டெல்லியில் பயங்கரம்-உயர் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு

டெல்லி உயர்நீதிமன்ற வாயிலில் ப்ரீப்கேஸில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 11 பேர் பலியாயினர். 76க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

டெல்லி உயர்நீதிமன்றத்தின் 5வது நுழைவாயில் அருகே 07/09/11 காலை 10.15 மணிக்கு பலத்த சப்தத்துடன் குண்டுவெடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வக்கீல்களும், கோர்ட்டுக்கு வந்தவர்களும் அங்கிருந்து ஓடினர்.

இதையடுத்து போலீஸாரும், தீயணைப்புப் படையினரும், ஆம்புலன்ஸ்களும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

'ப்ரீப்கேஸ்' குண்டு:

வெடிகுண்டு ப்ரீப்கேஸ் ஒன்றில் குண்டு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அமோனியம் நைட்ரேட் மற்றும் பிளாஸ்டிக் வெடி மருந்துகள், இரும்புத் துகள்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. குண்டு வெடித்த இடத்தில் பெரிய பள்ளமே ஏற்பட்டுவிட்டது.

இந்த சம்பவத்தில் 11 பேர் பலியாகிவிட்டனர். 76க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ராம் மனோகர் லோகியா மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த குண்டு வெடிப்பு வழக்கை டெல்லி போலீசாரிடமிருந்து மாற்றி, மத்திய புலனாய்வு அமைப்பான National Investigation Agency வசம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது.

உள்துறை அமைச்சகம் தீவிர ஆலோசனை:

குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் டெல்லி காவல்துறையுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி யு. கே. பன்சால் கூறுகையில், இன்று காலை நீதிமன்றத்திற்குள் செல்வதற்காக நுழைவுச் சீட்டு வாங்க சுமார் 200 பேர் வரிசையாக நின்றிருந்தனர். அப்போது தான் அந்த குண்டு வெடித்துள்ளது. இதில் 4 பேர் பலியாகியுள்ளனர் என்றார்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

2-வது சம்பவம்

கடந்த மே மாதம் 25ம் தேதியும் டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் சிறிய அளவிலான குண்டுவெடிப்பு நடந்தது நினைவிருக்கலாம்.

குண்டுவெடிப்பு எதிரொலி-ராஜ்யசபா ஒத்திவைப்பு:

இந்த நிலையில் குண்டுவெடிப்பு குறித்து ராஜ்யசபாவில் இன்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இன்று முற்பகல் 11 மணியளவில் ராஜ்யசபா கூடியதும் அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி, டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்துத் தெரிவித்தார். அவர் கூறுகையில் டெல்லி உயர்நீமன்றம் அருகே இன்று குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. இதில் சிலர் பலியாகியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சம்பவம் கண்டனத்துக்குரியது.

இதுகுறித்து மேல் விவரங்கள் கிடைத்ததும் அதை அரசு உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கும். பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவித்தார்.

காயமடைந்தவர்களை சந்தித்து ராகுல் ஆறுதல்:

டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெளியே குண்டுவெடித்ததில் காயமடைந்தவர்கள் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த மருத்துவமனைக்கு வந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

குண்டுவெடிப்பு: அத்வானி அதிர்ச்சி:

குண்டுவெடிப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார். இது குறித்து மக்களவையில் பேசிய அத்வானி கூறியதாவது,

நாட்டின் தலைநகரில் நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.

பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ. 4 லட்சம்: மாநில அரசு

இந்த சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.

இது தவிர குண்டுவெடிப்பில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது

Post a Comment

0 Comments