பரமக்குடியில் கலவரம்: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி

by 7:56 PM 0 comments


ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தை அடக்க, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இதில் டி.ஐ.ஜி., டி.எஸ்.பி. உள்பட ஏராளமானோர் காயமடைந்தனர். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரக்காரர்களைக் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது.
பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் 54-வது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.இதற்கிடையே, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியனை போலீஸார் கைது செய்ததாக தகவல் பரவியது. இதையடுத்து, அக் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பரமக்குடி ஐந்து சாலை சந்திப்பில் பகல் 12 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அஞ்சலி செலுத்திவிட்டு வந்த வாகனங்களுக்கு வழிவிடுமாறு மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் கேட்டுக் கொண்டனர்.
ஆனால், வாகனங்களுக்கு வழிவிட மறுத்து, அவர்கள் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து, போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களைக் கலைக்கத் தடியடி நடத்தினர். ஆனால், மறியலில் ஈடுபட்டவர்கள் போலீஸாரை நோக்கி கற்களை வீசியபடி தாக்குதல் நடத்தினராம். மேலும், அப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், போலீஸாரின் வாகனங்களையும் அவர்கள் சேதப்படுத்தினராம். கடைகளைச் சூறையாடியதாகக் கூறப்படுகிறது. கல்வீச்சில் போலீஸார் பலர் காயமடைந்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே போலீஸார் கண்ணீர்ப் புகை வீசினர். ஆனால், கலவரக் கும்பல் அதற்கும் கட்டுப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், ரகளையில் ஈடுபட்டவர்கள் அதிகமானோர் இருந்ததால், கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதில் 4 பேர் உயிரிழந்தனர். போலீஸாரின் அதிரடிப்படை வாகனமான வஜ்ரா உள்ளிட்ட 10 வாகனங்களும், 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும், சுகாதாரத் துறை ஆய்வாளர் துணை இயக்குநர் அலுவலகத்துக்குச் சொந்தமான 3 ஆம்புலன்ஸ்கள், 3 ஜீப்புகள், 1 கார் ஆகியவையும் பலத்த சேதமடைந்தன. 4 மணி நேரத்துக்குப் பிறகு கலவரம் கட்டுக்குள் வந்தது.

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments: