கேரளாவின் தலைமைச் செயலகத்திற்குள் யாருக்கும் தெரியாமல் நுழைந்த ஆசாமி ஒருவர், முதலமைச்சர் உம்மன்சாண்டியின் நாற்காலியில் ஜம்மென்று அமர்ந்துகொண்டு அவரது தொலைபேசியை எடுத்து காதில் வைத்தவாறு, “நான் இந்தியப் பிரதமர் பேசுகிறேன்,” என்று யாரிடமோ அளந்துகொண்டிருந்திருக்கிறார்.
அப்போது முதலமைச்சரைக் காண்பதற்காக அமைச்சர்கள் பாபு, ஏ.பி.அனில் குமார் ஆகியோர் அங்கு வந்தனர். முதலமைச்சரின் இருக்கையில் யாரோ அமர்ந்திருந்ததைப் பார்த்து திடுக்கிட்டனர். உடனே போலிசாரை அழைத்துக் கைது செய்து விசாரித்தபோது அந்த ஆசாமி, தலைமைச் செயலகம் அருகே உள்ள வில்லபின்சலா பகுதியைச் சேர்ந்த சாலேஜோஸ் என்றும் அவர் சற்று மனம் நலம் குன்றியவர் என்பதும் தெரிய வந்தது.
இதுபற்றிக் கருத்துரைத்த முதல்வர் உம்மன்சாண்டி, “இது பாதுகாப்பு அதிகாரிகளின் குற்றமல்ல. நான் தான் பாதுகாப்பைத் தளர்த்தும்படி கூறியிருந்தேன். ஏனெனில் மக்களை நான் சந்திப்பதில் இடையூறு வேண்டாம் என்பதற்காக அப்படிக் கூறியிருந்தேன்,” என்றார். இதுபற்றிக் கருத்துரைத்த போலிஸ் உயர் அதிகாரி, அந்த ஆசாமி, பார்வையாளர்களைப்போல் உள்ளே நுழைந்து இந்த நாடகத்தை நிகழ்த்தியுள்ளார். விசாரணையில், அந்த ஆசாமி கடந்த ஆறாண்டு காலமாக மனநோய் சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்துள்ளது என்றும் கூறினார்.
2 Comments