ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட பூகம்பம், சுனாமி ஆகியவற்றின் தாக்குதலை யாரும் மறந்திருக்க முடியாது. இந்த இயற்கை பேரழிவின்போது ஜப்பான் மக்களுக்கு ரூ.1247 கோடி நிதியுதவி அளித்தது தைவான். அந்த பெரிய உதவி ஜப்பானியர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜப்பானைச் சேர்ந்த ஆறு தடகள வீரர்கள் கடல் வழியாக 153 கி.மீ. பயணித்து தைவானை அடைந்துள்ளனர். தைவான் கடற்கரையை அடைந்தபோது, "நன்றி தைவான்' என்ற வாசகம் அடங்கிய கொடியை உயர்த்தியபடியே சென்றனர். சில நாட்களுக்கு முன்பு இரண்டு சிவப்பு அலகு நாரைகளை நட்பு ரீதியாக தைவானுக்கு பரிசளித்தது ஜப்பான்
.###########################
அமெரிக்கவாழ் இந்தியர்கள் மூவருக்கு அறிவியல் கண்டுபிடிப்புக்கான உயரிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்கவாழ் இந்தியர்களான சீனிவாச எஸ்.ஆர்.வரதன், ராகேஷ் அகர்வால், பி.ஜெயந்த் பாலிகா ஆகிய மூவருக்கும் அந்நாட்டின் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான உயரிய விருது வழங்குவதாக அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார். இவர்களில் சீனிவாச எஸ்.ஆர்.வரதன் என்பவருக்கு அறிவியலுக்கான விருதும், ராகேஷ் அகர்வால், பி.ஜெயந்த் பாலிகா ஆகியோருக்கு தொழில்நுட்பத்துக்கான விருதும் வழங்கப்படுவதாக வெள்ளை மாளிகையின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த உயரிய விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பேரில் 3 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
###########################################
சௌதியிலிருந்து 50 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
உரிய ஆவணங்கள், அனுமதிக்கப்பட்ட காலத்துக்கும் மேலாக தங்கியிருந்த சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள், சௌதி அரேபிய அரசின் பொது மன்னிப்பு திட்டத்தின் மூலம் தாயகம் திரும்பினர்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஏராளமானவர்கள் கட்டுமானப் பணிகளுக்காகவும் வீடுகளில் பணி செய்வது போன்ற பணிகளுக்காகவும் அரபு நாடுகளுக்கு செல்கின்றனர். சிலர் உரிய ஆவணங்கள் இன்றி அங்கு பணி செய்வதை சௌதி அரேபிய அரசுக்கு தெரிய வந்தது. அதே போன்று விசா காலம் முடிந்தும் பலர் அங்கேயே தங்கியிருப்பதும் தெரியவந்தது. ஹஜ் பயணம் செல்பவர்களும் அரபு நாடுகளில் தங்கிவிடுவதாகவும் கூறப்படுகிறது. பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை இழந்தவர்களும் இதில் அடங்குவர். இதையடுத்து அந்நாட்டு சட்டப்படி அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. தொழிலாளர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தை சௌதி அரேபிய அரசு அறிவித்தது. இதையடுத்து, அவர்கள் தாயகம் திரும்ப அனுமதி வழங்கப்பட்டது. ரியாத் மற்றும் ஜெட்டாவிலுள்ள இந்திய தூதரகங்கள் மூலம் அவர்களுக்கு எமர்ஜென்சி பாஸ்போர்ட் போன்ற பயண ஆவணங்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
செப்டம்பர் மாதம் 15 ம் தேதிக்குள் 50,000 இந்திய தொழிலாளர்கள் நாடு திரும்பியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். இந்திய தூதரகமும், சௌதி அரேபியாவின் பல்வேறு அமைப்புகளும் இணைந்து செயல்பட்டன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியர்களுக்கு உதவும் வகையில் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளதாக தூதரக அதிகாரி டி.சி. பாருபால் கூறினார். இணைய தள வசதிகள் கொண்ட இம்மையத்தில், அவர்கல் ஆலோசனைகள், புகார்களை பதிவு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார். இந்திய அரசின் முன்னோடி திட்டம் என்று அதிகாரிகள் கூறினர். பல்வேறு நலத்திட்டங்களை அவர்கள் இந்திய தூதரகங்களுக்கு நேரில் சென்று பயன்படுத்தி கொள்ளலாம் என்றார் அவர்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
0 Comments