கரூர் காமாட்சி அம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது48). இவர் நேற்று இரவு 8.30 மணியளவில் தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் வீடு புகுந்து விஜயலட்சுமியிடம் இருந்த நகையை பறிக்க முயன்றார். உடனே விஜயலட்சுமி கூச்சல் போட்டு போராடினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் விஜய லட்சுமியை தாக்கி 3 பவுன் நகையை பறித்தார்.
மேலும் அவர் விஜயலட்சுமியை கடித்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் நகையுடன் அந்த வாலிபர் தப்பி ஓடினார். அப்போது மாடி படிக்கட்டில் கால்தவறி அந்த வாலிபர் உருண்டு விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை பிடித்தனர். அந்த வாலிபருடன் வந்த மேலும் 2 பேர் மோட்டார் சைக்கிளுடன் அந்த வீட்டு வாசலில் காத்திருந்தனர். நடந்த சம்பவத்தை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுபற்றி கரூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த வாலிபர் பெயர் சம்பத் (வயது21). திருச்செங்கோட்டில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். படிக்கட்டில் தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டதால் மாணவர் சம்பத் சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பி ஓடிய அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகிறார்கள். என்ஜினீயரிங் மாணவர் வீடு புகுந்து நகை திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments