தட்கல் முறையில் பாஸ்போர்ட் வாக்-இன்' முறை


"தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெறுவதில் ஏற்படும் குறைகளை களைய "வாக்-இன்' முறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் திருச்சி மற்றும் தஞ்சை இரு இடங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.இதன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வரும் பொதுமக்களின் சேவையை மேலும் அதிகரிக்கவும், அவர்களுக்கு ஏற்படும் குறைபாடுகளை தீர்க்கும் வகைகளில் புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.அந்த வகையில் தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெறுவதில் ஏற்படும் குறைகளை களைய, "வாக்-இன்' முறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தட்கல் மற்றும் போலீஸ் விசாரணை அறிக்கையை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொண்டு முன்பதிவு இல்லாமல் எந்த நாட்களிலும் வரலாம். இந்த வசதி வரும் 11ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மற்ற ஆவணங்களுடன் விண்ணப்ப எண்ணை பிரதி எடுத்துக்கொண்டு அலுவலக நாளில் காலை 9.15 மணி முதல் மதியம் ஒரு மணிக்குள் தட்கல் விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு வரவேண்டும்.


                         தஞ்சை பாஸ்போர்ட் சேவை மையத்தில் விண்ணப்பிக்கும் போலீஸ் விசாரணை அறிக்கை விண்ணப்பதாரர்களும் முன்பதிவு இல்லாமல் நேரடியாக 11ம் தேதிக்கு பின்னர் எந்த அலுவலக நாளிலும் வரலாம்.பாஸ்போர்ட் சேவை மையத்தில் ஏதேனும் விண்ணப்பங்கள் ஆவண குறைபாட்டுக்கு நிராகரிக்கப்பட்டிருந்தாலும் அதை சரிசெய்து கொண்டு மீண்டும் முன்பதிவு இல்லாமலேயே மதியம் ஒரு மணிக்குள் எந்த அலுவலக நாட்களிலும் பொதுமக்கள் வரலாம்.நிராகரிக்கப்பட்ட விண்ணப்பத்தில் அலுவலரின் கையொப்பம் இருக்க வேண்டும். மேலும் அதற்கான காரணத்தையும் அலுவலரால் எழுதப்பெற்று கொண்டு செல்லவேண்டும்.அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு:அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட விண்ணப்பதாரர்கள் தங்களின் சாதாரண விண்ணப்பங்களை தஞ்சை பாஸ்போர்ட் சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.ஆனால், இந்த மாவட்ட பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க திருச்சி பாஸ்போர்ட் சேவை மையத்திலும் விண்ணப்பிக்கலாம் .ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை:www.passportindia.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.திருச்சி மரக்கடையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் முன்னாள் ராணுவத்தினரின் இணையதள சேவை மையம் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்காக தொடர்ந்து இயங்கி வருகிறது. இங்கு ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.30 மட்டும் செலுத்தி தங்களின் விண்ணப்பங்களை பொதுமக்கள் பதிவு செய்து கொள்ளலாம்.இதைபோன்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்காக புதிதாக ஒரு இணையதள சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.இங்கு ஒரு ஆன்லைன் விண்ணப்பத்திற்கு ரூ.50 மட்டும் செலுத்தி இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.இதைதவிர பாஸ்போர்ட் சேவை மையங்களில் பொதுமக்கள் தங்களின் விண்ணப்பங்களை முன்பதிவு செய்வதற்காகவும், பதிவு செய்த விண்ணப்பத்தின் நிலையை தெரிந்துகொள்வதற்காகவும் கம்ப்யூட்டர் வைக்கப்பட்டுள்ளது.எங்கு முன்பதிவு செய்தாலும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்துக்கு வரும் நாளில் மற்ற ஆவணங்களுடன், தங்களின் விண்ணப்பபதிவு எண்ணின் பிரதியையும் அவசியம் எடுத்து வரவேண்டும்.சாதாரண விண்ணப்பத்துக்கு ரூ.ஆயிரம் (16 வயது வரை ரூ.600). தட்கல் விண்ணப்பத்திற்கு ரூ.2 ஆயிரத்து 500 (குழந்தைகளுக்கு ரூ.2 ஆயிரத்து 100), போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் பெற ரூ.500ம் கட்டணமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.பாஸ்போர்ட்டுக்காக இதற்கு மேல் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. விபரம் அறியாதவர்களிடம் விரைவில் பாஸ்பார்ட் வாங்கி தருகிறோம் என்று புரோக்கர்கள் யாராவது கூடுதல் கட்டணம் கேட்டால் அவர்களை பற்றி பாஸ்போர்ட் அலுவலரிடமோ, மாநகர போலீஸ் கமிஷனரிடமோ புகார் தெரிவிக்கலாம்.இமிகிரேஷன் அனுமதி தேவையில்லாத பாஸ்போர்ட் பெற 1,000 ரூபாய் செலுத்தி புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.புதிதாக விண்ணப்பம் செய்வோர் இமிகிரேஷன் அனுமதி தேவைப்படாத பாஸ்போர்ட் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதா? என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். இதுதொடர்பான இதர விபரங்கள் பெற https://poechenai.in என்ற இணைய தளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.சாதாரண விண்ணப்பங்களுக்கு போலீஸ் விசாரணை முடிந்த பின்னர் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.போலீஸார் விசாரணையின்போது குறைபாடு களையோ, பிரச்னைகளையோ மக்கள் சந்திக்க நேர்ந்தால் சம்பந்தப்பட்ட எஸ்.பி.,யிடம் இதுபற்றி புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு பாலமுருகன் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments