புதிய என்ஜீனியரிங் கல்லூரிகள் வேண்டாம்- மாநில அரசுகள் கோரிக்கை

20 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் பொறியியல் கல்வியில் படிப்பது என்பது பெரும் கனவாகவே இருந்து வந்தது. நிறைய மார்க் எடுக்க வேண்டும், நுழைவுத் தேர்வு எழுத வேண்டும், மிகக் குறைந்த அளவிலான கல்லூரிகளே, அதிலும் பெரும்பாலும் அரசுக் கல்லூரிகளே இருந்த நிலையில் அப்போது தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் உள்ளன. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது.விட்டால் தெருவுக்குத் தெரு பொறியியல் கல்லூரிகளைத் திறந்து விடுவார்கள் போல. அந்த அளவுக்கு புற்றீசல் போல தனியார் சுய நிதிக் கல்லூரிகளின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் வியாபித்து விட்டது. இதனால் பொறியியல் படிப்பு என்பது சாதாரண பி.காம், பி.ஏ. படிப்பு போல மாறி விட்டது. யாரைப் பார்த்தாலும் பிஇ படிப்பவராக இன்று காணப்படுகிறார். 

தேவைக்கும் அதிகமாகவே தற்போது கல்லூரிகள் இருப்பதாலும், கல்லூரிகள் அதிகரித்து, மாணவர்கள் குறைந்து விட்டதால், நிரம்பாமல் போகும் சீட்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது.

இந்த நிலையில் புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி தர வேண்டாம் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலுக்கு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.இந்தியா முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பொறியியல் கல்லூரிகளில் இன்று லட்சக்கணக்கான மாணவர்கள் இடங்கள் உள்ளன. ஆனால் அதற்கேற்ற அளவில் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான கல்லூரிகளில் சீட்கள் முழுமையாக நிரம்புவதில்லை. 

இதையடுத்தே புதிய கல்லூரிகள் வேண்டாம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து கவுன்சிலின் தலைவர் மந்தா கூறுகையில், தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, ஹரியானா, சட்டிஸ்கர் மாநில அரசுகள் இதுதொடர்பாக எங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளன. அதில், இனிமேல் தங்களது மாநிலங்களில் புதிய கல்லூரிகளுக்கு அனுமதி தர வேண்டாம் என்று அவர்கள் கோரியுள்ளனர் என்றார் அவர்.அதேபோல மகாராஷ்டிரா மாநிலமும் கூட கோரிக்கை வைத்துள்ளதாம். 2003-04ல் இந்தியாவில் 4.01 லட்சம் பொறியியல் மாணவர்கள் படிப்பை முடித்து வெளியேறினர். இவர்களில் 35 சதவீதம் பேர் கம்ப்யூட்டர் என்ஜீனியர்கள் ஆவர். 2004-05ல் 1,355 பொறியியல் கல்லூரிகளில் 4.6 லட்சம் பேர் சேர்ந்தனர். இவர்களில் 31 சதவீதம் பேர் கம்ப்யூட்டர் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள்.

2005-06ல் இது 5.2 லட்சமாக உயர்ந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தொழில்நுட்பக் கல்லூரிகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.இந்தியாவில் தற்போது 3,393 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 14.85 லட்சம் மாணவர் இடங்கள் உள்ளன. இதில் மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா, கர்நாடக, உ.பி.யில் மட்டும் 70 சதவீத கல்லூரிகள் உள்ளன. இந்த மாநிலங்களில் இந்த ஆண்டு 2 லட்சம் மாணவர் இடங்கள் நிரம்பாமல் காலியாக இருந்தன.

பெரும்பாலும் கிராமப்புறங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில்தான் அதிக அளவிலான காலி சீட்கள் இருக்கின்றனவாம். பெருநகரங்களையொட்டியுள்ள கல்லூரிகளில் நிலைமை பரவாயில்லை. மேலும், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் ஆகிய பிரிவுகளுக்கு மாணவர்களிடையே இன்னும் நல்ல கிராக்கி உள்ளதாக மந்தா கூறுகிறார்.

Post a Comment

0 Comments