அதிமுக வேட்பாளருக்காக ஓட்டு கேட்டு வடிவேலு

விஜயகாந்த் உளறி வருகிறார் என்று ஊர் ஊராக பேசி வரும் வடிவேலு நேற்று அவரே உளறிக் கொட்டினார். திமுக வேட்பாளருக்குப் பதில் அதிமுக வேட்பாளரின் பெயரை மாற்றிச் சொன்னதால் திமுகவினர் கோபமடைந்து சத்தம் போட்டனர்.

விஜயகாந்த் குடித்திருக்கிறார், தப்புத் தப்பாக பேசுகிறார், லூஸு என்றெல்லாம் பேசி வருகிறார் வடிவேலு. விஜயகாந்த் வாய் தவறி தப்பாக எதையாவது சொன்னால் உடனே பிடித்துக் கொண்டு குண்டக்க மண்டக்க ரிவிட் அடிக்கிறார்.

இந்த நிலையில் வடிவேலுவே நேற்று உளறினார். நத்தம் கோபால்பட்டியில் நத்தம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் க.விஜயனை ஆதரித்து, நடிகர் வடிவேலு பிரச்சாரம் செய்தார். அப்போது வடிவேலு பேசும்போது, ‘’தி.மு.க.,வை ஆதரித்தால் உங்கள் இல்லங்களில் விளக்கு எரிந்து சுபிட்சம் உண்டாகும்.

எதிரணியினர் பேச்சை கேட்டு நன்றி மறந்தவர்களாக இருக்க வேண்டாம். எனவே, உங்கள் ஓட்டை வி்ஸ்வநாதனுக்குப் போடுங்கள் என்று கூறினார்.

விஸ்வநாதன் அதிமுக வேட்பாளர். விஜயன்தான் திமுக வேட்பாளர். வடிவேலு உளறியதைப் பார்த்த திமுகவினர் ஆவேசமடைந்து குரல் கொடுத்தனர். இதைப் பார்த்து சுதாரித்த வடிவேலு, விஜயனுக்கு வாக்களியுங்கள் என்று கூறி தப்பினார்.

விஜயகாந்த் உளறினால் லூஸு, வடிவேலு உளறினால்...??

No comments: