மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, வேலூர் ஆகிய அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைப்பது என்று அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் முதல் சட்டமன்றத் கூட்டத் தொடரில் ஆளுனர் உரையில் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சட்ட முன்வடிவு சட்டசபையில் தாக்கல் செய்து கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பியது. கவர்னர் ஒப்புதல் பெற்றபின் வரைவு மசோதா செப்டம்பர் மாதம் கெஜட்டில் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமிப்பது பற்றி ஆய்வுப் பணி தொடங்கப்பட்டன. இதன் முதல் கட்டமாக சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக உள்ள மன்னர் ஜவகரை நீக்கி அவருக்கு பதிலாக பல்கலைக்கழகத்தில் உள்ள மூத்த பேராசிரியர் ஒருவரை துணைவேந்தராக தற்காலிகமாக நியமனம் செய்து 5 அண்ணா பல்கலைக்கழகங்களையும் ஒன்றாக இணைக்கும் வரை அவர் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவார் என்று தெரிகிறது.
5 அண்ணா பல்கலைக்கழகங்களையும் இணைத்து பின்பு முழு நேர துணைவேந்தரை தேர்ந்து எடுப்பதற்காக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்த குழு பரிந்துரையின் பேரில் ஒருவரை ஆளுனர், துணைவேந்தராக நியமிப்பார் என்று அண்ணா பல்கலைக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது 5 அண்ணா தொழில் நுட்ப பல்கலைக் கழக அசையும் சொத்து, அசையா சொத்து, மாணவர்கள், ஊழியர்கள் எண்ணிக்கை, வெளிநாட்டுடன் செய்துள்ள ஒப்பந்தம் குறித்த விவரங்கள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த பணி நிறைவடைந்தவுடன் 5 அண்ணா தொழிநுட்ப பல்கலைக்கழகங்களுடன் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழக அரசு ஏற்கனவே 5 அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கும் என்ஜினீயரிங் கல்லூரிகளை சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தேர்வுகளை நடத்துவது என்று முடிவு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments