செல்போனுக்கு பரிசு விழுந்ததாக கூறி கோடிக்கணக்கில் மோசடி


ஆந்திராவில் உள்ள அனைத்து நிறுவன செல்போன்களுக்கும் மர்ம கும்பல் ஒன்று அடிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்பியது. அதில் நாங்கள் நடத்திய குலுக்கலில் உங்கள் செல்போன் நம்பருக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளது. அதற்கான வரி ரூ.8 ஆயிரத்தை எங்களது வங்கி கணக்கில் செலுத்தினால் உங்களது வங்கி கணக்கில் பரிசு பணத்தை செலுத்தி விடுவோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை உண்மை என நம்பி ஆயிரக்கணக்கானோர் அக்கும்பல் கூறிய வங்கி கணக்கில் ரூ.8 ஆயிரத்தை செலுத்தினர். ஆனால் 3 மாதங்கள் ஆகியும் பரிசு பணம் ரூ.1 கோடி அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மர்ம கும்பலிடம் பணத்தை பறி கொடுத்துள்ளனர். அக்கும்பல் செல்போன் குலுக்கல் பரிசு என்ற பெயரில் ஆந்திராவில் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளது. ஐதராபாத், விசாகபட்டினம் பகுதிகளில்தான் ஏராளமானோர் பணத்தை இழந்துள்ளனர்.

இதுபற்றி ஐதராபாத் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செல்போன்களுக்கு கோடிக்கணக்கில் பரிசு விழுந்ததாக எஸ்.எம்.எஸ். அனுப்பி மோசடியில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.பொதுமக்கள் இந்த மாதிரியான பரிசு குலுக்கலை நம்ப வேண்டாம். செல்போன் பரிசு குலுக்கல் மோசடி கும்பல் மும்பை, டெல்லியில்தான் அதிக அளவில் உள்ளது. அவர்களை பிடிக்க ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். விரைவில் அக்கும்பலை பிடித்து விடுவோம் என்றார்.

No comments: