உலகம் தோன்றிய காலத்திலிருந்து மனித நாகரிக வளர்ச்சியிலும், கொள்கை கோட்பாடுகளிலும் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. அரசாங்கத்தின் சட்டங்களாலும், சமய அமைப்புகளின் கட்டுப்பாடுகளாலும் மக்களிடம் திணிக்கப்படும் கருத்துகளை ஏற்பதும், நிராகரிப்பதும் காலத்தின் கையில்தான் இருக்கிறது.
அமெரிக்காவும், சோவியத் யூனியனும் இரண்டு பெரும் எதிர்துருவங்களாக இயங்கிக் கொண்டிருந்தன. இந்த நாடுகளின் பனிப்போரைக் கண்டு, "எந்த நேரத்தில் என்ன நேருமோ?' என்று உலக நாடுகள் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் சோவியத் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் அந்நாடு சிதறுண்டு போனது; இப்போது ரஷியா மட்டுமே மிஞ்சியது. இதனால் அது தன் பழைய கம்பீரத்தை இழந்துவிட்டது.
இப்போது முதலாளித்துவ கொள்கையும், தனியுடைமைக் கோட்பாடும் கொடிகட்டிப் பறந்த அமெரிக்காவில் அவற்றை எதிர்த்துக் குரல் எழும்பியுள்ளது. அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியும், அதன் ஆதிக்கமும் எங்கும் கேள்விக்குறிகளை எழுப்பிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் அடுத்தகட்டமாக மக்களின் எழுச்சியும் போராட்ட வடிவத்தை உண்டாக்கியிருப்பது பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.
கடந்த செப்டம்பர் 17, 2011 அன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள "வால் ஸ்ட்ரீட்' என்ற இடத்தில் தொடங்கிய போராட்டம் உலகின் பல நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இப்போது அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
"வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்' என்ற இந்த இயக்கத்தினர் நியூயார்க்கின் டைம் சதுக்கத்தில் கூடி பெரும் நிறுவனங்களுக்கு எதிராகவும், முதலாளித்துவக் கொள்கைகளுக்கு எதிராகவும், நிதி நிறுவனங்களின் சரிவுகளுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். போராட்டக் களத்தில் இருப்போர் தங்கள் முழக்கங்களையும் விரிவுபடுத்தியுள்ளனர்.
போராட்டத்தின் வீச்சு அதிகரிக்கவே, அடக்குமுறை நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன. அமெரிக்காவின் நியூயார்க், சியாட்டில், லாஸ் ஏஞ்சல்ஸ், டல்லாஸ் மற்றும் பாஸ்டன் ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாகத் திரண்டுள்ளனர். அமெரிக்க, ஐரோப்பிய காவல்துறைகளின் எதிர்நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் நடைபெற்றது போலவே இங்கிலாந்து தலைநகர் லண்டனிலும் பெரிய நிறுவனங்களை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டத்தில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே கலந்துகொண்டார் என்று செய்திகள் கூறுகின்றன.
இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள "ரோம் சதுக்க'த்தில் கூடிய லட்சக்கணக்கான மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர்.
ஜெர்மனியில் ஃபிராங்பர்ட் நகரில் ஐரோப்பிய மத்திய வங்கிக்கு எதிரில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர். "முதலாளித்துவத்தின் மேலாதிக்கம் ஒழிக' என்றும், "ஜனநாயகத்தை விற்காதீர்கள்' என்றும் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கித் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டிலும் போராட்டம் நடைபெற்றுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம், கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான மானியங்களைக் குறைத்தது போன்றவற்றை எதிர்த்துப் போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடைபெற்ற போராட்டத்தில் ஐரோப்பிய யூனியனுக்கு எதிராகவும், சர்வதேச செலாவணி நிதியத்துக்கு எதிராகவும் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இந்த அமைப்புகளின் கொள்கைகளே கிரீஸ், அயர்லாந்து போன்ற நாடுகள் பொருளாதார மந்தநிலையில் சிக்கிக் கொண்டதற்குக் காரணமாகும் என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
"வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்' என்ற இந்த இயக்கத்தினரின் அழைப்பை ஏற்று 82 நாடுகளில் உள்ள 951 நகரங்களில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இதை ஒரு சாதாரண நிகழ்ச்சியாக எடுத்துக்கொள்ள முடியாது. பல ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் கதிகலங்கிப் போயுள்ளன.
முதலாளித்துவ நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் சுமையை சாதாரண மக்களின் தலையில் சுமத்திவிட்டு, கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தப்பித்துக் கொள்ளுவதற்கு எதிராக மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். பெரும் முதலாளிகள் மற்றும் நிதி மூலதனத்தின் இரக்கமற்ற சுரண்டலுக்கு எதிராக மக்கள் வெடித்துக் கிளம்பியுள்ளனர்.
உலகமயம், தனியார்மயம், தாராள மயம் என நவீன பொருளாதாரக் கொள்கை என்னும் மாய மானைத் தேடி ஓடும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு இது ஒரு பாடமாகும்.
மாபெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளே பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக்கொண்டு வெளியேற முடியாமல் தவிக்கும்போது இந்தியா போன்ற வளர்முக நாடுகள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டாமா?
1991 ஜுலை 24 அன்று அன்றைய நிதியமைச்சரும், இன்றைய பிரதமருமான டாக்டர் மன்மோகன் சிங் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்; இடதுசாரிகளின் எதிர்ப்பைப் பற்றிக் கவலைப்படவில்லை.
ஓய்வூதிய நிதியைத் தனியாரிடம் தாரை வார்த்திட அரசு மேற்கொண்ட முயற்சிகள், காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள், அன்னிய நாட்டு வங்கிகளுக்கு அதிக அளவிலான பங்கை அனுமதிக்கக்கூடிய வங்கிச் சீர்திருத்தங்கள் முதலானவற்றை முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் அதற்கு வெளியிலிருந்து ஆதரவளித்த இடதுசாரிக் கட்சிகள் தடுத்து நிறுத்தின.
அவ்வாறு அவற்றைத் தடுத்து நிறுத்தியிருக்காவிட்டால் அண்மையில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியாலும், பொருளாதார மந்தத்தாலும் இந்தியாவும் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் என்பதை பொருளாதார வல்லுநர்கள் அறிவர். ஆனால், மத்தியில் ஆளும் அரசு இதை மறைத்துவிட்டு, யாவும் தங்கள் திறமையால் சமாளித்துவிட்டதுபோல பேசி வருகின்றனர்.
ஆட்சியாளர்கள் நவீன பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்கி 20 ஆண்டுகளாகி விட்டன; கிடைத்த பயன் என்ன? இப்போது இருவேறுபட்ட இந்தியா உருவாகியுள்ளது. ஒரு சிலர் உலக அளவில் ஓங்கி உயரவும், பெரும்பான்மையான மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாடவும் நாட்டு மக்களிடையே மலைக்கும், மடுவுக்குமான ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியுள்ளது. இதை சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) 2010-ல் செய்த ஆய்வில் ஒத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மக்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வு கடுமையாக அதிகரித்திருக்கிறது என்பதைப் புள்ளிவிவரங்களுடன் தெரிவித்துள்ளது.
ஆட்சியாளர்கள் நவீன பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்கி 20 ஆண்டுகளாகி விட்டன; கிடைத்த பயன் என்ன? இப்போது இருவேறுபட்ட இந்தியா உருவாகியுள்ளது. ஒரு சிலர் உலக அளவில் ஓங்கி உயரவும், பெரும்பான்மையான மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாடவும் நாட்டு மக்களிடையே மலைக்கும், மடுவுக்குமான ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியுள்ளது. இதை சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) 2010-ல் செய்த ஆய்வில் ஒத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மக்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வு கடுமையாக அதிகரித்திருக்கிறது என்பதைப் புள்ளிவிவரங்களுடன் தெரிவித்துள்ளது.
அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் கொழிப்பதற்காக பாரம்பரிய விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்துவதும், தலித் மற்றும் பழங்குடி மக்களின் வாழ்விடங்களிலிருந்து அவர்களை விரட்டுவதும், கடலோர மக்களாகிய மீனவர்களைக் கடல் எல்லைகளிலிருந்து துரத்துவதும் தாராளமயமாக்கலின் அடையாளங்களாகும்.
"மாற்றம்' என்ற முழக்கத்துடன் மாபெரும் வெற்றிபெற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மேல், அந்நாட்டு மக்கள் வைத்திருந்த நம்பிக்கைகள் பொய்த்துப் போய்விட்டன.
உலகின் வல்லரசு நாடாக விளங்கிவரும் அமெரிக்கா இப்போது கடன்பட்டுக் கலங்கி நிற்கிறது. பெரும் போராட்டத்துக்குப் பிறகு அந்நாட்டின் கடன் பெறும் உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் வேலைவாய்ப்புகள் குறைந்து, தொழில் துறையில் மந்தநிலை நிலவுகிறது. இது அடுத்த பொருளாதார நெருக்கடிக்கு அறிகுறி என்றும் கணிக்கப்படுகிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அந்நாட்டின் கடன் பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி அமெரிக்காவின் கடன் 15 லட்சம் கோடி டாலரை நெருங்கி வருகிறது. இதில் 4.5 லட்சம் கோடி வெளிநாடுகளிலிருந்து பெற்றதாகும். கடன் கொடுத்த நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடம்; அந்நாட்டுக்கு அமெரிக்கா கொடுக்க வேண்டிய கடன் 1.15 லட்சம் கோடி டாலர். இந்தியா கொடுத்துள்ள கடன் 4,100 கோடி டாலர். அதாவது ரூ. 1.83 லட்சம் கோடியுடன் 14-ம் இடத்தில் உள்ளது.
""அமெரிக்க ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி இந்தியப் பொருளாதார வளர்ச்சி இலக்கைப் பாதித்திருப்பது உண்மைதான்'' என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும், திட்டக்குழுத் துணைத்தலைவர் மான்டேக்சிங் அலுவாலியாவும் அடிக்கடி கூறி வருகின்றனர். ஆனால், அதிலிருந்து மீள்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இந்திய குடிமக்கள் அனைவருக்கும் கேள்வி கேட்க உரிமை உண்டு அல்லவா!
""அமெரிக்க ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி இந்தியப் பொருளாதார வளர்ச்சி இலக்கைப் பாதித்திருப்பது உண்மைதான்'' என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும், திட்டக்குழுத் துணைத்தலைவர் மான்டேக்சிங் அலுவாலியாவும் அடிக்கடி கூறி வருகின்றனர். ஆனால், அதிலிருந்து மீள்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இந்திய குடிமக்கள் அனைவருக்கும் கேள்வி கேட்க உரிமை உண்டு அல்லவா!
""அரசாங்கம் என்பது மக்கள் சேவைக்காக அமைக்கப்படுகிறது; ஆனால், அது அமைக்கப்பட்டவுடன் மக்களை எதிரிகளாக நினைக்கத் தொடங்கிவிடுகிறது' என்றார் அட்கின்சன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நாட்டு மக்களுக்கு எதிராகச் செயல்படுவது தேசத் துரோகம் இல்லையா? அமெரிக்க ஐரோப்பிய வல்லரசு நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சிகளை இந்தியா ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்வது நல்லது.
source.உதயை மு. வீரையன்-dinamani
0 Comments