அரசியல் கட்சி ஆரம்பிக்க போகிறார் பாபா ராம்தேவ்


இந்தியாவின் மிகப் பிரபலமான யோகாசனப் பயிற்சி ஆசானான பாபா ராம்தேவ் வரும் ஜூன் மாதம் தான் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கப்போவதாகவும், இந்தக் கட்சி இந்திய நாடாளுமன்றத்துக்கான அடுத்த தேர்தலில் போட்டியிடும் என்றும் அறிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக புதிய சட்டம் ஒன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்று நடந்து வருகின்ற ஆர்ப்பாட்டங்களில் பாபா ராம் தேவ் கலந்து கொண்டிருந்தார்.ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகளை எதிர்த்து நேருக்கு நேர் களம் இறங்கப்போவதாக அவர் சூளுரைத்துள்ளார்.

தன்னுடைய யோகாசன பயிற்சி வகுப்புகளை பல கோடிப் பேர் பார்த்து பின்பற்றுகிறார்கள் என்றும் தன்னுடைய மூலிகை மருந்துகளை உலகெங்கிலும் இருந்து ஏராளமானோர் வாங்கிப் பயன்படுத்துகின்றனர் என்றும் இவர் கூறுகிறார்.வளம் மிக்க நாடான இந்தியாவை அதன் அரசியல்வாதிகள் சுரண்டுகின்றனர் என்று இவர் வாதிடுகின்றார்.தான் அரசியலுக்கு வருவதன் மூலம் இந்திய அரசியலில் புரையோடிப்போயுள்ள ஊழலைக் களைய முடியும் என்று இவர் தெரிவிக்கிறார்.அதேநேரம் ராம்தேவ் போன்றவர்கள் அரசியலுக்கு வருவது இந்தியாவுக்கு ஆபத்தானது என்று இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கம் எச்சரிக்கிறது.

No comments: