மிகப்பெரிய கிரிமினல்


இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழரான ராஜ் ராஜரட்ணம் சட்ட விரோதமான வகையில் ஒரு நிறுவனத்தின் உட்தகவல்களை தெரிந்து கொண்டு அதில் முதலீடுகள் செய்ததான குற்றசாட்டில் குற்றவாளி என்று கண்டறியப்பட்டுள்ளார்.
தனியாருக்கு சொந்தமான முதலீடுகள் எனப்படும் ஹெட்ஜ் ஃபண்ட்ஸ் நிறுவனங்களை நடத்தி வரும் கோடீஸ்வரரான ராஜ் ராஜ்ரட்ணம் மீது எட்டு வாரங்கள் நடைபெற்ற விசாரணையின் முடிவில் ஏகமனதாக அவர் குற்றவாளி என்று கூறப்பட்டுள்ளார்.

பல தசாப்தங்களில் அமெரிக்காவில் இடம் பெற்ற மிகப் பெரிய நிதி மோசடி வழக்கு என்று இது கூறப்படுகிறது. நிதி மோசடி மற்றும் சதிச் செயல் செய்ததாக 14 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.ராஜரட்ணம் சட்டவிரோதமான வகையில், நிறுவனங்களில் ரகசியத் தகவல்களை பெற்று அறுபது மில்லியன் டாலர்களுக்கும் மேலாக இலாபம் ஈட்டினார் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டினர்.இந்த வழக்கில் இடைமறிக்கப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் பெருமளவில் சாட்சியங்களாக வைக்கப்பட்டன.

அமெரிக்காவில் சட்ட விரோதமான வகையில் உட்தகவல்களைப் பெற்று அதன் மூலம் இலாபம் ஈட்டும் பெரிய ஒரு வலையமைப்பு தொடர்பாக அமெரிக்க அரசு நடத்திய விசாரணைகளில் ஒரு பகுதியாகவே இந்த வழக்கு இருந்தது.அமெரிக்க அரசின் அப்படியான விசாரணையில் இதுவரை இருபத்தியோரு பேர் தமது குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளனர்.

குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ராஜரட்ணத்துக்கு 15 ½ ஆண்டு முதல் 19 ½ ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கக் கூடும்.அவர் மீதான 14 குற்றச்சாட்டுகளில் ஐந்து சதித்தீட்டம் தீட்டம் தீட்டியது, இதர 9 நிதி மோசடிகள் தொடர்பிலானது.எனினும் அவரது வழக்கறிஞர்கள் இந்தத் தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்யப்படும் என கூறியுள்ளனர்.

கடந்த 2003 முதல் 2009 வரையிலான காலப்பகுதியில் ராஜரட்ணம் பெரும் நிறுவனங்களின் உயர் பதவிகளில் இருப்பவர்களின் மூலம் உட்தகவல்களை பெற்று அதன் மூலம் சட்ட விரோதமான வகையில் 63.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இலாபம் ஈட்டினார் என அரசு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.கூகிள், இண்டெல், ஹில்டன் ஹோட்டல்ஸ் போன்ற பெரு நிறுவனங்கள் இதில் அடங்கும்.பெரு நிறுவனங்களில் உள்ள உயரதிகாரிகளின் ஒரு வலையமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் உட்தகவல்களை பெறும் ஒரு வழியை ராஜரட்ணம் ஏற்படுத்தியிருந்தார் அமெரிக்க அரசின் துணைத் தலைமை வழக்கறிஞர் ஜோனதன் ஸ்ட்ரீட்டர் கூறியுள்ளார்.

No comments: