சிங்கப்பூர் அதிபர் பதவிக்கு இதுவரை இல்லாத அளவுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் இப்போதைய அதிபர் நாதனின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்டாக வேண்டும்.இந் நிலையில் தேர்தலில் போட்டியிட 4 பேர் தகுதி பெற்றுள்ளதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது. இதில் ஒருவருக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்தால், வரும் 27ம் தேதி தேர்தல் நடக்கும். அப்படி ஒரு நிலை வந்தால், 1993ம் ஆண்டுக்குப் பின் சிங்கப்பூரில் நடக்கும் முதல் அதிபர் தேர்தல் இதுவே ஆகும். கடந்த 18 ஆண்டுகளாக அந் நாட்டு அதிபர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது முன்னாள் துணை பிரதமர் டோனி டேன், என்டியுசி இன்கம் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி டேன் கின் லியான், சுவான் ஹப் ஹோல்டிங்ஸ் என்ற கடல்வழிப் போக்குவரத்து நிறுவனத்தின் தலைவர் டேன் செங்க் போக், ஏஐபி கோவட் முதலீட்டு நிறுவனத்தின் ஆசியப் பகுதிக்கான முன்னாள் மண்டல நிர்வாக இயக்குனர் டேன் ஜீ சே ஆகியோர் அதிபர் பதவிக்குப் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக சிங்கப்பூர் அதிபர் தேர்தல் கமிட்டி அறிவித்துள்ளது.தேர்தலில் போட்டியிட முடிவு செய்தால், வரும் 17ம் தேதி இவர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். போட்டி இருந்தால் வரும் 27ம் தேதி தேர்தல் நடக்கும்.இப்போது சிங்கப்பூரில் ஆட்சியில் உள்ளது மக்கள் செயல் கட்சி (People's Action Party). இந்தக் கட்சியின் ஆதரவுடன் தான் டோனி டேன் போட்டியிடுகிறார். இவருக்கு பிரதமர் லீ ஷின் லோங் மற்றும் இப்போதைய அதிபர் நாதன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.1999ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் தமிழரான நாதன் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த 6 ஆண்டுகளுக்குப் பின் நடந்த தேர்தலிலும் போட்டியே இல்லாமல் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். போட்டியில்லாமல் போனதற்கு முக்கிய காரணம், அதிபர் பதவிக்கு சிங்கப்பூர் அரசு நிர்ணயித்த அடிப்படை தகுதிகள் தான்.
சிங்கப்பூர் அரசியல் சட்டப்படி அதிபர் தேர்தல் போட்டியிட குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் உயர் அரசுப் பதவியில் இருந்திருக்க வேண்டும் அல்லது சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் தலைவராகவோ- நிர்வாக இயக்குனராகவோ இருந்திருக்க வேண்டும். அந்த நிறுவனத்தின் மதிப்பு 82 மில்லியன் டாலர் அளவுக்கு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.இந் நிலையில், இந்த முறை அரசு ஆதரவுடன் முன்னாள் துணைப் பிரதமர் போட்டியிட, அவருக்குப் போட்டியாக 3 பேரை எதிர்க் கட்சிகள் களமிறக்கிவிட்டுள்ளதால் தேர்தலில் போட்டி கடுமையாகியுள்ளது.இந்தத் தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சி மீதான மக்களின் கருத்துக் கணிப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சிங்கப்பூரை நீண்டகாலமாக ஆண்டு வரும் மக்கள் செயல் கட்சி கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. ஆனால், இந்தத் தேர்தலில் சுதந்திரத்துக்குப் பின் இதுவரை இல்லாத அளவுக்கு எதிர்க் கட்சிகளிடம் கடும் போட்டியை சந்தித்தது இந்தக் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் அதிபர் தேர்தலிலும் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது.
0 Comments