எந்திரன் மற்றும் நில அபகரிப்பால் ரூ 10 கோடி

'எந்திரன்' படம் மூலமும், நில அபகரிப்பாலும் தனக்கு ரூ.10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் சினிமா தயாரிப்பாளர் சக்தி சிதம்பரம் நேற்று பரபரப்பான புகார் கொடுத்தார்.

செவ்வாய்க்கிழமை அவர் இரண்டு விதமான புகார் மனுக்களை கமிஷனரிடம் கொடுத்தார்.

அதன் விவரம்:

நான், தமிழ் திரையுலகில் 20 வருடங்களாக இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் தொழில் செய்து வருகிறேன். ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' திரைப்படத்தின் செங்கல்பட்டு ஏரியா விநியோக உரிமையை சன் பிக்சர்ஸ் தலைமை அதிகாரி சக்சேனாவிடம் இருந்து ரூ.4 கோடிக்கு விலைபேசி வாங்கினேன்.

ரூ.4 கோடி பணத்தையும் கொடுத்துவிட்டேன். ஆனால் 8 சினிமா தியேட்டர்களில் அந்த படத்தை திரையிட வேண்டும். ஆனால் அதிகம் வசூலாகும் ஒரு தியேட்டரை எனக்கு கொடுக்காமல், 7 தியேட்டர்கள் மட்டுமே கொடுத்தனர். இதனால் எனக்கு ரூ.1 கோடியே 60 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.

இதுபற்றி கேட்டபோது, சக்சேனாவும், அவரது உதவியாளர் அய்யப்பனும் என்னை மிரட்டினார்கள். இதனால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து எனக்கு ஏற்பட்ட இழப்பீட்டு தொகையான ரூ.1 கோடியே 60 லட்சத்தை மீட்டுத்தரும்படி வேண்டுகிறேன்.

நிலமோசடி

அதே எந்திரன் படம் விநியோக உரிமையை செங்கல்பட்டு ஏரியாவில் நான் எடுத்துள்ளதை அறிந்து, தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவும், அவரது அண்ணன் மகன் தினகரன் என்பவரும் அந்த படத்தை வெளியிடுவதில் என்னோடு கூட்டணி சேர்ந்துகொள்வதாக கூறினார்கள். அதற்காக ரூ.2 கோடி தருவதாகவும் சொன்னார்கள்.

அதற்கான ஒப்பந்தம் போடுவதாக வெற்றுத்தாளில் என்னிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டனர். செங்கல்பட்டு ஏரியாவில் எந்திரன் படம் விநியோகத்தையும், அதன் கணக்கு வழக்குகளையும் தினகரனே கவனித்துக்கொண்டார்.

பின்னர் திருவள்ளூரில் எனது மாப்பிள்ளைக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை தினகரன் வாங்கிக்கொண்டார். ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை, ரூ.55 லட்சம் மதிப்புள்ள நிலம் என்று குறைவாக மதிப்பிட்டு பத்திரப்பதிவு செய்துகொண்டார்கள்.

எந்திரன் படத்தில் வசூலான பணத்தையும் எனக்கு தரவில்லை. நிலம் வாங்கியதற்கான பணத்தையும் எனக்கு தரவில்லை. இதுபற்றி கேட்டபோது, வி.எஸ்.பாபுவும், அவரது அண்ணன் மகன் தினகரனும் ஒரு அறையில் அடைத்துவைத்து மிரட்டினார்கள். அடியாட்களை ஏவிவிட்டு என்னை அடித்து உதைத்தனர். இதுதொடர்பாகவும் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்."

இவ்வாறு சக்தி சிதம்பரம் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

Post a Comment

0 Comments