போர்க் குற்றவாளி' ராஜபக்சேவின் பெயரை நீக்கியது 'டைம்'!!

உலகின் மிகுந்த சக்திவாய்ந்த 100 விவிஐபிகளில் ஒருவராக டைம்ஸ் பத்திரிகையால் பட்டியலிடப்பட்டிருந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பெயர், இப்போது பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

ஐநா அறிக்கையில் ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள் பட்டியலிடப்பட்டிருந்த காரணத்தாலும், டைம்ஸ் பட்டியலில் இடம் பெறுவதற்காக ராஜபக்சே சார்பில் பெருமளவில் ஆன்லைனில் கள்ள ஓட்டுகள் குத்தப்பட்டதாலும் அவரை நீக்கியுள்ளது டைம்.

உலகின் பிரபலமான, செல்வாக்கு மிக்க 100 நபர்களை ஆண்டுதோறும் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்வது டைம் பத்திரிகையின் வழக்கம். இந்தப் பட்டியலில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இவருக்கு நான்காவது இடம் தரப்பட்டிருந்தது. அவருக்கு மொத்தம் 2,38,908 வாக்குகள் பதிவாகியிருந்தன. இவற்றில் 44,428 வாக்குகள் மகிந்தாவுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்தப் பட்டியலிலேயே எதிர்வாக்குகள் அதிகமாகப் பெற்றிருந்தவர் ராஜபக்சே ஒருவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதை சரி செய்வதற்காக தனது அலுவலகத்திலேயே ஒரு குழுவை அமைத்த ராஜபக்சே, அவர்கள் மூலம் ஆன்லைனில் ஏராளமான கள்ள ஓட்டுகளை போட வைத்துள்ளார். இதன்மூலம் கடந்த சில நாட்களுக்கு முன் ஆன்லைன் வாக்கெடுப்பில் 6வது இடத்துக்கு வந்த ராஜபக்சே, நேற்று காலை 4வது இடத்துக்கு முன்னேறினார்.

இதனால் சந்தேகமடைந்த டைம் இதழ் தனது தொழில்நுட்பக் குழு மூலம் ராஜபக்சே தரப்பின் மோசடியை தெரிந்து கொண்டு அவரை பட்டியலை விட்டு தூக்கியுள்ளது.

இந்நிலையில், டைம் இதழின் ஆன்லைன் வாக்குப் பதிவு நேற்று முடிந்தது. இறுதிப் பட்டியல் இன்று இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

அதில் ராஜபக்சே பெயர் இல்லை!!.

இதற்கிடையே, போர்க்குற்றவாளி என உலக நாடுகளால் குற்றம் சாட்டப்பட்டு, சர்வதேச போர்க்குற்ற நீதிமன்ற விசாரணைக்கு காத்திருக்கும் ராஜபக்சே பெயரை செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் சேர்த்ததற்கே டைம் நாளிதழுக்கு உலகமெங்கிலுமிருந்து கண்டனங்கள் குவிந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐநா நிபுணர் குழு அறிக்கையில் ராஜபக்சே அரசு மற்றும் படையினரின் போர்க்குற்றங்கள் வரிசையாக பட்டியலிடப்பட்டிருந்தன. உலகில் அத்தனை மோசமான ரசாயண குண்டுகளையும் பயன்படுத்தி லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றார்கள் என ராஜபக்சே அரசு மீது அழுத்தம் திருத்தமாக ஆதாரங்களுடன் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இறுதி நாட்களில் மட்டும் 40000 தமிழர்கள் வன்னியில் கொல்லப்பட்டதை அந்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

இத்துடன், ஐநாவிடம் அறிவித்த பிறகு இலங்கை ராணுவத்திடம் சரணடைய வந்த தமிழர் தலைவர்களை எரித்துக் கொன்றதற்கான சாட்சியங்களும், புலிகளின் பெண் போராளிகளை கொடூரமாக ராணுவம் சிதைத்ததற்கான ஆதாரங்களையும் சேனல் 4 மற்றும் அல்ஜஸீரா தொலைக்காட்சிகள் அடுத்தடுத்து வெளியிட்ட வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்த வாரம் முழுவதும் சேனல் 4, பார்ப்பவரின் இதயங்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும் இலங்கை ராணுவத்தின் கொடிய செயல்களுக்கு ஆதாரங்களை வெளியிட்டு வருகிறது.

ஐநா நிபுணர் குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும்போது, இலங்கை அதிபர் என்ற பட்டியலிலிருந்தே ராஜபக்சே பெயர் நீக்கப்படுமோ!?.

Post a Comment

1 Comments

Sathya said…
இதிலிருந்தாவது, ராஜ பக்சேவின் மொள்ளமாரிதனத்தையும், இதை பார்த்தும் பார்க்காததை போல உள்ள நமது 'தமிழின தலைவர்'களின் குள்ளநரிதனத்தையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்!