6 ஆயிரம் லேப்-டாப்கள் கொள்முதல்

by 11:19 PM 0 comments
பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு இலவச "லேப்-டாப்' வழங்கும் திட்டத்துக்காக, முதல் கட்டமாக 6 ஆயிரம் லேப்-டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

ஒரு "லேப்-டாப்'பின் விலை ரூ.14 ஆயிரம் என்ற அளவில் கொள்முதல் செய்வதற்கு மறு ஒப்பந்தப்புள்ளிகளைக் கோருவதற்கு எல்காட் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக "லேப்-டாப்' வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கும், அரசு கலை-அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இலவச "லேப்-டாப்'கள் வழங்கப்பட உள்ளன. நடப்பு நிதியாண்டில் மட்டும் 9.12 லட்சம் "லேப்-டாப்'கள் அளிக்கப்படுகின்றன. அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் தேதி இதற்கான விழா நடைபெறுகிறது.
"லேப்-டாப்'கள் கொள்முதல்: "லேப்-டாப்'களை கொள்முதல் செய்யும் பணியை தமிழக அரசு நிறுவனமான "எல்காட்' மேற்கொண்டுள்ளது. கடந்த மாதம் முடிவு செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளின் அடிப்படையில் எய்சர் மற்றும் ஹெச்பி ஆகிய நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன.

இந்த நிறுவனங்கள் நல்ல தரமிக்க "லேப்-டாப்'களை கொள்முதல் செய்து கொடுத்தாலும் அதன் விலை அதிகமாக உள்ளதாக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த நிறுவனங்கள் ஒரு "லேப்-டாப்'பை 16 ஆயிரத்து 383 ரூபாய் என்ற அளவில் கொள்முதல் செய்தன.
ஆனால், அரசுத் தரப்போ ரூ.16 ஆயிரத்துக்கு அளிக்க வேண்டும் எனக் கூறியது. ஒரு "லேப்-டாப்'புக்கு ரூ.383 என்பதை குறைக்க கணினி நிறுவனங்கள் ஒப்புக் கொள்ளவில்லை.
கணினி நிறுவனங்கள் குறிப்பிட்ட அதே விலைக்கு வாங்கினால் அரசுக்கு கூடுதலாக பல கோடி ரூபாய் செலவாகும். இதற்கு நிதித் துறை ஒப்புக் கொள்ளவில்லை.
இதையடுத்து, திட்டத் தொடக்க விழாவுக்காக குறைந்த எண்ணிக்கையிலான "லேப்-டாப்'களை கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, கணினி நிறுவனங்கள் குறிப்பிட்ட விலைக்கே முதல் கட்டமாக 6 ஆயிரம் லேப்-டாப்களை கொள்முதல் செய்துள்ளது தமிழக அரசு.

மறு ஒப்பந்தப் புள்ளிகள் கோரல்:
இந்த நிலையில், 9.1 லட்சம் "லேப்-டாப்'களை மலிவு விலையில் பெறுவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, ஒரு "லேப்-டாப்'பை ரூ.14 ஆயிரத்துக்கும் குறைவாகப் பெற நடவடிக்கை எடுத்துள்ளது.
திட்டத் தொடக்க விழாவுக்காக, 6 ஆயிரம் "லேப்-டாப்'கள் கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ளன.

அவற்றின் விநியோகம் முடிவதற்குள்ளேயே, ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் மலிவு விலையில் "லேப்-டாப்'கள் கொள்முதல் செய்யப்பட்டு விடும் என அரசுத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மறு ஒப்பந்தப்புள்ளிகளை அளிப்பதற்கு கடைசி தேதி, செப்டம்பர் 21-ம் தேதியாகும்.

மற்ற இலவச திட்டங்கள்

அண்ணாவின் பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் தேதி, வேறு சில இலவசத் திட்டங்களையும் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.
ஆடு-கறவை மாடு வழங்கும் திட்டத்துக்காக, அவற்றை கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.

வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சந்தைகளில் ஆடு, கறவை மாடுகளை வாங்க கால்நடைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திட்டத்தின் தொடக்க தினத்தில் ஆயிரத்து 500 ஆடுகள், கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளன.

கறவை மாடுகளைப் பொறுத்தவரை அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகத்திலும் அவற்றை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேபோன்று, இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டத்துக்காக அவற்றை கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. முதல் நிதியாண்டில் இவை 25 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது.

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments: