"குவாசிகிரிஸ்டல்' கண்டுபிடிப்புக்கு நோபல்

"குவாசிகிரிஸ்டல்' எனப்படும் படிகம் போன்ற வேதியியில் கட்டமைப்பைக் கண்டுபிடித்த இஸ்ரேலிய விஞ்ஞானி டேனியல் ஷெட்மனுக்கு இந்த ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
1982-ம் ஆண்டில் ஷெட்மன் இதைக் கண்டறிந்தார். அவரது கண்டுபிடிப்பு, திண்மங்கள் தொடர்பான வேதியியலாளர்களின் பார்வையை முற்றிலும் மாற்றியது என்று நோபல் பரிசுக் குழு குறிப்பிட்டுள்ளது.

இப்படியொரு கட்டமைப்பு இருப்பது சாத்தியமில்லை என்று அதற்கு முன்பு நம்பப்பட்டு வந்தது. படிகங்களில் உள்ள அணுக்கள் சீரான சாயலில் அடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது விஞ்ஞானிகள் கருத்தாக இருந்தது. அந்த நம்பிக்கையை புத்திசாலித்தனமாகத் தகர்த்தார் ஷெட்மன்.

சீரற்ற சாயலிலும் அணுக்களை இட்டு நிரப்ப முடியும் என்று அவர் கணித்தார். அலுமினியம் - மாங்கனீஸ் கலவையை ஆய்வு செய்ததன் மூலம் அவரால் இந்த முடிவுக்கு வர முடிந்தது. அதற்கான ஆதாரங்களையும் காட்டினார். ஆனாலும் அந்தக் காலகட்டத்தில் ஷெட்மனுக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. ஆராய்ச்சிக் குழுவில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்.

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு ஷெட்மனின் கருத்தை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டனர். தங்களது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யவும் ஒப்புக் கொண்டனர். அதன் பிறகு "குவாசிகிரிஸ்டலை' ஆய்வகங்களிலேயே தயாரிக்க முடிந்தது. சவர பிளேடுகள் கண் அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படும் ஊசிகள் போன்ற எஃகு உபகரணங்கள் தயாரிக்கவும் இந்த ஆராய்ச்சி பயன்பட்டது.

இஸ்ரேலில் 1941-ம் ஆண்டு பிறந்த ஷெட்மன், ஹைஃபா நகரிலுள்ள தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி (இயந்திரப் பொறியியல்) பட்டம் பெற்றார். அதன் பிறகு எம்.எஸ்சி., பி.எச்டி, ஆகிய படிப்புகளையும் முடித்தார். ஹைஃபா பல்கலைக்கழகத்திலேயே இப்போதும் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பத்தாண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் அரசின் இயற்பியலுக்கான உயரிய விருது ஷெட்மனுக்கு வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments