சிம்பு மீது கொலை மிரட்டல் புகார்.


நடிகர் டி.ராஜேந்தர், அவரது மகன் நடிகர் சிம்பு ஆகியோர் மீது கொலை மிரட்டல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சிம்புவும், டி.ஆரும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திருச்சியை சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் எஸ்.பி.ராமமூர்த்தி சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில், நான் கடந்த 1999-ம் ஆண்டில் டி.ராஜேந்தருக்கு ரூ.59 லட்சம் கடன் கொடுத்தேன். இதில் அவர் எனக்கு ரூ.31 லட்சத்தைத் திருப்பித் தரவில்லை. இதுகுறித்து அவர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். இந்த வழக்கின் விசாரணை அங்கு நடைபெற்று வருகிறது. சமாதானம் பேசுவதற்காக அண்மையில் டி.ராஜேந்தர் என்னை அழைத்தார். நானும் அவரது வீட்டுக்கு சென்றேன். அப்போது அங்கிருந்த டி.ராஜேந்தர், சிலம்பரசன் இருவரும் பணத்தை தர முடியாது எனக் கூறி, எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் சிலம்பரசன் என்னை தாக்கி வீட்டை விட்டு வெளியேத் தள்ளினார். அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே அவர்கள் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

#################################################################

நான் பார்த்த கடவுள் ரஜினி சார்! - அஜீத்

தனது மங்காத்தா படம் வெளிவரும் இந்த தருணத்தில் தொடர்ந்து நாளிதழ்கள், வாரப் பத்திரிகைகளுக்கு பேட்டிகள் கொடுத்து வருகிறார் அஜீத்.

இந்த வாரம் ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டியின் சில பகுதிகள்...

''பாலா, கௌதம் மேனன், விஷ்ணுவர்தன்னு தொடர்ந்து உங்களுக்கு இயக்குநர்களோட மோதல் இருந்துகிட்டே இருக்கே?''

''நான் எப்பவுமே டைமை நம்புறவன். டைம் சரியா இருந்தா, எல்லாமே சரியா நடக்கும். அந்த நேரத்துல சில காரணங்களால் எங்களால் சேர்ந்து வொர்க் பண்ண முடியலை. மற்றபடி எங்களுக்குள் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. மீண்டும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால்... நிச்சயம் நடிப்பேன்!''

''ஏன் ரசிகர் மன்றங்களைக் கலைத்தீர்கள்?''

''இதுதான் காரணம்னு சொல்ல முடியாது. அதை இப்போ போஸ்ட்மார்ட்டம் பண்ண விரும்பலை. நான்தான் பெரிசாப் படிக்கலை. ஆனால், என் ரசிகர்கள் நல்லாப் படிக்கணும்னு விரும்புறேன். படிங்க, வேலைக்குப் போங்க. உங்களுடைய தினசரி வேலைகளைப் பாருங்க. என் படம் நல்லா இருந்தா, தியேட்டரில் வந்து பாருங்க. அது போதும்!''

''ரஜினியும் நீங்களும் நெருங்கிய நண்பர்கள். உடல்நிலை சரி இல்லாமல் இருக்கும் அவரிடம் பேசினீர்களா?''

''கடவுளை யாரும் நேரில் பார்த்தது இல்லை. ஆனால், என் அப்பா, அம்மாவுக்குப் பிறகு, நான் பார்த்த கடவுள் ரஜினி சார்தான். அவர்கிட்ட என்ன பேசினேன்னு வெளில சொல்றது நாகரிகமா இருக்காது. ரஜினி சார் எப்போதும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும்கிறதுதான் என் விருப்பம்!''

''ஆட்சி மாற்றம் பற்றி..?''

''என்னுடைய கடமை... ஓட்டுப் போடுவது. நான் அதை ஒழுங்காச் செய்து வருகிறேன். மக்களின் மனதுக்கு ஏற்ப ஆட்சி மாற்றங்கள் நடக்கிறது ரெகுலரான விஷயம்தானே? நான் ஒரு நடிகனா இருந்துட்டு, என்னு டைய சொந்த அரசியல் கருத்து களை வெளிப்படையாச் சொல்ல முடியாது. அப்புறம் என்னை 'இவங்க ஆள், அவங்க ஆள்’னு முத்திரைகுத்திடு வாங்க!''

-இவ்வாறு கூறியுள்ளார் அஜீத்.

No comments: