Comment

0 Comments